கடமையைச் செய்யத் தவறினால் தட்டிக்கேளுங்கள் - ஆணையர் நட்ராஜ்!

Webdunia

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (15:22 IST)
சென்னை மாநகரில் ஆர்கனைஸ்ட் கிரைம் என்று கூறப்படும் அமைப்பு ரீதியிலான குற்றவாளிக் கும்பல்கள் ஏதுமில்லை என்று அடித்துக் கூறும் சென்னை மகாநகர காவல்துறை ஆணையர் ஆர். நட்ராஜ், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சென்னை மாநகரில் 30 முதல் 40 விழுக்காடு அளவிற்கு குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறுகிறார்.

வெப்உலகம்.காமிற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல

கேள்வி : கடந்த பிப்ரவரியில் சென்னை மாநகரின் காவல் எல்லை விரிவாக்கப்பட்டு புறநகர்ப் பகுதிகளில் உள்ள 41 காவல் நிலையப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 3 மாதத்தில் எந்த அளவிற்கு குற்றங்கள் குறைந்துள்ளது?

ஆணையர் ஆர். நட்ராஜ் : Visible Policing. அதுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குற்றச் செயல்கள் ஏதேனும் நடந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். சிட்டி போலீஸ் என்றாலே உடனடி நடவடிக்கை இருக்கும் என்பது அம்மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை இந்த குறுகிய காலகட்டத்திலேயே மிகச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம் என்றே கருதுகிறறோம்.

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றங்கள் தடுப்பது - கண்டுபிடிப்பது, போக்குவரத்து சீரமைப்பு ஆகியன தவிர, ஒவ்வொரு பகுதிக்கும் நல்ல கவனிப்பு கிடைக்கும். இதுதான் மாநகர காவல் ஆணையர் கீழான அமைப்பில் எல்லோரும் எதிர்பார்ப்பது.

இதனை நிறைவேற்ற சென்னை மாநகரில் உள்ள எங்களுடைய காவல் பலத்தை புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரச்சனைக்குரிய இடத்திற்கு பகிர்ந்து அனுப்பி நிலைமையை மிகச் சீராக சமாளித்து வருகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை நங்கநல்லூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை பகுதிகளும், மேற்கில் பூந்தமல்லி, குன்றத்தூர் பகுதிகளும், அதன்பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையும் பிரச்சனைக்குரியதாக அடையாளம் கண்டுள்ளோம். இதெல்லாம் கிழக்கு செங்கை காவல் மாவட்டத்தில் இருந்து சென்னையுடன் இணைக்கப்பட்டவையாகும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையை எடுத்துக்கொண்டால், அங்குதான் ரவுடிகள் பிரச்சனை அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஏராளமான சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளோம்.

இப்படிப்பட்ட துரித நடவடிக்கைகளினால் கடந்த 2, 3 மாதங்களில் புறநகர்ப் பகுதிகளில் இருந்துவந்த குற்றச் செயல்கள் தற்பொழுது 20 விழுக்காடு குறைந்துள்ளது.

கேள்வி : சென்னை மாநகரத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு வீடு புகுந்து கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளதே?

ஆணையர் : இந்த கணிப்புத் தவறானது. Perceived Crime என்று சொல்வார்களே, அதாவது உணரப்பட்ட குற்றங்கள். பல்வேறு வழக்குகள் இருந்தால்கூட ஒரு வழக்கு நம்முடைய கவனத்தை கவருவதில்லையா. இதனைத்தான் உணரப்பட்டது என்று கூறுகிறோம். பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறும் போது அவற்றை பற்றிய செய்திகள் ஊடகங்களில் திரும்பத் திரும்ப சொல்லப்படும்போது குற்றங்கள் அதிகரித்திருப்பது போல உணரப்படுகிறது.

உண்மை என்னவெனில், சென்னை மாநகரைப் பொறுத்தவரை முன்பை விட இப்பொழுது 30 முதல் 40 விழுக்காடு குற்றச் செயல்கள் குறைந்துள்ளது. இது தொடர்பான புள்ளி விவரத்தை அளிக்க முடியும். 2003 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2004 ஆம் ஆண்டில் குற்ற வழக்குகள் எண்ணிக்கை சுமார் 800 குறைந்துள்ளது. ஆனால், குற்றங்களைப் பற்றிய செய்திகள் அதிகரித்துள்ளன. அவ்வளவுதான்.

கடந்த 15 வருடங்களாக மறைந்திருந்து தனது நடவடிக்கைகளால் மிரட்டிக் கொண்டிருந்த நெல்லிக்குப்பம் ராதாகிருஷ்ணன் என்ற ரவுடியை பிடித்துள்ளோம். இதுபோல பல பழைய வழக்குகளை எடுத்து அதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து வருகிறோம். ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று கூறுவது போல, எதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, கண்டுபிடிக்க முடியாது என்று மூடப்பட்ட பழைய வழக்குகளையெல்லாம் தூசி தட்டி எடுத்து தனிப்படை அமைத்து அதில் தொடர்புடைய சமூக விரோதிகளையெல்லாம் பிடித்து வருகிறோம்.

அதனால்தான் சமீப காலமாக பார்த்தீர்களானால் பல கொள்ளைகளில் பறிகொடுத்த ஏராளமான நகைகளை கைப்பற்றி அதற்கு உரியவர்களிடம் வழங்கி வருகிறோம். 200 சவரன், 300 சவரன் என்று பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்றால், அது குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் நடக்காது.

பாம்பே குமார், ஷட்டர் வெங்கடேசன், சாலமன் போன்ற பயங்கர கொள்ளையர்களை பிடித்து அடைத்துள்ளோம்.

இதுதவிர, குற்றம் நடந்து சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை பிடித்துள்ளோம். திருவெற்றியூரில் ஒரு கொள்ளையில் 8 லட்ச ரூபாய் பறிபோனது. அது உடனே மீட்கப்பட்டது. அதேபோல, தியாகராயர் நகரில் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு தப்பிவிட்டனர். அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து 24 மணி நேரத்தில் பணத்தை மீட்டுக் கொடுத்தோம். அது மாதிரி துரித நடவடிக்கை நிறைய எடுத்து வருகிறோம்.

எனவே, வீடு புகுந்து கொள்ளையடிப்பது அதிகரித்திருப்பதாகக் கூறுவது தவறு. ஓரிரு இடங்களில் நடந்தாலும் அவைகள் ஊடகங்களினால் மிகைப்படுத்தப்படுகின்றன. அவ்வளவுதான்.

கேள்வி : புறநகர்ப் பகுதிகளை அச்சுறுத்தி வந்த எத்தனை சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளீர்கள்?

ஆணையர் : இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 220 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளோம். இதில் 40, 50 பேர் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கேள்வி : மும்பையை போல, சென்னை நகரிலும் அமைப்பு ரீதியாக இயங்கும் சமூக விரோத கும்பல்கள் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படுகிறதே?

ஆணையர் : அப்படி இங்கு இல்லை. ஆர்கனைஸ்ட் கிரைம் பிரிவென்ஷன் யூனிட் என்று வைத்துள்ளோம். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் அளவிற்கு ஆர்கனைஸ்ட் கிரைம் எதுவும் இங்கு கிடையாது.

ஜாப் ராக்கெட் என்று கூறுகிறார்களே, அயல் நாட்டில் வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி மோசடி செய்வது. அப்படிப்பட்ட கும்பல்களை பிடித்துள்ளோம். சூடானில் வேலை வாங்கித் தருவதாக மோசடி கும்பலை பிடித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். அங்கு கொண்டு செல்லப்பட்டு மோசடி செய்யப்பட்டவர்களையும் அழைத்து வந்து இன்று அவர்களுக்கு நட்ட ஈடும் பெற்றுத் தந்துள்ளோம்.

இதேபோல இன்னொரு நிறுவனம் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டரை கோடி மோசடி செய்துள்ளது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரிடம் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் என்று பணம் வாங்கிகொண்டு மோசடி செய்துள்ளனர். அவர்களைப் பற்றிய தகவல் வந்ததுமே நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் திருப்பித் தந்துள்ளோம்.

ஆதிகேசவன் கதை உங்களுக்குத் தெரியும். புகார் வந்த உடனேயே நடவடிக்கை எடுத்துள்ளோம். இதெல்லாம் ஒயிட் காலர் கிரைம்தான். இதுதான் பிரச்சனையே. ஆனால் நீங்கள் எதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.

கேள்வி : ஆர்கனைஸ்ட் கிரைம் என்றால். . . கூலிப்படைகள். இங்கு இல்லையா?

ஆணையர் : அப்படி எதுவும் இங்கு இல்லை. சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் அளவிற்கு யார் செயல்பட்டாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவோம். ஆதிகேசவன் மிரட்டுவதாக புகார் வந்த உடனேயே நடவடிக்கை எடுத்துவிட்டோம். தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

சென்னை மாநகரில் 60 லட்சம் பேர் உள்ளனர். புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் 80, 90 லட்சம் பேர் ஆகிவிடுகிறது. இவ்வளவு பெரிய பகுதியில் எங்கெங்கு என்னென்ன நடக்கிறது என்பது எங்களுடைய காதுகளுக்கு எட்டிய உடனேயே நடவடிக்கை எடுக்கின்றோம்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கக் கூடிய சமூக விரோதிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. அவர்கள் சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் விட்டுவைக்க மாட்டோம்.

கேள்வி : கூலிப்படை போன்ற அச்சுறுத்தல்கள் சென்னையில் இல்லவே இல்லை என்கின்றீர்களா?

ஆணையர் : நிச்சயம் இல்லை. அப்படி யாராவது இருந்தால் தகவல் கொடுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். உங்கள் வழியாக நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புவது, சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்பதே. உங்களைப் பற்றி எதுவும் கூறவேண்டாம். அவர்களைப் பற்றிய தகவல்களை மட்டும் கொடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்கள் பொறுப்பு, கடமை. செய்யத் தவறினால் தட்டிக்கேளுங்கள்.


கேள்வி : கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் நடந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா?

ஆணையர் : சட்டம்-ஒழுங்கு குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சொத்து சம்பந்தப்பட்ட குற்றங்கள், வாகனத் திருட்டு என்று எல்லா குற்றங்களுமே குறைந்துள்ளது.

சொத்து சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 1,700 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த ஆண்டு 1,200 வழக்குகள் மட்டுமே முதல் 5 மாதங்களில் பதிவாகியுள்ளது.

வாகனத் திருட்டு அதிகமாக இருந்தது. சென்னை மாநகரில் மட்டும் 20 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இதனால் வாகன திருட்டு அதிகமாக இருந்தது. வண்டிகளை ஆங்காங்கு நிறுத்திவிட்டு போகிறோம். திருடர்களுக்கு இது நல்வாய்ப்பாக ஆகிவிடுகிறது. Opportunity of Crime ஏற்படுகிறது. அதாவது திருடுவதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. இது ஆர்கனைஸ்ட் கிரைம் அல்ல. இப்படிப்பட்ட திருட்டுகள் பொதுவாக வாகன உரிமையாளர்களின் அஜாக்கிரதையினால் ஏற்படுகிறது.

சென்னை கடற்கரையில் வார விடுமுறை நாட்களில் பல வாகனங்கள் திருடு போயுள்ளது. இதனைத் தடுப்பதற்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வாகனத் திருட்டை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம். முன்னர் எல்லாம் டாக்ஸ் டோக்கன் இருந்தது. இப்பொழுது அதுவும் இல்லை. எனவே, எல்லா இடங்களிலும் ஆங்காங்கு உள்ள தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் வாகன காப்புக் குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறோம். இதனால் வாகன திருட்டு கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

ரயில்வே ஸ்டேஷன், பெரும் வங்கிகள் ஆகிய இடங்களில் அவர்களிடமே பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யச் சொல்லி வலியுறுத்தியுள்ளோம்.

நீங்கள் கூறிய வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குற்றங்கள். இதனைத் தடுக்க குடியிருப்புப் பகுதிகளில் வெல்ஃபர் அசோசியேஷன்களை ஏற்படுத்தி அவர்களோடு இணைந்து அப்படிப்பட்ட குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். உதாரணத்திற்கு அண்ணா நகரை எடுத்துக்கொண்டால் தெரு முனைகளில் டிராப் கேட்ஸ் அமைத்து அன்னியர்கள் யாரும் கேள்வி முறையின்றி நுழைந்துவிடாமல் தடுத்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் குற்றங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

கேள்வி : பெண்களுக்கு எதிரான வன்முறைகள். பாலியல் ரீதியான கிண்டல்கள், தொலைபேசி தொந்தரவுகள், ராக்கிங் போன்றவை. எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து இப்படிப்பட்ட குற்றங்களை தடுக்கின்றீர்கள்?

ஆணையர் : தொலைபேசி வாயிலான தொந்தரவுகள், செல்பேசிகளின் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் எஸ்.எம்.எஸ். போன்றவை இவற்றையெல்லாம் தடுக்க விமன்ஸ் ஹெல்ப் லைன் 1091க்கு தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படிப்பட்ட குற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான மனுக்கள் வந்தன. அவைகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இரவு நேரங்களில் நிகழும் குற்றங்களைத் தடுக்க சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 2,000 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கால் செண்ட்டர்கள், கணினி மையங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் பெண்கள் எவ்வித அச்சமும் இன்றி போய்வருகிறார்கள்.

பெண்களினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்தவே விமன்ஸ் ஹெல்ப் லைன் வசதியை அளித்துள்ளோம். இப்படிப்பட்ட வசதி பெற்றுள்ள ஒரே நகரம் சென்னைதான். இதுமட்டுமின்றி, காவல் உதவி மையங்கள் மிக அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கிவரும் ஒரே நகரம் சென்னைதான்.

இங்கு இயங்கிவரும் எங்களுடைய அதிநவீன கட்டுப்பாட்டு அறைக்கு (Modern Control Room) தகவல் கொடுத்துவிட்டால் போதும், உங்களுடைய பாதுகாப்பு எந்த நேரமாக இருந்தாலும், எந்த பகுதியாக இருந்தாலும் உடனடியாக உறுதி செய்யப்படும். கவலைப்படத் தேவையில்லை.

நீங்கள் தொலைபேசியில் கூறும் புகார்களை பெற்று உடனடி நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பிடும் பணியை தன்னார்வ பணியாளர்கள்தான் செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு இட வசதி, தொடர்பு வசதி அனைத்தையும் அளித்துள்ளோம்.

கேள்வி : தன்னார்வ பணியாளர்கள் என்று கூறுகிறீர்களே. அவர்கள் யார்?

ஆணையர் : ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதைச் சேர்ந்தவர்கள்தான் எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்களை வைத்துத்தான், விமன்ஸ் ஹெல்ப் லைன் மட்டுமல்ல, வயதானவர்களுக்கு உதவ எல்டர்லி ஹெல்ப் லைன், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி ஹெல்ப் லைன், சிறுவர்களுக்கு உதவ சில்ரன்ஸ் ஹெல்ப் லைன் (எண் 1098) ஆகியவையும் இயங்குகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் இருந்து இயங்குமாறு செய்துள்ளோம்.

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். எங்களுக்குத் தகவல் தந்தால் போதும், பிரச்சனைக்குரிய அந்தப் பகுதிக்கு உடனடியாக நாங்கள் வந்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி : காவல் நிலைய அத்துமீறல்கள். காவல் நிலையத்திற்கு பெரும்பாலோர் துணிந்து செல்வதில்லை. காவல்துறையினரின் நடத்தையில் இருக்கும் ஒருவித முரட்டுத்தனம். சுதந்திரம் பெற்றும் 50 ஆண்டுகள் ஆகியும் மாறாதிருப்பது ஏன்? அயல்நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது காவல் துறையினரின் நடத்தை அச்சம் தருவதாகவும், வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது. உதாரணத்திற்கு, மரியாதையின்றி கேள்வி கேட்பது. நிற்கவைத்தே பேசுவது. மிரட்டும் தொணியிலேயே விவரத்தை கேட்டறிவது. உதவி செய்ய வந்தவரையே விரட்டுவது போன்றதெல்லாம்...

ஆணையர் : இதெல்லாம் இப்பொழுது பெருமளவிற்கு குறைந்துவிட்டது. அப்படி நடந்துகொள்ளக்கூடாது என்றும், காவல் நிலையம் வருபவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கின்றோம்.

வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே உள்ள மனப்பான்மை இது. அதனை மாற்ற அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும். நான் இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். எல்லோருமே காவல் துறையினரை கடுமையாகக் குறை கூறுகிறார்கள். மோசமாக சித்தரிக்கிறார்கள். பிறகு அவர்களிடமே பாதுகாப்பு வேண்டும் என்று வருகிறார்கள். அவர்களைப் புரிந்து நடந்துகொள்வதில்லை. அவர்களுடைய பணி சிரமங்களை உணராமலே பேசுகிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மையும் மாறவேண்டும்.

காவல் நிலையம் வருபவர்களிடம் தவறாக நடந்த காவலர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இது வெளியில் தெரிவதில்லை.

பொதுமக்கள் காவல் நிலையம் வரவேண்டும் என்பதற்காகவே காவல் நிலையங்களில் இப்பொழுது வரவேற்பு அலுவலர்களாக பெண்களையே நியமித்துள்ளோம். நிலைமை நன்கு மாறி வருகிறது. அதனை உணர்வீர்கள்.

கேள்வி : அடுத்த ஓராண்டிற்கு உங்களுடைய இலக்கு என்ன?

ஆணையர் : கிரைம் ரேட்டை குறைப்பதுதான் முதல் இலக்கு. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் நடந்த குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவது. வேகமான குற்ற விசாரணை.

உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். சமீப நாட்களில் கொலை, கொள்ளை போன்ற கொடும் குற்றங்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளை மிகக் குறுகிய காலத்தில் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து தண்டனையும் பெற்றுத் தந்துள்ளோம்.

ஒரு வழக்கில் 48 நாட்களில் தண்டனை. மற்றொன்றில் 30, இன்னொரு வழக்கில் 26, இன்னொன்றில் 24 என்று கடைசியாக ஒரு கொலை வழக்கில் 16 நாட்களிலேயே வழக்கை முடித்து தண்டனையையும் வாங்கித் தந்துவிட்டோம்.

இதன்மூலம் நான் சொல்ல வருவது இதுதான். நம்முடைய குற்றத் தடுப்பு அமைப்பு இயங்குகிறது (Our Criminal Administration Systems Works) என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறேன். நீங்கள் கூறியது போல அடுத்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு காவல் நிலைய சேவைகளின் தன்மை உயரும் என்று உறுதி கூறுகிறேன். இதற்காக மனிதவள மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

கேள்வி : சென்னை மகா நகர மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ஆணையர் : காவல்துறை உங்கள் பக்கம். உங்களுடன் எப்போதும் உடனிருப்போம். என்ன பிரச்சனையாக இருந்தாலும் எங்களை அணுகுங்கள். 100 விழுக்காடு உடனடி நடவடிக்கையை காணலாம்.

வீட்டை பூட்டிவிட்டுச் செல்கிறீர்களா? காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு செல்லுங்கள். பூட்டப்பட்ட வீடுகள் பதிவேடு என்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ளது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

சென்னை மாநகரம் ஒரு பாதுகாப்பான நகரம். சென்னை மகா நகர காவல்துறை ஒரு மேம்பட்ட காவல்துறை என்பதை உணருங்கள்.



வெப்துனியாவைப் படிக்கவும்