கேரள மாநிலத்திலுள்ள கடம்புழா அம்மன் கோயிலிற்குள் சென்று வழிபட பிரபல பாடகர் ஜேசுதாஸிற்கு அக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது வெட்கத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.
webdunia photo
FILE
கிறித்தவராகப் பிறந்த ஜேசுதாஸ் மத வேறுபாடு பாராமல் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மட்டுமின்றி, பல கோயில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபடுபவர். சுவாமி அய்யப்பன் மீது அவர் பாடிய பாடல் ஒன்றை ஒவ்வொரு இரவும் ஒலித்த பின்னரே சபரிமலை அய்யப்பன் கோயில் நடை சாத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது.
கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து பல கோயில்களுக்கு நிதி சேகரித்து அளித்து இறைப்பணி ஆற்றியவர் பாடகர் ஜேசுதாஸ் அவர்கள். அப்படிபட்ட இறைப் பக்தரை, தூய நெறியாளரை, சிறந்த இசைக் கலைஞரை கோயிலிற்குள் அனுமதிக்க மறுத்திருப்பது அடாத செயல் மட்டுமின்றி, இந்து மதத்தின் ஆன்மீக நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
“கடவுள் அருகே எலிகளும், பூனைகளும் செல்கின்றன. ஏன் ஜேசுதாஸூக்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது?” என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ள ஜேசுதாஸ், மற்றொரு விவரத்தையும் கூறியுள்ளார். அதுவே முக்கியமானது:
“கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோயிலிற்குச் சென்றுள்ளேன். சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குச் சென்று தரிசித்து இருக்கிறேன். அங்கெல்லாம் இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது கிடையாது” என்று சுவாதித் திருநாள் இசைக்கல்லூரியில் நடந்த விழாவில் வருதத்துடன் அவர் பேசியுள்ளார்.
மற்ற மதத்தினர் கோயிலிற்குள் நுழைக்கூடாது என்பது இந்துக் கோயில்களில் கடைபிடிக்கப்படும் பொது விதியாக இருக்குமென்றால், ஜேசுதாஸை சபரிமலை அய்யப்பன் கோயிலிற்குள் அனுமதிப்பதும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் அனுமதி மறுத்து அவரை அவமானப்ப்படுத்துவதும் ஏன்? இது எல்லா பக்தர்களின் உள்ளத்திலும் எழும் கேள்வியாகும்.
“மற்ற மத்த்தினருக்கு அனுமதியில்லை” என்று எழுதி வைத்திருப்பதே இந்து மதத்தின் ஆன்மீக நெறிகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். நமது வேதங்களிலோ அல்லது கீதை, உபநிஷத்துக்கள் உள்ளிட்ட ஆன்மீக வழிகாட்டு நூல்களிலோ பறைசாற்றப்பட்ட உண்மைகளுக்கு எதிரானதாகும்.
“ஆத்மானாம் சர்வம் பூதானி” என்கிறது கீதை. இதன் பொருள் : எல்லாவற்றிலும் இறைவனே வதிகின்றான் என்பதுதானே? எல்லாவற்றிலும் என்றால்... படைப்பனைத்திலும் அவன் வதிகின்றான் என்பதுதானே பொருள். அது மட்டுமா? “தத் ஏகம்” என்பதன் அர்த்தம்தான் என்ன? எலியும், பூனையும் உலவும் இடத்தில் எனக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று ஜேசுதாஸ் கேட்டது வேதனைக்குரல் மட்டுமல்ல, இந்து மதத்தின் ஆன்மீக நெறிக்கு விடப்பட்ட கேள்வியுமாகும்.
குருவாயூர் கோயிலிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஊழலில் திளைத்தவன், சொந்த நாட்டு மக்களை தனது அரசியல் வசதிக்காக கொன்று குவித்தவன் என்று யார் வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களுக்கு உரிய மரியாதையும் கோயில் சார்பாகவும் அளிக்கப்படும். அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லவா? அதற்குரிய மரியாதை கொடுப்பார்கள் அங்குள்ள பூசாரிகள். ஆனால் ஜேசுதாஸூக்கு கோயிலிற்குள் நுழைய அனுமதி இல்லை! அங்கெல்லாம் பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்.
கருவறையில் உள்ள கடவுளுக்கு எப்படி பூசை செய்ய வேண்டும் என்பதைத்தான் ஆகமக விதிகள் கூறுகின்றன என்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தினரை (காட்டிக்கொள்ளாமல் எத்தனையோ பேர் சென்று வருகிறார்கள்) இதற்கு மேல் அனுமதியில்லை என்றும் ஆகமக விதிகள் கூறுகின்றனவா? அப்படியானால், சபரிமலையில் ஜேசுதாஸூக்கு அனுமதியுண்டு, குருவாயூர், கடம்பழா கோயில்களில் அனுமதியில்லையென்றால்... ஆகம விதி கோயிலிற்கு கோயில் மாறுகிறதா என்ன?
தங்களுடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகளையெல்லாம் ஆகம விதிகளைக் காட்டித்தான் இந்தப் பூசாரிக்கூட்டம் ஒளிந்துக் கொள்கிறது (மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் இதே கதைதான்).
இந்து மதத்தைச் சார்ந்தவர்களென்றாலும், அவர்களைக் கீழ் சாதி என்று கூறி கோயிலிற்குள் அனுமதி மறுத்த அதே மனப்பாங்குதான் இன்னமும் தொடர்கிறது. இதற்கு மேலும் இதனை அரசுகளும், பக்தர்களும் அனுமதிக்கக் கூடாது.
இதற்கு மேலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, இந்த இழி நிலை தொடருமானால் அது இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு இழுக்காகி, ஆன்மீக நெறிமுறைகளின் மீது நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்.