3,000 சீக்கியர் படுகொலை! யார் குற்றவாளி?

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (15:46 IST)
கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத வினோத நாடு நமது இந்தியா.

இந்த நாட்டில்தான் ஒரு தலைவர் தாக்கப்பட்டுவிட்டாலோ அல்லது படுகொலை செய்யப்பட்டாலோ உள்ளூர் காவல்துறையில் இருந்து மத்திய புலனாய்வுக் கழகம் வரை ஈடுபடுத்தப்படுவது மட்டுமின்றி, அப்படிப்பட்ட குற்றங்களுக்கு அந்நியப் பின்னணி இருப்பின், நமது நாட்டின் அயல் நாட்டு உளவுப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளோம்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தனது இல்லத்தில் தன்னுடைய மெய்க்காப்பாளர்களாலேயே அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். மற்ற இருவர் பிறகு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றவும் பட்டுவிட்டது.

ஆனால், இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர்கள் சீக்கியர்கள் என்பதற்காகவே, டெல்லியில் இருந்த சீக்கியர் மீது காங்கிரஸார் திட்டமிட்டு நடத்திய தடையற்ற வன்முறையில் 4,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்திரா காந்தி படுகொலையுடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட கொடூர வன்முறையை 3 நாட்கள் தங்குதடையின்றி நடத்தியவர்கள் யாராவது ஒருவர் இதுவரை தண்டிக்கப்பட்டுள்ளார்களா?

ஒருவரும் இல்லை!

சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியவர்கள் என்று இன்றைக்கு பதவி விலகியுள்ள ஜக்தீஷ் டைட்லர், சஜன்குமார் ஆகியோரும், மத்திய முன்னாள் அமைச்சர் எச்.கே.எல். பகத், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தரம்தாஸ் சாஸ்திரி (இப்பொழுது உயிரோடு இல்லை) மற்றும் லலித் மக்கான் (பஞ்சாப் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்) ஆகியோர்தான் என்று வன்முறைக்கு ஆளானவர்களில் இருந்து கலவரத்தை தங்கள் கண்களால் கண்ட பத்திரிக்கையாளர்களில் வரை பலரும் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

கலவரம் குறித்து விசாரணை நடத்த ஒன்று, இரண்டல்ல, 9 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அவைகளால் என்ன நியாயம் வழங்கப்பட்டது?

சீக்கியர்கள் மீது நடந்த கலவரம் தொடர்பாக 587 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 11 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. 3 திரும்பப் பெறப்பட்டது. 241 முதல் தகவல் அறிக்கைகள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மூடப்பட்டன. நடந்த வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட 253 பேர் விடுவிக்கப்பட்டனர். 25 வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிலும் தங்களது கடமை தவறியதாக காவல்துறையினரே கண்டிக்கப்பட்டனர். 42 வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

மொத்தத்தில் 3,000 சீக்கியர்கள் வேட்டையாடப்பட்ட கொடூரத் தாண்டவத்தில் ஈடுபட்ட ஒருவன் கூட இன்று வரை தண்டிக்கப்படவில்லை. வேறு எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளதா?

சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைபடுத்துவோம் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஜனநாயக நாட்டில் 3,000 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு யாருமே தண்டிக்கப்படாதது எவ்வளவு பெரிய அவமானம்.

வெள்ளையன் ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. அதற்கு காரணமான ஜென்ரல் டையர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் (பிந்நாளில் ஜென்ரல் டையரை பகத் சிங் சுட்டுக் கொன்றார்). ஆனால், டெல்லி படுகொலைகளுக்கு ஒருவர் கூட பொறுப்பாக்கப்படவில்லை என்பதுதான் சுதந்திர இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைக்குனிவு ஆகும்.

சீக்கியர் படுகொலை குறித்து விசாரணை நடத்திய நீதிபதி நானாவதி ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த அன்றைய டெல்லி துணை நிலை ஆணையர் பி.ஜி. கவாய், கலவரத்தை தடுக்க இராணுவத்தை அனுப்புமாறு அன்றைய உள்துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவை தான் நேரில் சந்தித்து கேட்டுக்கொண்ட பின்னும் ("பார்க்கலாம்" என்று நரசிம்மராவ் பதிலளித்தாராம்) அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பை வைத்துள்ள (டெல்லியின்) துணை நிலை ஆளுநர், இராணுவத்தை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்?

இந்தக் கேள்விக்கு நேரடியான பதிலை அன்றையப் பிரதமர் ராஜீவ் காந்தியே வழங்கியுள்ளார்.


தனது தாயார் படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் :

"மிகப்பெரிய விருட்சம் ஒன்று பெயர்ந்து விழும் பொழுது அந்த நிலம் சற்று அதிரவே செய்யும்" என்று கூறினார்.

"ஜப் பர்கத் கா பர் கிர்தா ஹை, தோ தர்த்தி ஜரா ஸீ ஹில்தி ஹை" என்று ராஜீவ் கூறினார். அதாவது, இந்திரா காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இப்படிப்பட்ட ஓர் எதிர் விளைவை (படுகொலையை) உருவாக்கத்தான் செய்யும் என்று நேரான பொருளில் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

இப்பொழுது புரிகிறதா? டெல்லி கலவரத்திற்கு யார் காரணம்? ஏன் அந்தக் கலவரம் 3 நாட்கள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டது? எதனால் டெல்லி துணை நிலை ஆளுநர் கேட்டுக் கொண்டதற்குப் பின்னும் இராணுவம் அனுப்பப்படவில்லை? என்பது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது டெல்லியில் இருந்த அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும், நீதிபதி நானாவதி ஆணையம், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் இதற்கு பொறுப்பு என்று எந்த இடத்திலும் கூறவில்லை. சிலரை மட்டுமே சுட்டிக்காட்டி, அவர்கள் கலவரத்தை தூண்டியதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கிறது என்று மட்டுமே கூறியுள்ளது.

அதனால்தான், நானாவதி அறிக்கை தங்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்று சீக்கிய சமூகம் கொதித்துப் போய் உள்ளது. நீதிபதி நானாவதி முன்பு 2,557 வாக்குமூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரா காந்தி படுகொலையில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத தங்களுடைய உறவினர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகம் எதிர்பார்க்கிறது.

தங்கள் உறவுகளை இழந்து 21 ஆண்டுக் காலமாக நியாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சீக்கிய சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை.

சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளும் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். அதற்கு என்று தனி நீதிமன்றம் அமைத்து வேகமாக விசாரணை நடத்தி குற்றவாளிகள், அவர்கள் யாராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்