இருபத்தி ஐந்து லட்சம் பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்

லாட்டரி தடையால் பாதிக்கப்பட்டு இருண்டு கிடக்கும் இருபத்தி ஐந்து லட்சம் பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என்று லாட்டரி சிறு வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் ஊனமுற்றோர் நலச் சங்கத் தலைவர் கே. இரத்தினம் உருக்கமான பேட்டியளித்துள்ளார்.

கேள்வி : கடந்த ஆறு மாத காலமாகவே லாட்டரி மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கூக்குரல் வேகமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. உங்கள் போராட்டத்தின் பின்னணி பற்றி சொல்லுங்கள்.

பதில் : இது அரசியல் போராட்டமோ அல்லது நவீன வசதிகள் வேண்டி நடத்தப்படும் போராட்டமோ அல்ல. மேலும் போராட்டம் நடத்துபவர்களும் கோடீஸ்வரர்களோ குபேரர்களோ அல்ல. அன்றாடம் காய்ச்சிகள் தான் இந்த போராட்டத்தின் கதாநாயகர்கள். தடையை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை பற்றி பேசுவதற்கு முன் லாட்டரி தொழிலின் வரலாற்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மக்கள் நலத்திட்டங்களுக்காக நிதி வருவாயை அரசுக்கு பெருக்கும் நோக்கத்தோடு, அதையும் நேரடி வரியாகப் போடாமல் மறைமுக வரியாக (லாட்டரி சீட்டு வாங்குவதன் மூலம் பொதுமக்கள் செலுத்தும் மறைமுக வரி) அரசுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார். 1968-க்கு முன் லாட்டரி அண்டை மாநிலங்களில் நடந்து கொண்டிருந்தது. தமிழகத்தின் பணம் பிற மாநிலத்திற்குச் செல்லக் கூடாது என்று கருதிய அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா ஒரு ஏழை ரூ.1 அல்லது ரூ.2 கொடுத்து வாங்கும் (லாட்டரி) சீட்டுக்கு ஒரு லட்சம் முதல் பரிசாக, லட்சாதிபதியாகும் வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

அதிர்ஷ்டத்தின் மூலம் (திருடியோ அல்லது யாரையும் ஏமாற்றியோ அல்ல) லட்சாதிபதியாகும் வாய்ப்பு, லாட்டரி மீது பொதுமக்களின் வரவேற்பை அதிகப்படுத்தியது. லாட்டரி சீட்டு விற்பனையில் வேலை கிடைக்காத எத்தனையோ இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர் (குறிப்பாக கண் பார்வையற்றோர்) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சிறு தொழிலாக ஏன்? சுய தொழிலாக சிறிய முதலீட்டில் கடந்த 35 வருடங்களாக இந்த லாட்டரி தொழிலையே பிழைப்பாக நடத்தி வந்த ஏழை எளிய மக்கள் அதன் மூலம் தங்கள் வயிற்று பாட்டுக்கு வழி தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான் 08-01-2003 அன்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு ஒட்டு மொத்தமாக லாட்டரிக்கு தடை விதித்தது. எங்கள் பிழைப்பில் மண் விழுந்தது. லாட்டரி தொழிலை செய்து வந்த சிறு வியாபாரிகளான ஆறு லட்சம் பேர், அவர்களை சார்ந்த (குடும்பத்தார்) இருபத்தி ஐந்து லட்சம் பேர் ஆகியோரின் வாழ்வு இருண்டு கிடக்கிறது. அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற நடக்கும் ஒரு வாழ்வுரிமை போராட்டம் தான் இது.

கேள்வி : லாட்டரி தொழிலில் ஏகப்பட்ட மோசடிகள் நடப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு சாரார் கோடிகளை குவித்து, அரசுக்கு நட்டமேற்படுத்தியதால் தான் இந்த தடை வந்ததாகவும் கூறப்படுவது பற்றி! . . .

பதில் : மற்ற எல்லா துறைகள் போலவே இதிலும் தவறுகள் உள்ளதை மறுக்க முடியாது. லாட்டரி துறையில், பிற துறைகளில் உள்ளது போலவே சில சுயநலச் சக்திகள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மோசடிகள் புரிந்திருக்கலாம். அதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் நீங்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட அரசு நடத்தும் ஒரு லாட்டரி துறையில் தவறு நடைபெற்றால் அதை யார் கண்காணித்து சீர் செய்ய வேண்டும்? அரசு தானே! குதிரைப் பந்தயம், சீட்டாட்ட கிளப் போன்றவற்றை விட லாட்டரி தொழிலானது சிறு வியாபாரம் தான் என்பதை அரசு முழுமையாக நம்ப வேண்டும்.

கேள்வி : லாட்டரி தொழிலை முறைப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : இதற்கு பதில் சொல்லும் முன் ஒரு விஷயத்தை உங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன். மாநில லாட்டரி தடை செய்யப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் என்ன? சில விரும்பத்தகாத நிகழ்வுகள் தான் லாட்டரி தடைக்கு காரணம். ஒரு நம்பர் லாட்டரி வேறு விஷயம். பிற மாநில ஆன்லைன் லாட்டரி முறையில் (Play win Lottery) 20 கோடி வீதம் ஐந்து நபர்களுக்கு 100 கோடி முதல் பரிசு என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஹிந்து பத்திரிக்கையில் கூட வந்தது. ஆனால் அந்த குலுக்கலுக்கு அரசுக்கு (தமிழக அரசுக்கு) வெறும் ரூ.20,000 மட்டுமே நுழைவு வரியாக பெறப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக்கு வந்திருக்கலாம். மற்றொரு விஷயம் அரசு லாட்டரியால் எந்த பிரச்சனையும் இல்லை. தனியார் மற்றும் பிற மாநில லாட்டரியால் தான் பிரச்சனை. மேலும் அதிகாரிகள் யாரும் முதல்வருக்கு லாட்டரி பற்றிய சரியான தகவல்களை அளித்திருப்பார்களா என்பது சந்தேகமே. வெளி மாநில லாட்டரியால் எழுந்த பிரச்சனைகளுக்கு நாங்கள் பலி கடாவானோம்.

முறைபடுத்துதல் பற்றி கேட்டீர்கள்! தவறுகள் நடப்பதாக சொல்லப்படும் இந்த லாட்டரி துறையை முறைப்படுத்த ஒரு கண்காணிப்புக் குழு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் ஓய்வு பெற்ற நீதிபதி, காவல் துறையை சேர்ந்த உயரதிகாரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை நியமித்து லாட்டரியில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் உடனே அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குழு அடிக்கடி கூடி அவ்வப்போது நடைபெறும் விஷயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

கேள்வி : லாட்டரி தொழிலால் திடீர் கோடீஸ்வரர்கள் தான் உருவாகியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் லாட்டரி வர வேண்டும் என நீங்கள் போராடுகிறீர்கள். உங்கள் போராட்டம் நியாயம்தானா?

பதில் : முதலில் இந்த லாட்டரி தொழிலை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்காதீர்கள்? நிறைய முதலீடு போட்டு தொழில் செய்த ஒரு சிலர், தாங்கள் செய்யும் பிற தொழிலோடு இதையும் ஒன்றாக செய்தார்கள். அவர்களுக்கு லாட்டரி தடையால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை. ஆனால் எங்களை நினைத்துப் பாருங்கள்! நான் லாட்டரி சிறு வியாபாரிகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலச்சங்கத்தின் தலைவர். ஒரு சில கோடீஸ்வரர்கள் இருக்கலாம். உடல் ஊனமுற்ற உள்ளிட்ட குறிப்பாக கண் பார்வையற்றோர், வேலை கிடைக்காத நலிவடைந்த பிரிவினர், பொருளாதார ரீதியாக மிக மிக பின்தங்கியவர்கள், இந்த லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அன்றாட பிழைப்பு நடத்தி வந்தனர். ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை சம்பாதித்து வந்தனர். அதில் தான் இப்போது மண் விழுந்திருக்கிறது. இவர்களுக்கு பிழைக்க வேறு என்ன வழி? இவர்கள் எங்குதான் போவார்கள்? (கண்ணீர் விட்டு அழுகிறார். . .) பலர் இன்று பிச்சை எடுக்கிறார்கள்! சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். யாரோ செய்த தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பா? அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் மீண்டும் வழங்கிவிட்ட முதல்வர், எங்கள் கோரிக்கைகளை மனிதாபிமானத்தோடு கவனிக்க வேண்டும்.

கேள்வி : பிற மாநிலங்களில் லாட்டரி தொழிலின் நிலைமை என்ன?

பதில் : நம் அண்டை மாநிலங்களில் எல்லாம் லாட்டரி தொழில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்லப் போனால் கேரள மாநிலத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் லாட்டரி தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் பல நலத்திட்டங்களுக்கு செல்வதை உணர்ந்த கேரள அரசு ஏழே நாளில் தடையை திரும்பப் பெற்றது.

நாங்கள் தமிழக அரசுக்கு சொல்வதெல்லாம் இதுதான், பிற மாநில லாட்டரி தொழிலால் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்த நுழைவு வரியை அதிகமாக உயர்த்தலாம்.

கேள்வி : இறுதியாக அரசுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் பயன்பெறும் வகையில் மாவுக் கோலம் போட்டு மறைமுகமாய் பசி போக்கி பிற உயிர்களை வாழ வைத்த இத்தமிழ் மண்ணில் நாங்கள் வாழ வகையற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றவர்கள், முதியர்கள், கைம்பெண்கள், இளைஞர்கள், பட்டதாரிகள் அனைவருக்கும் லாட்டரி தொழிலை முறைப்படுத்தி வழங்க வேண்டும்.

எங்களை நம்பியிருக்கும் குழந்தைகளின் கல்வி, உணவு, உடுக்க உடை வழங்க இயலாமல் தவிக்கிறோம்.

அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டித் தந்த லாட்டரி தொழில் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இந்த லாட்டரி தடையால் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் அவர்தம் குடும்பம் சார்ந்த 25 லட்சம் பேரின் இருண்ட வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

மாநாடு நடத்தினோம், உண்ணாவிரத அறப்போரில் ஈடுபட்டுவிட்டோம்.

மீண்டும் லாட்டரி தொழிலை அரசு கொண்டு வந்து எங்களை வாழ வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம்!
- ஏ.எல்.வி.

வெப்துனியாவைப் படிக்கவும்