ஒகேனக்கல் : மத்திய அரசு மெளனம் சாதிப்பதேன்?

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:57 IST)
webdunia photoFILE
காவிரி நதியில் வரும் தண்ணீரை தமிழ்நாட்டின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை எவ்வித அடிப்படையும் இன்றி கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து துவக்கிய வன்முறை நாளுக்கு நாள் பெருகி இரு மாநிலங்களிலும் விசுவ ரூபம் எடுத்து வருகிறது.

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பதற்கு கர்நாடகத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை, மத்திய அரசிடம் பெற்ற ஒப்புதலைக் காட்டி தமிழக அரசு தெளிபடுத்தியப் பிறகும், கன்னட அமைப்புகள் சில தொடர்ந்து இப்பிரச்சனையை தீவிரப்படுத்தி வருவதும், அதனை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துப் பேசி வருவதும் இரு மாநிலங்களிலும் வன்முறை பரவ காரணமாகிவிட்டது.

கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி இப்பிரச்சனையை உருவாக்கியது. சில நாட்கள் முதல்வராக இருந்து பதவி இழந்த பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனையை உருவாக்கினார்.

webdunia photoFILE
அரசியல் ஆதாயத்திற்காக இப்படிப்பட்ட நடவடிக்கையை எடியூரப்பா மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்று அப்போதே தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் கண்டித்தார். ஒகேனக்கல் தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதியே என்று அங்கு சென்று அதற்கான ஆவணங்களையும் பார்த்து அக்கட்சியின் தலைமைக்கு ஒரு அறிக்கையையும் அளித்தார் இல. கணேசன். ஆனால் அதற்கு பிறகும் கர்நாடக பா.ஜ.க.வின் நிலை மாறவில்லை. ஒகேனக்கல் இரு மாநிலங்களுக்கு இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதி என்று தொடர்ந்து கூறி எல்லைப் பிரச்சனையை அக்கட்சி உருவாக்கியது.

ஒரே கட்சியின் இரண்டு மாநில அமைப்புக்களுக்கிடையே இப்படிப்பட்ட முரண்பாடு! இதையெல்லாம் அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை கண்டு கொள்ளவில்லை. இன்று வரை மெளனம் சாதிக்கிறது.

இதன்பிறகுதான், கர்நாடகத்திலுள்ள கன்னட அமைப்புகளும் இல்லாத ஒரு பிரச்சனையை தீவிரப்படுத்தத் துவங்கின. பிறகு கர்நாடக காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க. நிலையை ஒட்டியே பேச ஆரம்பித்தது. “தேர்தலுக்குப் பிறகு இப்பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம், அதுவரை ஒகேனக்கல் திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தக் கூடாது” என்று கூறி தன் பங்கிற்கு அரசியல் செய்தார் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், மீண்டும் அரசியல் பிரவேசம் செய்பவருமான எஸ்.எம். கிருஷ்ணா.

இப்படி இல்லாத ஒரு பிரச்சனையை இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனையாக்கி அரசியல் ஆதாயம் தேட இரண்டு தேசிய கட்சிகளும், தேவே கவுடாவின் கட்சியும் முற்பட்டதனாலும், அதனை கன்னட அமைப்புகள் சில தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக்க, இப்பொழுது இரு மாநிலங்களிலும் பேருந்துகள் உடைக்கப்படுகின்றன, போக்குவரத்து நிறத்தப்பட்டுவிட்டது, இரு மாநில திரையுலகத்தினரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்துவிட்டனர். நாளுக்கு நாள் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகிறது.

ஆனால் மத்திய அரசு வாய் திறக்கவில்லை!

கர்நாடகத்தில் தற்பொழுது ஆளுநர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதாவது மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் அம்மாநிலம் உள்ளது. இந்த நிலையில் அங்கு நடைபெறும் வன்முறையை முளையிலேயே கிள்ளி எரியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததனால்தானே அத்திட்டத்திற்கு ஜப்பான் வங்கி நிதியுதவி செய்தது? அத்திட்டத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்று சான்றிதழ் அளிக்கப்பட்டபோது பதவியில் இருந்தது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசல்லவா? அக்கட்சி ஏன் மெளனம் சாதிக்கிறது?

எதையும் கூறாமல் மெளனம் சாதிப்பதன் மூலம், ஒகேன‌க்கலை பிரச்சனையாக்குகிறதா மத்திய அரசு? தனது தேர்தல் நலனிற்காக உண்மையை மறைத்து தேச உணர்வை கேள்வி‌க்குறியாக்குகிறது மத்திய அரசு.

இது மோசமான விளைவுகளுக்கு வித்திடப் போகிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அது இந்த தேசிய கட்சிகளின் ‘தேச உணர்வை’ கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, நமது நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

மத்திய அரசே பேசு... உடனடியாக பேசு... நீ பேசி முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இப்பிரச்சனை முடிவற்ற பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.