அணு சக்தி ஒப்பந்தம்: உண்மையை உடைத்த ரகசிய கடிதம்!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (21:13 IST)
இந்தியா தனது பாதுகாப்பு உள்ளிட்ட எந்த காரணத்தை முன்னிட்டும் அணு ஆயுதச் சோதனை நடத்தினால், அதனுடனான அணு சக்தி ஒத்துழைப்பு உடனடியாக முறித்துக்கொள்ளப்படும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் எழுதிய கடிதம் வெளிப்படுத்திய தகவல், மத்திய அரசை நிலைகுலையச் செய்துள்ளது மட்டுமின்றி, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்துப் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அனுமதி அளித்து நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க அரசு செயல்படும் என்று அந்தக் கடிதத்தில் உறுதியளித்திருப்பது, அச்சட்டம் எந்த விதத்திலும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்று கூறிவந்த மத்திய அரசிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அளித்த பதிலும் கடிதத்தின் முரண்பாடும்!
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடந்தபோதெல்லாம், “இந்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் பாதுகாப்புத் தொடர்பான நமது அணு சக்திக் கொள்கையை கட்டுப்படுத்தாது. எதிர்காலத்தில் நமது பாதுகாப்பையும், தேச நலனையும் கருத்தில்கொண்டு அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு இந்த ஒப்பந்தம் எந்த விதத்திலும் ஒரு தடையாக இருக்காது” என்று மத்திய அரசு பதில் தந்துவந்துள்ளது.
அது மட்டுமல்ல, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவாதம் நடந்தபோதெல்லாம் ஹென்றி ஹைட் சட்டத்தின் பிரிவுகள் குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம் பதிலளித்த நமது பிரதமரும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், “வேறொரு நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் எந்த விதத்திலும் நம்மை கட்டுப்படுத்தாது. அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமே முக்கியமானது, அதுதான் இரு தரப்பையும் கட்டுப்படுத்தக் கூடியது” என்றெல்லாம் கூறியுள்ளார்கள். இது நாடாளுமன்றத்தின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது, அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளது.
இப்படிப்பட்ட பொய்யுரைகளைத்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மான் வெளியிட்ட கடிதம் அப்பட்டமாக உடைத்து உண்மையை வெளிக்காட்டியுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு விவாகாரக் குழுவின் தலைவராக இருந்த டாம் லான்டோஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி எழுதிய கடிதத்திற்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தங்கள் நிலையை விளக்கி எழுதிய கடிதத்தைத்தான் தற்பொழுது அக்குழுவிற்குத் தலைவராக இருக்கும் ஹோவர்ட் பெர்மான் வெளியிட்டுள்ளார்.
இதை வெளியிட்டதற்கான காரணத்தையும் பெர்மான் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமானதொரு ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான உண்மைகள் அமெரிக்கர்கள் மட்டுமின்றி, இந்தியர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் வெளியிட்டதாக கூறியுள்ளார். பாராட்டிற்குரியது.
இந்தக் கடிதத்தில் வெளியான உண்மைகள் எதுவும் புதிதல்ல, எல்லாம் ஏற்கனவே தெரிந்ததுதான் என்று கூறி மத்திய அரசு மழுப்பி வருகிறது. அது உண்மையானால் இக்கடிதத்தின் விவரங்கள் இந்தியர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெர்மான் கூறியது ஏன் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எல்லாமே ஏற்கனவே தெரிந்ததுதான் என்றால், அக்கடிதம் வெளியானதும் பிரதமர் மன்மோகன் சிங் அவசரக் கூட்டம் கூட்டி விவாதித்தது ஏன்? கடிதம் வெளிப்படுத்திய விவரங்கள் தொடர்பாக இரண்டு நாட்களுக்குப் பிறகு விளக்க அறிக்கை அளிப்பது ஏன்?
அமெரிக்க அரசு அல்ல, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அயலுறவு விவகாரங்கள் குழுவின் (House Foreign Affairs Committee) தலைவர் பெர்மான், மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதனை வெளியிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் நமது நாட்டு அரசு எல்லாவற்றையும் மூடி மறைக்கப் பார்க்கிறது!
அயலுறவில் எப்படியோ, ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் தங்கள் நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பதில் எவ்வளவு கருத்தாக உள்ளனர்! நமது நாட்டு அரசும், அரசியல்வாதிகளும் மக்களுக்கு உண்மையை மறைப்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர். ஆனால் இரண்டும் ஜனநாயக நாடுகள்தான்.
சோதனை சுயக் கட்டுப்பாடும், எதிர்காலமும்!
இந்தக் கடிதம் வெளியிட்ட உண்மை எப்படிப்பட்ட பாதிப்பை நமது நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் ஏற்படுத்தக்கூடியது என்பதை கவனமாக ஆராயவேண்டும்.
இந்தியா தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்தினால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அணு உலைகளுக்கு அளிக்கப்படும் எரிபொருள் நிறுத்தப்படும், உடனடியாக ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்படும் என்று டாம் லாண்டோஸ் எழுப்பிய 16வது கேள்விக்கு அமெரிக்க அயலுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
'நமது நாட்டைப் பொறுத்தவரை, அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்கின்ற சுய கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) கடைபிடித்து வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் நமது பாதுகாப்பு, தேச நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அணு ஆயுத சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும், அதனை எந்தச் சக்தியும் தடுக்க முடியாது' (இதெல்லாம் நமது நாடாளுமன்ற விவாதத்தில் அரசு கொப்பளித்த வீர வசனங்கள்) என்று இந்தியா கூறியுள்ளது.
நமது கேள்வி இதுதான்:
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளிடமிருந்து 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு சக்தி உலைகளைப் பெற்று நாம் நிறுவிவரும் நிலையிலோ அல்லது நிறுவி செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலோ, நமது அண்டை நாடுகளில் ஏதாவது ஒன்று அணு ஆயுத சோதனை நடத்தி ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும்பட்சத்திலோ அல்லது மாறுபட்ட ஒரு சர்வதேச சூழலில் நமது பலத்தை சர்வதேச சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்கும் அவசியம் எழுந்தோலோ எப்படி அணு ஆயுதச் சோதனை நடத்த முடியும்?
பாதுகாப்புச் சூழல் அணு ஆயுத சோதனையை அவசியமாக்குகிறது. அதே வேளையில் அணு ஆயுதச் சோதனை நடத்தினால் அணு சக்தி ஒத்துழைப்பு (அமெரிக்க மட்டுமல்ல, மற்ற நாடுகளும்தான்) முறிந்துவிடும். நமது அணு உலைகளுக்கு எரிபொருள் கிட்டாது. அணுத் தொழில் நுட்ப உபகரணங்களை வாங்கவும் முடியாது, விற்கவும் முடியாது. இந்த நிலையில் அரசால் என்ன முடிவு எடுக்க முடியும்?
இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்போது, துணிந்து அணு ஆயுதச் சோதனை நடத்தினால், அணு உலைகளைப் பெற நாம் செய்த முதலீடுகள் அனைத்தும் கேள்விக்குறியதாகிவிடும். எரிபொருள் கிட்டாமல் இன்று நாம் சந்தித்துவரும் அதே நிலை ஏற்படும். இதனை எப்படி அரசு சமாளிக்கும்?
இது நமது சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கிறதே. அதனால்தானே இந்த ஒப்பந்தம் நமது இறையாண்மையை முடக்கிவிடக் கூடியது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு மத்திய அரசின் பதில் என்ன? அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து தற்காத்துக்கொள்ள போதுமான எரிபொருள் இருப்பை உருவாக்கிக் கொள்வோம் என்று முன்பு பதிலளிக்கப்பட்டது. அதனையும் இந்தக் கடிதம் தகர்த்துவிட்டது. அப்படிப்பட்ட எரிபொருள் இருப்பை இந்தியா உருவாக்கிக் கொள்ள எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தனது கடிதத்தில் தெளிவாகக் கூறியுள்ளது.
எனவே நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் (யுரேனியம்) பெற நாம் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பிற்குச் செல்கிறோம். ஆனால் அவர்கள் நமது குடுமியை முழுமையாகப் பற்றி இறுக்கிவிடப்பார்க்கிறார்கள்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான ஒவ்வொரு கேள்விக்கும் அந்த 26 பக்க கடிதத்தில் (45 கேள்விகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்களில்) முழுமையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மழுப்புவதற்கு ஏதுமில்லை.