எதிர்கால எரிசக்தி தேவைக்கு சூரிய ஒளி மின் நிலையங்கள்!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:39 IST)
webdunia photo
WD
இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் இருக்கக் கூடிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது மின்சாரத் தட்டுப்பாடுதான். ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அதன் உற்பத்திற்கும் மின்சாரம் என்பது மிக முக்கியமான காரணிகளுள் ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் இயற்கை வளங்கள் மிகவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேவரும் காரணங்களினால் அதை நம்பி உருவாகியுள்ள மின் நிலையங்களின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. நிலக்கரி மூலமாக தயாரிக்கப்படும் மின்சாரம் நமது பெருமளவு மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
தார் பாலைவனம்
நமது நாட்டிலுள்ள தார் (இராஜஸ்தான்) பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவின் ஒரு சிறு பகுதியில் (35,000 சதுர கி.மீ.) கிடைக்கும் சூரிய ஒளி கொண்டு சுமார் 7,00,000 MW க்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி செய்ய முடியும்!
ஆனால், நமது நாட்டில் கிடைக்கும் நிலக்கரி, மின் உற்பத்தி செய்வதற்கான தரமில்லாத காரணத்தினால், நாம் பெருமளவு நிலக்கரியை அயல் நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்து கொண்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றபடி பெட்ரோல், டீசல் கொண்டு மின் உற்பத்தி செய்வதைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அதன் தட்டுப்பாடும், விலையுயர்வும் உங்களுக்கே தெரியும்.
காற்றாலைகளின் மூலமாக மிகவும் சொற்ப அளவிற்குத்தான் நாம் மின் உற்பத்தி செய்கிறோம். அதுவும் மிகச் சில இடங்களிலே இயற்கைக்கு உட்பட்டுதான் (காற்று வீசுவதைப் பொறுத்து) அமைக்க முடியும். ஆதலால் காற்றாலைகளின் மூலம் மின் உற்பத்தி பெருக்கத்தின் சாத்தியக்கூறுகள் குறைவே!
நதி நீரை அணைகளில் தேக்கி வைத்து மின் உற்பத்தி செய்வது ஒரளவிற்கு கைகொடுத்தாலும், பெரும்பாலும் சரியான காலகட்டங்களில் மழை பெய்யாததால் அதை நம்பி சீரான மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது. மற்ற இயற்கைச் சக்திகளைக் கொண்டு இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களின் பங்களிப்பும் நமது நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.
அணு மின் உற்பத்தி ஓரளவிற்கு கைகொடுத்தாலும் தேவைக்கேற்ப இன்னும் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், அதை நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் போடும் சண்டைகளாலும், அதிலிருக்கும் முட்டுக்கட்டைகளையும் வைத்து அத்திட்டங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சூரிய ஒளி மின் நிலையங்கள்!
சரி... சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களை பற்றி பார்ப்போம்!
1839ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு இயற்பியல் மேதை அ.எ. பெக்யூரல் (A.E. Becquerel) என்பவர் தான் இன்றைய நவீன சூரிய ஒளி சக்தி மின் நிலையங்கள் உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை (Photovoltaic effect) கண்டறிந்தவர்.
ஆரம்ப காலந்தொட்டே சூரிய ஒளி சக்தியை கொண்டு வெந்நீர் தயாரிக்க, வீடுகளை குளிர்விக்க, காற்றோட்டமாக்க, தண்ணீர் சுத்தப்படுத்த, சமையலில் உணவு தயாரிக்க என பல வகைகளில் உபயோகத்தில் இருந்தாலும், உலக நாடுகள் பலவற்றின் விருப்பமென்பது சூரிய ஒளி சக்தி மூலமாக மின் உற்பத்தி நிலையங்கள் துவக்குவதே!
அமெரிக்கா 9 யூனிட்டுகள் கொண்ட 354 MW திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள மாஜூவ் (Mojave) பாலைவனத்தில் துவக்கியது. மேலும், நிவேதாவில் 64 MW திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டது. இது உலகத்திலே 3வது பெரிய மின் உற்பத்தி நிலையமாகும். மேலும் தனது உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும், புதிய நிலையங்கள் திறக்கவும் திட்டமிட்டுள்ளது.
webdunia photo
WD
உலகிலேயே ஸ்பெயின் நாடு தான் அதிகப்படியான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் கொண்டுள்ளது. அந்நாடு தனது மொத்த மின் தேவையில் 12% சதவீதம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவே பெறுகிறது. தனது PS10 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தின் (கீழே படத்தைப் பார்க்கவும்) திறனை 11 MW லிருந்து 300 MW ஆக அதிகரிக்க 2013 ஆம் ஆண்டிற்குள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை ஜெர்மனிக்கும் விற்றுக் கொண்டிருக்கிறது.
webdunia photo
WD
இந்த துறையில் மற்ற நாடுகளும் குறிப்பாக பிரான்ஸ், போர்ச்சுகல், இஸ்ரேல், இத்தாலி, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகள் வியக்கத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஆஸ்ட்ரேலியா தனது குயீன்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள ஒரு முழு நகரத்தின் மொத்த மின் தேவையினை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பூர்த்தி செய்ய 2010 ஆம் ஆண்டிற்குள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் மிக முக்கியமான விசயமென்னவென்றால், பெரும்பாலான அயல் நாடுகளில் கோடை காலமென்பது வருடத்தில் சில மாதங்களே! அந்த காலங்களில் மட்டுமே சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதே!
தமிழ்நாட்டில் சாத்தியமா?
சரி... சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தயாரிக்கும் விசயத்தில் எவ்வளவோ உயர் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நமது இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம்!!
இந்தியாவில் வருடத்திற்கு தோராயமாக 200க்கும் அதிகமான நாட்கள் நல்ல சூரிய ஒளி கிடைக்கிறது. அதுவும் தமிழ் நாட்டில் 300க்கும் அதிகமான நாட்கள் நல்ல சூரிய ஒளி கிடைக்கிறது. இந்த சூரிய ஒளிச் சக்தி கொண்டு மின் உற்பத்தி செய்தால் அது நமது மின் தேவைக்கும் அதிகமான அளவே!
ஒரு ஆய்வின் படி, நமது நாட்டிலுள்ள தார் (இராஜஸ்தான்) பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவின் ஒரு சிறு பகுதியில் (35,000 சதுர கி.மீ.) கிடைக்கும் சூரிய ஒளி கொண்டு சுமார் 7,00,000 MW க்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி செய்ய முடியும்! (என்ன தலை சுற்றுகிறதா?!).
webdunia photo
FILE
ஆனால் நமது நாட்டில் சூரிய ஒளியை மின் தேவைக்காக உபயோகித்தல் என்பது 0.5% சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 1996 ஆம் ஆண்டு அமெக்கோ மற்றும் என்ரான் உதவி கொண்டு இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மரில் 50 MW சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை துவங்க அடிக்கல் நாட்டியதோடு சரி, அது என்னவாயிற்றென்பது யாருக்கும் தெரியாது. அதற்கடுத்து அடிக்கல் நாட்டப்பட்ட 50 MW மற்றும் 150 MW திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்கும் அதே நிலைதான்.
சூரிய ஒளி போன்ற இயற்கை சக்தி வளங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், அதை உபயோகப்படுத்தவும், நமது நாட்டில் தனித்துறைகளும் (Ministry of New and Renewable Energy - MNRE), (Indian Renewable Energy Development Agency Limited - IREDA) உள்ளன. ஆனால், அவர்களின் பங்களிப்பு பெரிய திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைப்பதில் மிகக் குறைவே. நமது வளர்ந்து வரும் மின் தேவையில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
சூரிய ஒளி மின் உற்பத்தி
உலகிலேயே ஸ்பெயின் நாடு தான் அதிகப்படியான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் கொண்டுள்ளது. அந்நாடு தனது மொத்த மின் தேவையில் 12% சதவீதம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவே பெறுகிறது.
இப்பொழுதும் நாக்பூரிலும், மேற்கு வங்காளத்திலும் 2012 ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை துவங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது செய்தியாக மட்டுமில்லாமல், எந்தத் தடையுமின்றி மிக விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும்.
இதுபோல தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவி மின் உற்பத்தியில் நாம் ஏன் தன்னிறைவு காணக் கூடாது?. ஏனெனில் வட மாநிலங்களில் கோடை காலமென்பது வருடத்திற்கு 7 முதல் 8 மாதங்களே, ஆனால் தமிழ் நாட்டில் வெயில் ஆண்டு முழுதும் தங்கு தடையில்லாமல் கிடைக்கும்.
சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க ஆரம்பகட்டச் செலவுகள் அதிகமே. ஆனால் இது சுற்றுப்புறச் சூழலை பாதிக்காது, பாதுகாப்பானது என்பது மட்டுமின்றி, பராமரிப்பு செலவுகள் மற்ற மின் உற்பத்தி முறைகளைக் காட்டிலும் குறைவே. மிக முக்கியமாக, யூனிட் ஒன்றிற்கு மின்சாரம் 2 முதல் 6 ரூபாயிலே கிடைக்கக்கூடும். தொலைநோக்குப் பார்வையில் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள் அதிகமான அளவு சூரிய ஒளி மின் நிலையங்களை திறக்க முன்வர வேண்டும்.
webdunia photo
FILE
சூரியனை தெய்வமாக வணங்கும் நம் நாட்டில், அந்த ஆதவனின் அளப்பறியா சக்தியை முழுவதும் உபயோகிப்பதை விட்டு விட்டு, நாம் ஏன் அடுத்த நாடுகளிடம் ஆயிலுக்காகவும், நிலக்கரிக்காகவும், அணு சக்திக்காகவும் கையேந்த வேண்டும்?
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்?....
(இந்தக் கட்டுரையாளர் நியூ ஸீலாந்து நாட்டில் மேலாண்மை ஆலோசகராக பணிபுரிந்துவரும் நமது நாட்டைச் சேர்ந்த பொறியாளராவார்)