அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் நமது நாட்டை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது உலகளாவிய பிரச்சனை என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் ஊடகத் தொடர்புப் பிரிவின் தலைவருமான வீரப்ப மொய்லி.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி இவ்வாறு கூறியுள்ளது மட்டுமின்றி, அதற்கு உதாரணமும் காட்டியுள்ளார்.
webdunia photo
FILE
சீனாவில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைவாசி ஏற்றம் உள்ளதாம். பன்றிக்கறி 63.4 விழுக்காடும், காய்கறிகள் விலை 46 விழுக்காடும் உயர்ந்துள்ளதாம். அது மட்டுமின்றி, எணணெய், கொழுப்பு, பருப்புப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டனவாம். அதனால் அந்நாட்டில் பணவீக்கம் 8.7 விழுக்காடாக உயர்ந்துள்ளதாம். அடுக்கியுள்ளார் வீரப்ப மொய்லி (செய்தியைப் படிக்க).
அவர் பேசியதைப் படிக்கும் போது புல்லரிக்கின்றது. எங்கிருந்து இந்த காங்கிரஸ் தலைவருக்கு மட்டும் இவ்வளவு புத்தி வந்தது என்று காங்கிரஸ் தலைவர்களே யோசிக்கும் அளவிற்கு உதிர்த்துத் தள்ளியுள்ளார் வீரப்ப மொய்லி.
இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை, மேலும் பேசியுள்ளார் மொய்லி. விலைவாசி ஏற்றம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூடுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆம், அது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா யோசித்துக் கொண்டிருக்கிறார்” என்று பதிலளித்துள்ளார்.
இந்த இடத்தில்தான் தன்னையும் முட்டாளாக்கிக் கொண்டு, மற்றவர்களையும் முட்டாளாக்க முயன்றுள்ளார் வீரப்ப மொய்லி. விலைவாசி ஏற்றம் தான் உலகளாவிய பிரச்சனையாயிற்றே, அதற்கு இந்திய அளவில், அதுவும் காங்கிரஸ் கட்சி அளவில் விவாதிப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது. புவி வெப்பமடைதல் பிரச்சனை எப்படி சர்வதேசப் பிரச்சனையாக விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதேபோல விலைவாசிப் பிரச்சனையையும் சர்வதேசப் பிரச்சனையாக விவாதித்து தீர்வுகாண இந்தியா ஐ.நா.வை வலியுறுத்தும் என்றல்லவா வீரப்ப மொய்லி கூறியிருக்க வேண்டும். அப்படி கூறாதது ஏன் என்று கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட கேள்வியை ஏன் செய்தியாளர் எவரும் கேட்கவில்லையே என்றும் தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைவராகட்டும், மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களாகட்டும், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுவதெல்லாம் செய்திக்காகத்தானே தவிர, நாட்டைக் காப்பாற்றவோ அல்லது மக்கள் கவலைகளைப் போக்கவோ அல்லது தீர்வை நோக்கியதோ அல்லது என்பது பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் தெரியாதா என்ன? அது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஒரு செய்தியைக் கூறுகிறார் என்றால் அது அந்தக் கட்சி விடுக்கும் செய்தியாகவல்லவா கருதவேண்டும்.
அதனால்தான், ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்று உலகமே கொண்டாடிவரும் நிலையில், பல்வேறு கேள்விகளை எழுப்பக் கூடிய ஒரு செய்தியை செய்தியாளர்களிடம் கூறி, இந்திய நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக முட்டாள்கள் தினச் செய்தியை வெளியிட்டுள்ளார் வீரப்ப மொய்லி.
இதற்காக சோனியா காந்தி அவரை நிச்சயம் பாராட்டுவார். ஏனென்றால் நாட்டு மக்களை முட்டாளாக்கும் திறன் ஒரு கட்சியின் ஊடகத் தொடர்பாளருக்கு இருக்க வேண்டியது - இந்திய அரசியலில் - மிக அவசியம். அதுமட்டுமின்றி, தங்களுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க உள்நாட்டு பிரச்சனையை உலக பிரச்சினையாக்கி மறைத்த வீரப்ப மொய்லியின் வார்த்தைகள், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, மற்ற கட்சிகளுக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும்.
இப்படிப்பட்ட முன்னுதாரண புருஷரை காங்கிரஸ் கட்சி நிச்சயம் கெளரவிக்கும் என்பதை சந்தேகமின்றி நம்பலாம்.