ஐந்து பெரும் மதங்களின் சங்கமமாக, இன்று நேற்றல்ல ஓராயிரம் ஆண்டுகளாக, முழுமையான சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து, இந்த உலகிற்கே உதாரணமாக திகழ்ந்துவந்த பாரத சமுதாயம் இன்று மதவாதிகளின் இறுக்கமான பிடியிலும், பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளிலும் சிக்கி அமைதியின்றி தவித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்பு 24 உயிர்களைப் பறித்துள்ளது. 151 பேரை குற்றுயிரும், குலையிருமாக வீழ்த்தியுள்ளது. கொடுமையான இந்த நடவடிக்கையால் 175 குடும்பங்கள் நிலைகுலைந்துள்ளது மட்டுமின்றி, இந்திய சமூகம் நிரந்தரமான ஒரு அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.
பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடரத்தான் போகிறது. நமது அரசுகளும், காவல்துறையினரும் விடுக்கும் எச்சரிக்கைகள் இதைத்தான் கூறுகின்றன. இந்தத் தாக்குதல்களில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது இயலாத ஒன்று. “Terrorist attack at their will and we cannot predict where they will attack” என்று நமது உள்துறை அமைச்சரே ஒரு முறை கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை விடுக்கும் எச்சரிக்கையை அடுத்து மாநில காவல் துறையினர் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கின்றனர். அப்பொழுதெல்லாம் ஒரிரு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றுகின்றனர், தொடர்புடைய நபர்களை கைது செய்கின்றனர். இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயினும், அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
“பயங்கரவாதிகளிடம் பணிந்துவிடமாட்டோம்”, “நாட்டைப் பிளவுபடுத்தும் அவர்களின் எண்ணம் ஈடேறாது”, “இந்திய மக்களின் மன உறுதியை இப்படிபட்ட நடவடிக்கைகளால் பயங்கரவாதிகள் தகர்த்துவிட முடியாது” என்றெல்லாம் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நமது தலைவர்கள் வீர வசனம் பேசுகின்றனர்.
PTI
ஆயினும் இதற்கெல்லாம் எப்படி முடிவு கட்டுவது? இந்தக் கேள்விக்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டு அரசிடமும் பதிலில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போர் என்று அறிவித்துவிட்டு இந்த 7 ஆண்டுகளில் வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன கூட்டுச் சேர்ந்தும், தனித்தனியாகவும் - தங்களுடைய தனித்த உள் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்வதற்குமாக - போராடிப் பார்த்துவிட்டன. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியவில்லை. இதைத்தான் செப்டம்பர் 11 அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றியா? தோல்வியா? என்ற கட்டுரையில் ஆராய்ந்திருந்தோம். காரணம், உலகளாவிய அளவில் அந்தப் போர் முழுத் தோல்வி அடைந்துவிட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆளாகிவருகிறது. டெல்லி, மும்பை, பெங்களுரு, ஜெய்பூர், அலகாபாத், அகமதாபாத் என்று இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு ஆளாகியுள்ளன. அடுத்தது சென்னையா? என்று அச்சத்துடன் கேட்கும் நிலையும் உள்ளது.
தேசத்தை நெருக்கும் மதவாத- பயங்கரவாத அபாயம்!
எவ்வளவு காலத்திற்குத்தான் இந்திய மக்கள் இப்படிப்பட்ட ஒரு அச்சத்துடன் தங்கள் அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டிருப்பார்கள்? எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும், சந்தையிலும், இரயிலும், பேருந்திலும், திருவிழாவிலும் குண்டுகள் வெடிக்கலாம் என்ற நிலையில், அரசுகளின் மீதும், பாதுகாப்பு அமைப்புகளின் மீதும் அவர்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இந்த அவநம்பிக்கை அதிகரிக்கும் போது, இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற சிந்தனைப்போக்கு வளர்ந்தால், அது மற்றுமொரு மோசமான எதிர்வினையை உருவாக்கும் அபாயமும் உள்ளது. ஏனெனில், மக்களை மத ரீதியாகப் பிரித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சமூக- அரசியல் அமைப்பு நமது நாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நிலையில், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறுமானால், அது மத ரீதியான ஒரு மோதலிற்கு வித்திட்டுவிடும் அபாயத்தை உருவாக்கும்.
இந்தியாவின் இதயத் துடிப்பை நிறுத்துவோம்!
இதைக் கூறுவதற்குக் காரணம்: டெல்லி தொடர் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றதாக காவல் துறையால் கூறப்படும் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு மின்னஞ்சல் வாயிலாக விடுத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள வாசங்கள் நாம் மேற்கூறிய அந்த அபாயகரமான நிலையை உருவாக்கக்கூடியதாக உள்ளது.
தாங்கள் நடத்திவரும் “இந்தத் தொடர் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் இதயத் துடிப்பை நிறுத்தும் நோக்குடன் நடத்தப்படுபவை” என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எழுதியுள்ள 13 பக்க கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவின் எந்த நகரையும், எந்த நேரத்திலும் தாக்கும் திறன் படைத்தது என்பதை நிரூபிக்கவே” என்றும், “எங்களது தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்குள் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று கூறியிருப்பதும் படிப்பவர்கள் மனதில் அச்சத்தை மட்டுமல்ல, கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
யாரென்றே தெரியாத பயங்கரவாதிகளின் மீதான கோபம், அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது (மதவாத சக்திகளால்) திசை திருப்பபட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பார்த்து அச்சப்பட வேண்டியுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு சூழலை - தனது அரசியல் நலனை கருத்தில்கொண்டு - எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் மதவாத- அரசியல் சக்திகள் உள்ள நமது நாட்டில், ஒரு பேரபாயம் சூழ்ந்துக்கொண்டிருக்கிறது.
இதனை அரசியலிற்கு அப்பால் சென்று தடுத்து நிறுத்திட வேண்டிய அவசரக் கடமை நமது நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் உள்ளது. பொருளாதாரம், பணவீக்கம், வறுமை, வேலையின்மை என்று நம்முன் வளர்ந்து நிற்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் நம்மால் எதிர்கொண்டு தீர்த்துவிட முடியும், அந்தத் திறன் நமது அரசியலமைப்பிற்கு உள்ளது. ஆனால் நாடே இரத்தக்களறியானால்? யார் தடுப்பது?
அன்று மகாத்மா காந்தி இருந்தார். அவரின் சாத்வீகப் போராட்டம் மத வன்முறை வெறியாட்டத்தை நிறுத்தியது. இன்று அப்படிப்பட்ட மக்களின் மனங்களை ஆளும் சக்தி படைத்த தலைவர் நம்மிடையே இல்லை.
எனவே இந்திய அரசு அசுர வேகத்தில் செயல்படவேண்டும். பயங்கரவாதத்தை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திட வேண்டும். புதிதாக பொடா சட்டத்தைப் போட்டெல்லாம் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே பரிசீலனையில் உள்ள, பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவிலான (மத்திய புலனாய்வுக் கழகம் போன்ற) தனிக் காவல் அமைப்புத் தேவை. மிகுந்த அதிகாரமுடைய காவல்- புலனாய்வு அமைப்புத் தேவை. அதன் ஒரே குறிக்கோள் மற்றும் பணியாக பயங்கரவாதத்தை ஒடுக்குவது மட்டுமே ஆக இருக்க வேண்டும். இதை உடனடியாகச் செய்ய வேண்டும். செய்யத் தவறினால்... அந்த அச்சமூட்டும் நிலை உருவாகும்.
மற்றொரு நடவடிக்கையாக, இந்த நாட்டின் இரண்டாவது பெரும் சமூகமாகத் திகழும் முஸ்லீம்கள் உரிய (அரசு) வேலை வாய்ப்பு பெறவும், சமூக - கல்வி ரீதியாக மேம்படவும், நீதிபதி இராஜேந்திர குமார் சச்சார் குழு அளித்த பரிந்துரைகளை உடனடியாக, மாநில அளவிலும், மத்திய அளவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன்மூலம்தான் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த முடியும். அதனை உடனடியாகச் செய்திட வேண்டும்.
இல்லையென்றால்...பாரத நாட்டை மதவாத வெறுப்புணர்ச்சி மாய்த்துவிடும்.