இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்த்த குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தேர்தல் கணிப்புகள் தோற்றுவித்த எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி, முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றியை அளித்துள்ளது.
காங்கிரஸிற்கும், மோடிக்கும் (அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கும்) இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றாலும் குறைந்த பட்ச பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்றே கருத்துக் கணிப்புக்களும், வாக்கெடுப்பிற்குப் பின்னர் நடந்த வாக்காளர் கணிப்புக்களும் கூறின. ஆனால், எதிர்பார்த்ததிலும் எதிர்பாராததாக தேர்தல் முடிவுகள் அமைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தேர்தல் முடிவுகள் ஒரு சில எண்ணிக்கை மாற்றங்களைத் தவிர எல்லா விதத்திலும் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளையே ஒத்துள்ளது.
2002 தேர்தலில் குஜராத் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 127 தொகுதிகளில் வென்று மோடி முதலமைச்சர் ஆனார். 2007 தேர்தலில் 10 இடங்கள் குறைவாக 117 இடங்களைக் கைப்பற்றி, முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் முதலமைச்சர் நரேந்திர மோடி. 10 தொகுதிகளை இழந்தாலும், பா.ஜ.க. பெற்றுள்ள வாக்கு விழுக்காட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை!
அசைக்க முடியாத மோடியின் பலம்!
2002 தேர்தலில் பெற்ற அதே வாக்கு விகிதத்தை இப்பொழுதும் பா.ஜ.க. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அப்போதும் 49 % , இப்போதும் 49 %
வாக்குப்பதிவு 2002 ஆம் ஆண்டை விட அதிகரித்தும், அதே வாக்கு விழுக்காட்டை மோடி பெற்றதே இந்த பெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
webdunia photo
FILE
கடுமையான போட்டியைத் தந்ததாக கூறப்பட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு விழுக்காட்டிலும் மாற்றமில்லை. கடந்த தேர்தலில் பெற்ற அதே 39 % வாக்குகளையே இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
இதேபோல, மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் பெற்ற வாக்குகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஆக, இந்தத் தேர்தல் முடிவுகள் 2002 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையே முழுவதுமாக பிரதிபலித்துள்ளது.
அப்படியானால் பா.ஜ.க.விற்கு 10 தொகுதிகள் குறைந்ததிற்கும், காங்கிரஸ் கட்சிக்கு (கூட்டணிக்கு) 11 தொகுதிகள் அதிகம் கிடைத்ததற்கும் காரணம்?
குஜராத் மாநிலத்தின் வாக்காளர்களின் போக்கைப் பிரதிபலித்திடும் 4 பெரும் பகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மத்திய குஜராத்தில் பா.ஜ.க. இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2002 தேர்தலில் மத்திய குஜராத்திலுள்ள 43 தொகுதிகளில் பா.ஜ.க. 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதற்குக் காரணம் அந்த்த் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இம்முறை முஸ்லிம் வாக்காளர்கள் மோடிக்கு எதிராக பெருமளவிற்கு வாக்களித்தனர். இதன் விளைவாக அங்குள்ள 43 தொகுதிகளில் 22 -ஐ காங்கிரஸ் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை 38 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க.விற்கு இம்முறை 18 தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. அதாவது மத்திய குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. 20 தொகுதிகளை இழந்தது. காங்கிரஸ் 17 தொகுதிகளை அதிமாகப் பெற்றது.
webdunia photo
WD
மத்திய குஜராத்தில் 20 தொகுதிகளை இழந்தாலும், தெற்கு குஜராத்திலும், காங்கிரஸிற்கு சாதமானதாக்க் கருதப்பட்ட செளராஷ்ட்ரா, கட்ச் உள்ளிட்ட மேற்கு குஜராத்திலும், கணிப்பு, எதிர்பார்புகளையெல்லாம் தாண்டி தெற்கு, வடக்கு குஜராத்திலும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் பா.ஜ.க.விற்கு (மோடிக்கு) பெரு வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான், மத்திய குஜராத்தில் ஏற்பட்ட இழப்பை (20 தொகுதிகள்) மற்ற பகுதிகளில் கூடுதலாக வென்று சிரம்மின்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் நரேந்திர மோடி.
webdunia photo
WD
மாறாக, முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவால் மத்திய குஜராத்தில் பெரு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி (+17), மற்ற பகுதிகளில் கடந்த முறை வென்ற தொகுதிகளை இம்முறை இழந்துள்ளது. தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் கூடுதலாக சில தொகுதிகளை வென்றும் அக்கட்சியால் 62 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
எந்த விதத்திலும் மோடியை காங்கிரஸால் அசைக்க முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
நரேந்திர மோடி (அவருடைய எதிர்பார்பையும் தாண்டி) இவ்வளவு பெரிய வெற்றியை சாதிக்கக் காரணமானது எது? இந்த கேள்விக்குத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவாக பதலுரைத்துள்ளன.
எப்படி மத்திய குஜராத்தில் முஸ்லிம் வாக்காளர்கள் மிகப் பெரிய அளவிற்கு திரண்டு வந்து வாக்களித்தது காங்கிரஸிற்கு வெற்றியைத் தந்ததோ, அதேபோல குஜராத்தின் மற்ற பகுதிகளில் இந்துக்கள் (குறிப்பாக மேல்தட்டு இந்துக்கள் - பட்டீதார், பட்டேல், கோளி போன்ற சமூகத்தினர்) மோடிக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாக (இந்த விவரம் கருத்துக் கணிப்பிலும் வெளியானது) வாக்களித்தனர். இதுதான், காங்கிரஸிற்கு சாதகமானது என்று கூறப்பட்ட செளராஷ்ட்ரா, கட்ச் பகுதிகளில் அக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்குக் காரணமானது.
இவர்களைப் போலவே, இடைப்பட்ட சமூகங்களும் (ஷத்திரியர் என்றைழைக்கப்படுவோரும்) மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். விளைவு : கடந்த தேர்தலில் இப்பகுதிகளில் வென்ற பல இடங்களை காங்கிரஸ் இழந்தது.
ஆக, 2002 ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட (மத ரீதியான) சமூகப் பிளவு, அந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. அன்றைக்கு ஏற்பட்ட சமூகப் பிளவு கடந்த 5 ஆண்டுகளில் மேலும் உறுதிப்பட்டிருப்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
சாதனைக்குக் கிடைத்த வெற்றியா?
மோடிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அவருடைய ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாமே என்று வாதிடலாம். அப்படியென்றால், அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 7 அமைச்சர்கள் தோற்றது ஏன்? ஆளும் கட்சி பெரு வெற்றி (3ல் 2 பங்கு) பெற்றும், அதன் அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தோற்றதற்குக் காரணம் : 1. இந்தத் தேர்தல் ஆட்சியின் சாதனையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லை, மாறாக, மதவாத அடிப்படையில் மக்களிடையே ஏற்பட்ட பிளவில் நடைபெற்றுள்ளது. 2. ஆட்சியின் சாதனையே வெற்றிக்கு காரணமென்றால், அது அடித்தட்டு மக்களை சென்றடையாத்து ஏன்? குஜராத்தின் அடித்தட்டு மக்கள் (பழங்குடியினர் உட்பட) பா.ஜ.க.வை புறக்கணித்துள்ளனர். ஆனால் அவர்கள் பா.ஜ.க.விற்கு மாற்றாக காங்கிரஸை முழுமையாக ஏற்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. அதனால்தான், முஸ்லிம்கள் பெருமளவிற்கு ஆதரவாக வாக்களித்தும் அடித்தட்டு மக்கள் முழு அளவிற்கு ஆதரவளிக்காத்தால் காங்கிரஸ் கட்சியின் வாக்குவிகிதம் அதிகரிக்கவில்லை. அதே 39% அளவிற்கே முடிந்துவிட்டது.
பல தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.க.விலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டவர்களும் கணிசமான வாக்குகளைப் பெற்றதும் (9 -11 %) நரேந்திர மோடிக்கு சாதகமானது.
எனவே மோடிக்கு ஆதரவாக ஏற்பட்ட சமூக (வாக்காளர்) ஒன்றிணைவு போன்று, அவருக்கு எதிராக வாக்களித்த சமூகங்களிடையே ஏற்படவில்லை. அதனால்தான் வாக்குப்பதிவு அதிகரித்தும், ஆதரவு - எதிர்ப்பு வாக்குகளும் அந்த சமூக பிளவை திட்டவட்டமாகப் (2002 போலவே) பிரதிபலித்ததன் காரணமாக சற்றும் எதிர்பாராத இந்த வெற்றியை மோடியால் சாதிக்க முடிந்தது.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்ட ‘வித்தை’ மற்ற மாநிலங்களிலும், தேச அரசியலிலும் செல்லுபடியாகுமா? என்பதே பா.ஜ.க.விலும், தேச அரசியலிலும் தற்பொழுது விவாதத்தில் உள்ள கேள்வியாகும்.
தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸூம், அதனோடு கூட்டணி வைத்துள்ள இதர கட்சிகளும், இடதுசாரிகளும் இந்த மோடி பார்மூலா மற்ற இடங்களிலும் செல்லுபடியாகாமல் தடுக்க இனி வரும் காலங்களில் படாத பாடு படவேண்டியதிருக்கும்.