இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்த வரைவை ஏற்பதற்கில்லை என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரி கட்சிகளும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது பெரும் அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது!
PIB Photo
PIB
123 ஒப்பந்த வரைவு இந்தியாவின் அனைத்து தேவைகளையும் சரியாக அலசி ஆராய்ந்து கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா கடைபிடித்து வரும் அணு சக்திக் கொள்கையிலோ அல்லது ராணுவ ரீதியிலான அணு சக்தித் திட்டங்களை பாதிப்பதாகவோ இல்லை என்று இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய அரசுக் குழுவின் தலைவரும், தேச பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே. நாராயணன் கூறியிருந்தார்.
123 ஒப்பந்த வரைவு நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று பா.ஜ.க. கூறியுள்ளது. எதிர்காலத்தில் நமது பாதுகாப்புத் தேவையைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை நடத்த முற்படும் போது இந்த ஒப்பந்தம் தடையாகிவிடும் என்று அக்கட்சி கூறுகிறது.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்ந்தத்தின் மூலம் நாம் கடைபிடித்து வரும் சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை திசை திருப்புவது மட்டுமின்றி, அமெரிக்காவின் மேலாண்மைக்கு இந்தியாவை அடிமைப்படுத்துவதாக உள்ளது என்றும், எனவே அதனை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிகள் கூறுகின்றனர்.
PIB Photo
PIB
இந்த நிலையில், இடதுசாரி தலைவர்களுடன் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்தவித விட்டுக் கொடுத்தலும் இன்றி கெளரவமான வகையில் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டது மட்டுமின்றி, இப்பிரச்சனையில் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று இடதுசாரிகள் முடிவெடுத்தால், அதனைச் செய்யட்டும் என்று கடுமையாகக் கூறியுள்ளது, இந்த அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
அப்படிப்பட்ட அச்சுறுத்தல் உள்ளதா?
webdunia photo
FILE
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்த வரைவு வெளிப்படையாக பொதுப் பார்வைக்கு வைக்கப்பட்டுவிட்டது. அதனை இறுதி செய்வதற்காக வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் ஒவ்வொரு கட்டத்திலும் உடனிருந்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நமக்கு ஏற்றதா? இல்லையா? என்பதை நமது அணு சக்தி விஞ்ஞான சமூகத்தின் பார்வையில் இருந்துதான் முடிவு செய்வது சரியாக இருக்கும்.
123 ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்டதற்குப் பிறகு அதன் மீது செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, "இந்த ஒப்பந்தம் (123) திருப்தி அளிக்கிறது" என்று அனில் ககோட்கர் பதிலளித்துள்ளார். மும்பையிலும், அதன்பிறகு ஆந்திரத்தில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகும் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதே கருத்தை அனில் ககோட்கர் கூறியிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இந்தியா மேற்கொண்டுவரும் 3 கட்ட அணுத் திட்டத்திற்கோ அல்லது நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொண்டுவரும் ராணுவ ரீதியிலான அணு ஆராய்ச்சிகளுக்கோ 123 ஒப்பந்த வரைவு எந்தவிதத்திலாவது இடையூறாக இருக்கும் என்று கருதியிருந்தால், "இந்த ஒப்பந்தம் திருப்தி அளிக்கிறது" என்று அனில் ககோகட்கர் கூறியிருக்கமாட்டார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, எந்தெந்த அணு மின் உலைகளை சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றதோ அவற்றிற்கு அமெரிக்கா அளிக்கும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் அணுக் கழிவை (Spent Fuel) மறு ஆக்கம் செய்து (Re-Processing) நமது வேக ஈனுலைகளில் (Fast Breader Reactors - FBR) பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. அதாவது, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தும் நமது உரிமை (Right to Re-Process) ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
PIB Photo
PIB
ஆனால், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை (அணுக் கழிவை) மறு ஆக்கம் செய்யும் மையத்தை தனியாக நிர்மானித்து அதனை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத்தான், இந்த ஒப்பந்த வரைவு இறுதி செய்வதில் ஏற்பட்ட முக்கியத் திருப்பம் என்று அமெரிக்க அரசின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்திய குழுவிற்கு தலைமை வகித்த யு.எஸ். சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியிருந்தார்.
யுரேனியம் வழங்கல் தடைபடாது!
அதுமட்டுமல்ல, நமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நாம் அணு குண்டு சோதனை நடத்தினாலும், இந்த ஒப்பந்தத்தின் படி நமது அணு மின் உலைகளுக்கு அளிக்கும் யுரேனியம் எரிபொருள் வழங்கலை நிறுத்தக்கூடாது என்ற கண்டிப்புடன் இந்த வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1971 ஆம் ஆண்டு இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதன் காரணமாக, தாராபூரில் உள்ள அணு மின் உலைக்கு வழங்கப்பட்டு வந்த யுரேனியம் எரிபொருளை அமெரிக்கா நிறுத்தியது. அப்படிப்பட்ட சூழல் எந்த நிலையிலும் ஏற்படாது என்று இந்த ஒப்பந்த வரைவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
webdunia photo
FILE
இதைத்தான் எமது இணையதளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், விஞ்ஞானியுமான டாக்டர் பல்தேவ் ராஜ் குறிப்பிட்டிருந்தார். அதாவது, நமது அணு மின் நிலையங்களுக்கு யுரேனியம் வழங்கல் எந்த நிலையிலும் நிறுத்தப்படமாட்டாது என்கின்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.
இது நமது அணு எரிபொருள் தேவைக்கான ஒப்பந்தம் மட்டுமே என்பதில் நமது விஞ்ஞானிகள் தெளிவாக உள்ளனர். அணு எரிபொருள் கழிவை மறு ஆக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பாக நெருடலான சில விதிமுறைகள் இந்த ஒப்பந்த வரைவில் உள்ளது என்று விஞ்ஞானி ஏ.என். பிரசாத் கூறியுள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
நமக்குத் தேவை எரிபொருள்! அமெரிக்காவிற்குத் தேவை இந்தியா!
சர்வதேச அளவில் அணு சக்தி ஆய்வுகளுக்கான தொழில்நுட்பத்தைப் பெறுவதிலும், எரிபொருளைப் பெறுவதிலும் இதுநாள் வரை நீடித்துவரும் தடைகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தவிடுபொடியாகின்றது என்பது முக்கியமானது.
இரண்டாவதாக, நமது எரி சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் 1,300 கிகாவாட் (ஒரு கிகாவாட் = 1,000 மெகாவாட்) தேவை என்ற நிலையில் உள்ள நமது நாடு, அந்த அளவிற்கு மின் உற்பத்தியை பெருக்க வேண்டுமெனில் அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் திறன் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். அதற்கு எரிபொருளும், அதற்கான தொழில்நுட்பத் தேவைகளுக்கு இந்த ஒப்பந்தம் அவசியமாகிறது.
இந்த ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது நமது நாட்டின் இறையாண்மையையே அமெரிக்காவால் படுத்திவிட முடியும் என்று நினைப்பது நிச்சயம் பகல் கனவே என்பது விவரம் தெரிந்த அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.
நமக்கு எந்த அளவிற்கு எரிபொருளும், அணுத் தொழில்நுட்பமும் தேவைப்படுகிறதோ, அதைவிட அதிகமாக, ஏன் பன்மடங்கு அதிகமாக அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப்படுகிறது.
இந்த அணு சக்தி ஒத்துழைப்பின் வாயிலாக அந்நாட்டின் அணு சக்தி தொழில்நுட்ப நிறுவனங்கள் வணிக ரீதியாக பெரும் பயனடையவுள்ளன. அந்நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே மும்பைக்கும், டெல்லிக்கும் பறந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த வணிகத் தேவை, நமது எரிபொருள் தேவையை விட மிகப் பெரியது.
அது மட்டுமின்றி, இன்றைக்கு உள்ள சர்வதேசச் சூழலில், இந்தியாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நெருங்கிய ஆதரவும், ஒத்துழைப்பும் பல்வேறு சர்வதேசப் பிரச்சனைகளில் அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது. எனவே, இந்த ஒப்பந்தம் எந்தவிதத்திலும் ஒருதலைப்பட்சமானது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இரு நாடுளின் தனித்த நலன்களை கருத்தில் கொண்டே நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெறக்கூடிய விவாதத்தி்ல் பிரதமர் மன்மோகன் சிங் இவைகளை தெளிவாக விளக்குவார் என்பதனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டுதான் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் புரிந்துகொள்ளும் அளவிற்கு பிரதமரின் விளக்கம் அமைய வேண்டும்.
அதே நேரத்தில், அமெரிக்கா, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இறையாண்மை என்றெல்லாம் கூறி அரசியல் ரீதியாக இந்த ஒப்பந்தத்தை பார்ப்பதைத் தவிர்த்து இந்நாட்டின் எதிர்காலத்திற்கு இது அவசியமா இல்லையா என்பதனை எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலை ஒதுக்கிவிட்டு, நாட்டின் எதிர்காலம் முன்னுரிமை பெறவேண்டும். அதுவே சரியானது.