அணு சக்தி ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவாரா மன்மோகன் சிங்?
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (19:40 IST)
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், அதில் இரு நாடுகளும் நாளை கையெழுத்திடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் நாளை டெல்லி வருகிறார். அவர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் 123 ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான சந்தேகங்களும், எதிர்ப்புகளும்,, சர்ச்சைகளும் எழுந்த போதெல்லாம் அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடியும்வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும், இறுதி கட்டத்தை எட்டியப் பிறகு அதனை நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதலைப் பெறுவோம் என்று கூறியிருந்தார் (பார்க்க செய்தி)
இந்தியாவிற்கென உருவாக்கப்பட்ட தனித்த கண்காணிப்பு வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்புதல் அளித்துவிட்டது. இந்தியாவிற்கு அணு எரிபொருள், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை வழங்குவதற்கும், அணு தொழில் நுட்ப வணிகத்தில் தடையற்று ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கிடும் விலக்கை (Waiver) அணு சக்தி தொழில் நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளித்துவிட்டது.
இதன்பிறகு, தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 123 ஒப்பந்தத்திற்கு பெருத்த ஆதரவுடன் ஒப்புதலும் வழங்கிவிட்டன. பிரதமர் மன்மோகன் சிங் கூறிய அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிட்டது.
ஆனால், நாடாளுமன்றத்தில் வைத்து அதன் ஒப்புதலை அரசு பெறும் என்று அறிவிப்புத்தான் இதுவரை வரவில்லை. மாறாக, அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இந்தியா வரும்போது 123 ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பயணத்தின்போதே 123 ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு முடித்துக்கொண்டுவரத்தான் பிரதமர் முயன்றார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்ற அவைகள் ஒப்புதல் அளிக்காத நிலையில் அது முடியவில்லை.
காற்றில் பறந்த உறுதிமொழிகள்!
அணு மின் சக்தியை பெருக்கிக்கொள்ளத் தேவையான யுரேனியம் எரிபொருள் நம்மிடம் போதுமான அளவிற்கு இல்லாததால், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு
ஒப்பந்தத்திற்குச் செல்கிறாம் என்று தெரிவித்தப் பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அணு சக்தி கொள்கைக்கும், ஆய்வுகளுக்கும் எந்தவிதத்திலும் தடையாக இருக்காது என்றார்.
நமது நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாம் அணு ஆயதச் சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தம் காலவதியாகிவிடும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் கூறுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்றும், நாம் அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு எந்தத் தடையுமில்லை என்றும் அரசின் சார்பாக எதிர்கட்சிகளுக்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
நமது இறையாண்மையை விட்டுத்தரும் பேச்சிற்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இவையனைத்தும் நாடாளுமன்ற விவாதத்தில் கூறப்பட்டவை. அனைத்தும் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்ததவைதான்.
இந்த நிலையில்தான், என்.எஸ்.ஜி.யின் ஒப்புதலைப் பெற, “அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக இந்தியா கடைபிடித்துவரும் தன்னிச்சையான சுய கட்டுப்பாட்டை (unilateral moratorium) தொடர்ந்து கடைபிடிப்போம்” என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டப் பின்னரே இந்தியா கோரிய விலக்கலை என்.எஸ்.ஜி. அளித்தது. அதாவது அணு ஆயுதம் எதையும் இதற்குமேல் சோதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக இந்தியாவின் சார்பாக உறுதியளிக்கப்பட்டுவிட்டது.
இதுகுறித்து கேளவி எழுப்பப்பட்டபோது மிகச் சாமர்த்தியமாக ஒரு பதிலை அளித்தார் பிரணாப் முகர்ஜி. “இப்போதும் அணு ஆயுத சோதனை நடத்த எந்தத் தடையும் இல்லை, ஆனால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் அவ்வளவுதான்” என்றார். எப்படித் திருப்பினார் பாருங்கள். இதுதான் இவர்களின் சாதுரியத்திற்கு அத்தாட்சி.
இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்ட எதையும் விட்டுத்தர மாட்டோம் என்று வீராவேசமாக பேசிவிட்டு, அதற்கு எதிராக அனைத்து உறுதிகளையும் அளித்துவிட்டு, இப்போது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியதுதான் என்று இந்திய மக்கள் காதில் அழகாக பூ சுற்றிவிட்டார்கள்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தக் காரணத்திற்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அதுவே உறுதியளிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெறப்படும் அணு மின் உலைகளுக்குத் தேவையான எரிபொருளை இறுதிவரை (அதாவது அந்த அணு உலைகளின் ஆயுட்காலம் முழுவதிற்கும்) அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை 123 ஒப்பந்த பேரத்தில் பெற்றுவிட்டதாக மார்தட்டினார்கள்.
ஆனால் அந்த உறுதிமொழி “அரசியல் ரீதியானதுதானே தவிர, சட்டப்பூர்வமானதல்ல” என்று 123 ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய தீர்மான வரைவில் அதிபர் புஷ் கூறியவுடன் அதிர்ச்சியடைந்தது மத்திய அரசு.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியடையவில்லை. அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதிலேயே அவர் குறியாயிருந்தார். அதிபர் புஷ்ஷை தான் சந்திக்கும்போது அதுபற்றி நேரில் விவாதிப்பேன் என்று கூட சொல்லவில்லை. சொல்லாததை செய்யவுமில்லை.
இப்படி எல்லா உறுதிமொழிகளும் காற்றில் பறந்துவிட்ட நிலையில், எப்படி நாடாளுமன்றத்தில் வைத்து ஒப்புதல் பெறமுடியும்? நிச்சயம் முடியாது.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு அளித்த உறுதிமொழி என்னாவது? அது இந்திய மக்களுக்கு அளித்த உறுதிமொழியல்லவா? இந்தியாவின் நலனை, அதன் இறையாண்மை ரீதியான உரிமையை விட்டுத்தந்துவிட்டு ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எப்படி நிறைவேற்ற அனுமதிப்பது?
அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், தனது அரசைக் காப்பாற்றிக்கொள்ள இந்திய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கோரி, அதில் வெற்றியும் பெற்ற பிரதமர் மன்மோகன் சிங், அந்த ஆதரவை நம்பி, இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறலாமே? எதற்காகத் தவிர்க்கப் பார்க்கிறார்?
ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிப்பதால் அதன் உண்மை அனைத்தும் நாட்டு மக்களுக்கு விளங்கிவிடும். அதனை பிரதமரும், காங்கிரஸ் கட்சியும் விரும்பவில்லை. அதனால்தான் தவிர்க்கின்றனர்.
இந்திய மக்களின் சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் நாளை இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது இந்த நாட்டிற்கு காங்கிரஸ் செய்யும் அப்பட்டமான துரோகமாகும். நாடாளுமன்றத்தை தவிர்த்துவிடலாம். ஆனால் தேர்தலைத் தவிர்த்துவிட முடியுமா?