இலங்கை எதிர்நோக்கியிருப்பது போரையா? தீர்வையா?

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (15:39 IST)
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும், பிரதமருமான மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார்.

ராஜபக்சேயை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்கே வெறும் 1.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டார். இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணித்ததால் ரணில் விக்ரமசிங்கே வெற்றி வாய்ப்பை இழந்ததாக அந்நாட்டுப் பத்திரிக்கைகளும், அரசியல் நோக்கர்களும் வேறுபாடின்றி கூறியுள்ளனர்.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழீழ விடுதலைப் புலிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்கிய ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக வாக்களிக்காமல், அமைதிப் பேச்சுவார்த்தையை எதிர்த்துவரும் மகிந்தா ராஜபக்சே வெற்றி பெறுவதற்கு வழி செய்யும் வகையில் தமிழர்கள் வாக்களிக்காமல் போனதேன்? என்கின்ற கேள்விக்கு தேர்தல் பிரச்சாரத்திலேயே பதில் உள்ளது.

தென் இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, புலிகள் இயக்கத்தை கருணாவை வைத்து உடைத்தது நாங்கள்தான், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சர்வதேச உலக நாடுகளின் பிடியில் சிக்கவைத்ததும் நாங்கள்தான் என்று அமைதிப் பேச்சுவார்த்தையில் அரசுப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட இலங்கை முன்னாள் அமைச்சர் மொரகொடா பேசியதை முற்றிலுமாகப் புரிந்துகொண்ட தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மொரகொடா பேசியது தமிழர்களை அந்நியப்படுத்திவிட்டது. அதுவே தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க காரணமானது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களுமே சிங்களப் பேரினவாத சார்புகளையே வெளிப்படுத்துவதை நன்கு புரிந்துகொண்ட தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

தமிழர்களின் புறக்கணிப்பால் ரணில் தோற்றார், மகிந்தா ராஜபக்சே வென்றார். எனவே எதிர்மறையாக ராஜபக்சேயின் வெற்றியை தமிழர்களின் புறக்கணிப்பு உறுதி செய்துவிட்டது.


ராஜபக்சேயின் பார்வை போரிலா? தீர்விலா?

இதுவே இன்று எழுந்துள்ள முக்கியக் கேள்வியாகும்.

சிங்கள பேரினவாத மார்க்சிய இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுணா, தமிழர்கள் எதிர்ப்பில் முனைப்பு காட்டிவரும் புத்த பிக்குகளின் அரசியல் அமைப்பான ஜாதிக ஹேல உருமயா ஆகியவற்றின் நிபந்தனைக்குட்பட்ட ஆதரவுடன் போட்டியிட்ட ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளது இலங்கை அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதையே குறிக்கிறது என்பதையும் அந்நாட்டுப் பத்திரிக்கைகளும், நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இலங்கை அதிபராக பதவியேற்ற பின் உரையாற்றிய மகிந்தா ராஜபக்சே, இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்றும், விடுதலைப் புலிகள் பேசவந்தால் அவர்களோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், தனக்கு பதிலாக அவர் பிரதமராக நியமித்துள்ளவர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே. இவர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடாது என்பதிலும், இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தவராவார்.

இவரை பிரதமராக நியமித்ததன் வாயிலாக இலங்கை இனப்பிரச்சனைக்கு தான் கையாளப்போகும் அரசியல் வழியை மறைமுகமாக பறைசாற்றியுள்ளார் அதிபர் ராஜபக்சே.

ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா ஆகியவற்றின் ஆதரவைப் பெற, புலிகளுடனான போர் நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வேன் (திரும்பப் பெறுவேன்) என்றும், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட புலிகளுடன் செய்துகொண்ட சுனாமி நிவாரண நடவடிக்கை அமைப்பு (ஞ-கூடீஆளு) ஒப்பந்தத்தை நிராகரிப்பேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ்விரு வாக்குறுதிகளையும் மகிந்தா ராஜபக்சே நிறைவேற்ற முயன்றால் அது இலங்கையை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

தேர்தலில் வெற்றி பெற நிபந்தனையுடன் தான் பெற்ற ஆதரவை நிறைவேற்ற அதிபர் ராஜபக்சே எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது இலங்கையின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவே இருக்கும்.

இலங்கை போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பிற்கு (SLMM) தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை அளித்து போர் நிறுத்தத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் இலங்கை இராணுவம் கையாண்டுவரும் மறைமுக யுத்தத்தை கருணா பிரிவை பயன்படுத்தி தொடர்ந்தால் அது போர் நிறுத்தத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அதேபோல, சிங்கள தீவிரவாத இயக்கங்களின் கோரிக்கையின் படி, சுனாமி நிவாரண நடைமுறை அமைப்பு ஒப்பந்தத்தை நிராகரித்தால் அது இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் பாதையின் கதவுகளை மூடிவிடும். தமிழர்கள் தனிமைப்படுத்தப்படுவர். அது போருக்கே மீண்டும் வழிவகுக்கும்.

எனவே, தான் அளித்த வாக்குறுதிகளை இலங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டு போர் நிறுத்தத்தை சீராக நடைமுறைப்படுத்துவதிலும், சுனாமி நிவாரண அமைப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை உடனடியாகத் துவக்கவும் அதிபர் ராஜபக்சே முன்வர வேண்டும்.

இதுமட்டுமே இலங்கையில் அமைதியை நீடிக்கச் செய்யக்கூடியதும், தீர்வை நோக்கி இட்டுச் செல்லக் கூடியதுமான ஒரே பாதை. மாற்று இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்