ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது!

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:20 IST)
webdunia photoWD
காலை ஆறரை மணி : சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே திசையை நோக்கி ஒரு சேர நடந்து சென்றனர். காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கிற வேலையில் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி சென்னையிலேயே பூங்கா ரயில் நிலையத்திற்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகத்தான் இருக்க முடியும்.

அந்த அளவிற்கு வேலைக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இப்படி அதிகாலை எழுந்து ஒரு ரயிலை பிடித்து பூங்கா வந்திறங்கி, பிறகு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் புறப்படக் காத்துக் கொண்டிருக்கும் மின் ரயிலைப் பிடிக்கச் செல்வதும், இதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து அதிகாலை ரயில்களைப் பிடித்து சென்ட்ரலுக்கும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் வந்து அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து அல்லது பேருந்தைப் பிடித்து தங்களுடைய பணியிடத்திற்குச் செல்வதும்....

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்தும் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்...

இப்படி 30-40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமல்ல, வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏலகிரி விரைவு ரயிலில் சில ஆயிரம் மக்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்....

இந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணம் என்பதே ஒரு பெரும் அவஸ்தையாகும். ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு இந்த வதை தொடர்கிறது. இப்படி ஒரு இயந்திரம் போல ஒவ்வொரு நாளும் 2, 3 மணி நேரம் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பும் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையானது மட்டுமல்ல, வாழ்க்கைக்காக வேலை என்பது மாறி, வேலைக்காகவே உயிர் வாழ்வது என்றாகிவிட்டது.

பொருளாதார வாழ்க்கை என்பதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட இந்த கால கட்டத்தில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு அன்றாட இயந்திரமாகி வரும் மானுட வாழ்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவர்களும் தங்களை மனிதர்கள் என்று நினைத்துப்பார்க்க வாய்ப்பு அளிக்கும் ஒரே நாளாகிறது. அன்றும் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.

அடுத்த ஒரு வாரத்திற்கான ஆயத்த வேலைகளுக்கே அந்த நாள் போய்விடுகிறது. வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கு அன்று மட்டும் வீட்டில் இருக்கும் கணவனுக்கு சமைத்துப் போடுவதில் நேரம் போய்விடுகிறது. ஆறு நாள் வேலை + களைப்பு அந்த ஒரு நாளை முற்றிலுமான ஓய்வு நாளாகவே கழிக்கச் செய்கிறது. இதில் எந்த விதத்தில் அவர்கள் அந்த நாளை விடுமுறை நாளாக கழிக்கிறார்கள்.

webdunia photoWD
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களால் எவ்வாறு அவர்களுடைய அன்றாடப் பணிகளை (அலுவலகப் பணிகளை) செவ்வனே, திறம்படச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்தித் திறன் நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு இராது. அவர்களின் பணி தரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டாது.

ஒரு மனிதனின் பணித் திறன், பணித் தரம் ஆகிய காரணிகளை எல்லாம் நன்கு சீர்தூக்கி பார்த்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் 5 வேலை நாட்கள் கொண்ட வாரத்தை முறையாக வைத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே `அனுபவிக்க வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.

சனிக்கிழமை அனுபவிக்கும் ஒரு நாளாகவே கருதப்படுகிறது, அவ்வாறே வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நம்மைப் போலவே அடுத்த வாரத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் வேலையை வாங்குவதும் சரி, பெறப்படும் வேலை அதற்குரிய மதிப்புடன் இருப்பதை உறுதி செய்வதிலும் சரி பெருவெற்றி பெறுகின்றனர். தரமும் சிறப்பாக உள்ளது.

இதற்குக் காரணம், நன்கு ஓய்வெடுத்த உடலும், புத்துணர்வு பெற்ற உள்ளமும், அந்த இரண்டு நாள் விடுமுறையில் கிடைத்துவிடுகிறது. எனவே திறனும் தரமும் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு பெற முடிகிறது.

ஆனால், நமது நாட்டில் ஒரு பணியை முடிப்பதற்கான ஆட்கள் எண்ணிக்கைதான் இன்றளவும் பெரிதாக கவனிக்கப்படுகிறதே தவிர, திறனும், தரமும் கவனிக்கப்படுவதுமில்லை, பொருட்படுத்தப்படுவதுமில்லை. சில ஏற்றுமதி தொடர்பான பணிகளை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம். மற்றபடி நமது பணி வாழ்க்கையில் திறனுக்கும், தரத்திற்கும் குறைவான இடமே உள்ளது. அதனை வற்புறுத்திப் பெற முடியாது. காரணம் இயந்திரத் தனமான ஒரு வேலைக் கட்டமைப்பை நாம் வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசுப் பணியானாலும் தனியார் பணியானாலும் திறனை, தரத்தை முக்கிய அம்சமாக மதிப்பிடப்படுவதில்லை. இதனால் குறித்த நேரத்தில் பணிகளும் முடிக்கப்படுவதில்லை. அதில் இருக்க வேண்டிய அளவிற்கு தரமும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் மிக அடிப்படையானது பணியில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் மன, உடல் நிலைதான்.

வலிமையான, நலமான உடல், உற்சாகத்தின் ஊற்றாக மனம், திறம்பட வேலையை செய்து முடிப்பதற்கான பணியிட கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் இந்த ஆறு நாட்கள் கொண்ட வேலை வாரத்தை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக - சட்டம் போட்டாவது - அகற்றிட வேண்டும்.

ஐந்து நாட்கள் கொண்ட வேலை வாரத்தை அறிமுகம் செய்ய வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்தால் பணிக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்யும் நிலை மாறி, தங்களது கேளிக்கை, பொழுதுபோக்கு, வாங்கல், உறவினர்களை சந்தித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் ஒரு நெகிழ்ந்த உற்சாகமான ஒரு சூழல் நிலவும்.

பணி வாழ்வில் நாம் கடைபிடிக்கும் இயந்திரத் தனம் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையானத் தேவை 5 நாள் கொண்ட வேலை வாரம்.