இந்தியாவை அறிவு சார்ந்த, செல்வ வளம் சேர்க்கும் சமூகமாக உருவாக்க உயர் கல்வி வழங்குதலில் அரசுடன் இணைந்து தனியாரும் முன்வரவேண்டும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
தனியார் கல்வி நிலையங்களால் பொறியியல், மருத்துவ, தொழில் கல்விகளின் தரம் குறைந்து வருகிறது என்றும், சுய நிதி கல்லூரிகளால் (பள்ளிகளும் கூட) கல்வி பெரும் வணிகமாகிவிட்டது என்றும் பரவலாக குற்றஞ்சாற்றப்படும் நிலையில், உயர் கல்வி அளிப்பதில் தனியார் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
“தனியார் கல்வி நிறுவனங்களால் கல்வித் தரம் குறையாது என்று பறைசாற்றுவதுபோல, உயர் கல்வியை முறைபடுத்தக்கூடிய அமைப்புகள் இருக்கும்வரை, உயர் கல்வி அரசோ அல்லது தனியாரோ நடத்துவதில் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை” என்று கூறியுள்ள நிதியமைச்சர் சிதம்பரம், ஹைதராபாத்தில் இயங்கிவரும் இந்திய வணிகப் பள்ளியை அதற்கு ஆதாரமாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உட்பட நமது நாட்டில் இயங்கிவரும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் மத்திய அரசின் தொழில்நுட்ப பேரவை அல்லது அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (தர) ஒப்புதலைப் பெற்றே துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.
இப்படி இயங்கும் பல கல்லூரிகளில் தகுதி வாயந்த, அனுபவமிக்க விரிவுரையாளர்களோ அல்லது துறைத் தலைவரோ இல்லாத நிலையே தொடர்கிறது என்று பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ‘பெருமைக்குரிய’ பல கல்லூரிகள் இன்று ஆளுமை கல்வி உள்ளிட்ட உயர் கல்வி மேல் பட்டப் படிப்புக்களை அறிமுகம் செய்து (பெரும் நிறுவனங்கள் கல்லூரிக்கே வந்து நேர்முகத்தேர்வு செய்து பணி வாய்ப்பு வழங்குவார்கள் என்றெல்லாம் கூறி) ஜரூராக மாணவர் சேர்க்கின்றனர்.
MBA படிப்பில் சேர லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இதேபோல, மருத்துவத்திலும் நடைபெற்று வருகிறது. இடமளிப்பதற்கே ரூ.10 லட்சம் வசூலித்து கல்லூரியுடன், மருத்துவமனையையும் நடத்தி வருகிற நிறுவனங்கள் எல்லாம் உள்ளன.
இப்படிப்பட்ட நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளால் முடிந்ததா? அப்படியே (தமிழக அரசு செய்த்தைப் போல) கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தாலும், தரத்தை உறுதி செய்ய முடியவில்லையே!
இதையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் சேர வேண்டும் என்று கூறலாம். அதற்கு எதற்கு மத்திய அரசின் முறைபடுத்து அமைப்புகள்? நாடு முழுவதும் காளாண்களைப் போல ஒவ்வொரு ஆண்டும் முளைத்துப் பரவிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட கலவி நிறுவனங்களை தடுப்பதற்கு ஒரே வழி: ஆரம்பக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை அனைத்தையும் அரசே நடத்தவேண்டும் என்பதே.
அந்த அளவிற்கு நிதி ஆதாரம் அரசிடம் இல்லை என்று கூறலாம் (அப்படித்தான் நமது நிதியமைச்சர் கூறுவார்). இன்றைக்கு சற்றேறக்குறைய 7 லட்சம் கோடிக்கு நிதி நிலை அறிக்கை அளிக்கும் மத்திய அரசு, கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து அதன் மூலம் கல்வியை மதிப்புடையதாகவும், தரமுடையதாகவும் ஆக்கிட வேண்டும்.
“குடியரசு முறை திறம்பட நடைபெறுவதற்குக் குடிமக்களுக்குக் கல்வி அறிவு முக்கியமானது. இந்திய அரசமைப்புச் சட்டம் தொடங்கிய 10 ஆண்டு காலத்திற்குள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கெல்லாம் கட்டாய இலவசக் கல்வி தருவதற்கு அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று கூறப்பட்டது.
அதன்படி 1961, ஜனவரி 25 ஆம் தேதிக்குள் கட்டாய இலவசக் கல்வி அனைத்துச் சிறுவர்களுக்கும் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது நிறைவேறாமல், பல பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று 1965 ஆம் ஆண்டு கோத்தாரி கல்விக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை நாட்டு உற்பத்தி அளவில் 4% குறைவாகத்தான் அரசாங்கத்தின் கல்விக்கான செலவு இருக்கிறது.
மேலும், ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் 100 மாணவர்களில் ஐந்தாம் வகுப்புக்கு 40 மாணவர்களும், எட்டாம் வகுப்புக்கு 23 மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கு 14 மாணவர்களும் செல்வதாகத் தெரிகிறது. 17 முதல் 24 வயதினரில் 6% மாணவர்களால்தான் கல்லூரிப் படிப்பிற்குச் செல்ல முடிகிறது” என்று குடியரசு தினத்தை முன்னிட்டு எழுதிய கட்டுரையில் தலை சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான இரா. செழியன் குறிப்பிட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல, தனியார்கள் ஏன் கல்வி நிறுவனம் நடத்த முன்வரவேண்டும்? அவர்களுக்கு இருக்கும் சேவை மனப்பான்மையினாலா? தனியார் என்றாலே இலாப நோக்குதானே? நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தனியார் என்றால் வருவாய் நோக்கு கொண்டவர்கள் என்பதுதானே? அவர்கள் எப்படி தரமான கல்வியைத் தருவார்கள் என்று சிதம்பரம் கூறுகிறார். தரமான கல்வி தந்தால் இலாபம் அதிகம் கிட்டும் என்பதற்காக வேண்டுமானால் சில கல்வி நிறுவனங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளில் சென்று படிக்கும் வாய்ப்பு சராசரி வாழ் நிலையில் இருந்து வரும் மாணவர்களுக்கு சாத்தியமாகுமா?
ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களில் கல்லூரி படிப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கை 6 மட்டுமே என்றுள்ள நாட்டின் நிதியமைச்சர் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக கூறியுள்ள யோசனை சிரிக்கத்தான் வைக்கிறது.