123 ஒப்பந்தம் : நெருடலான சமரசம்!

Webdunia

ஞாயிறு, 29 ஜூலை 2007 (22:04 IST)
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் நாம் எதிர்பார்த்ததைவிட சாதகமாக வந்துள்ளது என்று தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை!

123 ஒப்பந்தத்தின் உள்ளீடுகளை வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் விளக்கிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறியுள்ளார்.

ஒன்று, இந்த ஒப்பந்தத்தின்படி நமது சமூக ரீதியிலான அணு மின் சக்தி நிலையங்களுக்கு அமெரிக்கா அளிக்கும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்திவிட்டு மறுஆக்கம் செய்ய, தனித்த மறு ஆக்க மையத்தை உருவாக்கி, அதனை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர இந்தியா ஒப்புக்கொண்டதும்;

இரண்டு, அமெரிக்க அணு சக்தி சட்டத்தின்படி, எதிர்காலத்தில் இந்தியா அணுச் சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுள்ள அணு தொழில்நுட்பத்தையும், எரிபொருளையும் திருப்பித் தர சம்மதித்ததும் ஆகும் என்று நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறுஆக்கம் செய்யும் உரிமையை அளிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது 123 ஒப்பந்தத்திற்கு பெரும் தடையாக இருந்த நிலையில், அமெரிக்காவின் நெருக்குதலை ஏற்றுக்கொண்டு அப்படிப்பட்ட மறுஆக்க மையத்தை தனியாக உருவாக்கி அதனை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர இந்தியா சம்மதித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறுஆக்கம் செய்வதற்கு தனி மையம் அமைக்க வேண்டும் என்று இந்தியாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியபோது, அதனை ஏற்க முடியாது என்றும், அமெரிக்காவின் வசதிக்காக இந்தியா வளைந்து போகவேண்டிய அவசியம் இல்லை என்றும் நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி காட்டமாகக் கூறினார்.

ஆனால், அந்த நிலைப்பாட்டை தற்பொழுது இந்தியா சமரசம் செய்துகொண்டுள்ளது. அதனால்தான் தனித்த மறுஆக்க மையம் உருவாக்குவதற்கு இந்தியா சம்மதித்ததே ஒப்பந்தம் உருவாக்குவதில் திருப்புமுனையாக இருந்தது என்று நிக்கோலாஸ் பர்ன்ஸ் வர்ணித்ததற்குக் காரணமாகும்.

இரண்டாவதாக, எதிர்காலத்தில் அணுச் சோதனை நடத்தும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட தொழில்நுட்பத்தையும் (அணு உலைகளையும்), அதற்கான எரிபொருட்களையும் திருப்பித்தர இந்தியா சம்மதித்துள்ளது என்பதாகும்.

இது நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த உறுதிமொழிக்கு முரண்பட்டதாகும். அணு சக்திக் கொள்கையிலும், இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு குறித்த முடிவுகளிலும் எந்தவிதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் கூறினார். ஆனால், இன்று அந்த நிலை விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றுள்ள பாதுகாப்புச் சூழலில் அணு ஆயுதச் சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்படாமல் போகலாம், எதிர்காலத்தில் அப்படிப்பட்டச் சூழல் உருவாகும் போது நமது பாதுகாப்பை உறுதி செய்ய முன்னேறிய அளவிலான அணுச் சோதனை செய்வதே நமது நாட்டின் எதிரிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதனை மறுக்க இயலாது.

இன்றுள்ள உலகச் சூழலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் அமைப்பு ஒருபுறத்தில் ஆதிக்க கோஷ்டியாக இருந்தாலும், அவைகளை எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த மற்றொரு உலக அமைப்பு இல்லை என்பது உண்மையே. ஆயினும், நேட்டோவின் ஆயுத பல அதிகரிப்பை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

நேட்டோ நாடுகளில் அமெரிக்கா நிறுத்த முடிவெடுத்துள்ள அதிநவீன ஏவுகணைகள் தங்களின் பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது மட்டுமின்றி, இப்பிரச்சனையில் இணக்கமான முடிவு எட்டப்பட முடியாத நிலையில், அதற்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளது.

எனவே, உலக அளவில் மீண்டும் பனிப்போர் காலம் துவங்கும் நிலை நிதர்சமாக உள்ளது. ரஷ்யாவின் கடுமையான நிலைப்பாட்டின் காரணமாகவே, ஈராக்கில் புகுந்தது போல ஈரான் விஷயத்தில் அமெரிக்கா செயல்பட முடியாமல் தடுத்து வருகிறது என்பதனை கவனிக்க வேண்டும். இந்த நிலை, அதாவது இப்பொழுதுள்ள இந்த பாதுகாப்புச் சூழல் ஓராண்டிலோ அல்லது குறுகிய எதிர்காலத்திலோ மேலும் மோசமடையும் பட்சத்தில் இந்தியா தனது பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளும் அவசியம் நேரிடும். அப்படிப்பட்ட நேரத்தில் அணுச் சோதனை அவசியமாகலாம். ஆனால், அதனை கருத்தில் கொள்ளாமல் 123 ஒப்பந்தத்திற்காக விட்டுக் கொடுத்திருப்பது அரசியல், பாதுகாப்பு ரீதியிலான தேர்ந்த நடவடிக்கையாகத் தெரியவில்லை.

அமெரிக்காவுடனான நட்பு என்பது அந்நாட்டின் அயலுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு நமது சுயச் சார்பை எந்த அளவிற்கு விட்டுத் தருகிறோம் என்பதனைப் பொறுத்ததாகும். அது நமது இறையாண்மைக்கும், சுதந்திரமான அயல் செயல்பாட்டிற்கும் அனுகூலமானதாக இருக்காது. எனவே, இந்த இரண்டு விட்டுக் கொடுத்தல்களும் ஏற்கத்தக்கதல்ல. இதன் விளைவு நமது பாதுகாப்பிற்கும், சுயச்சார்பிற்கும் எதிர்காலத்தில் ஒரு சவாலை உருவாக்கப் போவது நிச்சயமே!

வெப்துனியாவைப் படிக்கவும்