கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை உண்டா? இல்லையா?

புதன், 23 ஜனவரி 2008 (16:43 IST)
‌‌‌மீனவ‌ர் நல‌னு‌க்கு மு‌ன்னு‌ரிமை!

த‌மிழக மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமஅளித்து, அவர்களுக்கென தனி நல வாரியமஅமைத்துள்ளதோடு, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போதகாணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங்களுக்கஉதவுவதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசசெயல்படுத்தி வருகிறது. கடலில் மீன்பிடிக்கசசெல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைககளையத் தேவையான அனைத்து முயற்சிகளு‌ம் தொடர்ந்து எடுக்க‌ப்படு‌ம்.

- ஆளுநர் உரையில் தமிழக அரசு.

கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை உண்டா? இல்லையா?

“தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்படும்”
என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் நிகழ்த்திய உரையில் கூறப்பட்டுள்ளது ஏதோ சம்பிரதாயமான வார்த்தைகளாகவே தெரிகிறது.

இப்படி கூறுவதற்குக் காரணம், கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை சிறிலங்க கடற்படையினர் பிடித்துச் (கடத்திச்) சென்று சிறைப்படுத்தியுள்ளனர் என்ற வேதனையான செய்தியே.

நமக்குச் சொந்தமான கச்சத் தீவை சிறிலங்காவிற்கு (நல்லெண்ண அடிப்படையில்) தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல், கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிலங்க கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இதுவரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்படுவதும், அயலுறவு அமைச்சகம் சிறிலங்க அரசிற்கு கடிதம் எழுதுவதும் அர்த்தமற்ற தொடர்கதையாகிவிட்டது. ஒரு வார காலத்திற்கு முன்னர் கூட மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் படுகாயமுற்று தற்பொழுது ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மேலும் ஒரு அத்துமீறலாக, கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்து அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி பிடித்துச் சென்று சிறைபடுத்தியுள்ளது.

எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை பிடித்துச் சென்று சிறை பிடித்ததாக செய்திகள் கூறுகின்றன, ஆனால் இந்திய - இலங்கை கடல் எல்லையில் கச்சத் தீவில் இருந்து நெடுந்தீவு வரை கடற்கண்ணி வெடிகளை மிதக்கவிட்டு பாதுகாப்பு வேலி அமைத்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதியில் கண்ணி வெடி வேலியிடப்பட்டிருந்தால் நமது மீனவர்கள் எல்லை மீறிச் சென்று மீன் பிடித்தார்கள் என்று எப்படி கூற முடியும்? எனவே அவர்கள் நமது கடற்பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோதுதான் சிறிலங்கப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது. இது அப்பட்டமான அத்துமீறிய நடவடிக்கையாகும். இந்திய - இலங்கை கடற்பகுதியை இந்திய கடலோர காவற்படை தீவிரமாக (விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்க) கண்காணித்து வருவதாக கடலோர காவற்படை கூறுகிறது. ஆயினும் சிறிலங்க கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதும் தொடர்கிறது. இது எப்படி என்பதை தமிழக அரசு அறிந்து தெரிவிக்கவேண்டும்.

இரண்டாவதாக, கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு என்பது உண்மை என்றால் ஒவ்வொரு முறையும் சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது ஏன்?

இது குறித்து சிறிலங்க அரசிடம் இந்திய அரசு தனது கவலை தெரிவித்ததாக வந்த செய்திகளுக்குப் பிறகும் தாக்குதல்கள் தொடருவதும் ஏன்?

இந்திய - இலங்கை கடற்பகுதியில் நமது கடலோர காவற்படையின் 3 கப்பல்களும், இந்திய கப்பற்படையின் 1 கப்பலும், கடலோர காவற்படையின் 2 ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது உண்மையெனில் சிறிலங்க கடற்படையினர் இப்படி அடிக்கடி அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துகிறார்களே எப்படி?இந்திய கடலோர காவற்படைக்கு விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுப்பதுதான் நோக்கம், தமிழக மீனவர்களை காப்பது அல்லவா?

இதற்கெல்லாம் தமிழக அரசு பதில் பெற வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டுமெனில் கச்சத் தீவை திரும்பப்பெற வேண்டும் என்று (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட) தமிழக தலைவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.

மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு கூறுவது நடைமுறை உண்மையாக வேண்டுமெனில் அன்னிய நாட்டினரின் தாக்குதலில் இருந்து முதலில் அவர்கள் காப்பாற்றப்பட்டு, தொன்றுதொட்டு அவர்கள் பெற்றுள்ள மீன் பிடி உரிமை நிலை நிறுத்தப்படவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்