உலகின் பிரமிக்கத்தக்க 7 அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் 450 ஆண்டுக்கால பழமை வாய்ந்த தாஜ்மஹால் இன்று வெளியிடப்படவுள்ள புதிய 7 அதிசயங்களின் பட்டியலில் இடம்பெறுமா என்று அறிவதில் இந்தியர்கள் மட்டுமின்றி, வரலாற்றிலும், கலைப் படைப்புகளிலும் பேரார்வம் கொண்டோர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
சீனப் பெருஞ்சுவர், பைசா நகர சாய்ந்த கோபுரம், பாபிலோனியாவின் தொங்கு தோட்டம், எகிப்தின் பிரமீடுகள், பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் கோபுரம், ஆக்ராவில் யமுனை கரையில், எழிலிற்கு இலக்கணம் கூறி கட்டுமானக் கலைக்கு அத்தாட்சியாகவும், காதலின் சிறப்பை உணர்த்து சின்னமாகவும் திகழ்ந்துவரும் தாஜ்மஹால் ஆகியன உள்ளன.
புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில், 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்நாளில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
பெர்னார்ட் வீபர் என்பவரின் தனித்த முயற்சியால் உலக மக்களின் கருத்தை வாக்கெடுப்பின் மூலம் அறிந்து அதன்மூலம் புதிய 7 அதிசயங்களை முடிவு செய்து அறிவிப்பது என்று திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, சமூகம், பண்பாடு ஆகியவற்றிற்கான அமைப்பான யுனெஸ்கோ திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
யுனெஸ்கோ மேற்கொண்டு வரும் உலகப் பாரம்பரிய திட்டத்திற்கும், இந்த புதிய அதிசயப் படடியலிற்கான வாக்கெடுப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், உலக மக்கள் தங்கள் விருப்பங்களை வெளியிடும் ஒரு வாய்ப்பாகிவிட்டதால் இதற்கும் ஒரு வரவேற்பு உள்ளது.
வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்துவிட்டது. முடிவு இன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்படவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த வாக்குப் பதிவில் இறுதிக்கு தகுதி பெற்றன. 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இன்னும் சில மணி நேரங்களில் அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, கிரேக்கத்தின் ஆக்ரோபாலிஸ் என்றழைக்கப்படும் 2500 ஆண்டுக்கால பழமை வாய்ந்த பார்த்தீனன் கோயில், சீனத்தின் பெருஞ்சுவர், ரோமில் உள்ள மாபெரும் விளையாட்டுத் திடல், மெக்சிகோவில் உள்ள ஹிட்சா பிரமீட், எகிப்தில் உள்ள கெய்சா பிரமீடுகள், இந்தியாவின் தாஜ்மஹால் ஆகியன முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிசயங்கள் என்று கூறத்தக்க அளவிற்கு உலகெங்கிலும் உள்ள பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள், மாடமாளிகைகள், அழகு தோட்டங்கள், அற்புத ஓவியங்கள் என்று ஏராளமாக இருக்கின்றன. அவைகளின் அளவும், கட்டப்பட்ட நேர்த்தியும், அந்த கட்டுமானங்களோடு தொடர்புடைய வரலாறும், அது கட்டப்பட்டதில் உள்ள சூட்சமும் நிச்சயம் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளன. அந்த வகையில் சீனத்தின் பெருஞ்சுவரும், பாபிலோனின் தொங்கு தோட்டமும், எகிப்தின் பிரமீடுகளும், கிரேக்கத்தின் ஆக்ரோபாலிசும் சிறப்பு மிக்கவைதான். ஆயினும், இவை யாவற்றிலும் அரசு, ஆதிக்கம், பிரமாண்டம், கட்டடக்கலை, வரலாற்றுச் சிறப்பு ஆகியன இருந்தாலும் இந்தியாவின் தாஜ்மஹாலிற்கு உள்ள தனித்த, உயர்ந்த, இதயத்தின் ஆழத்திலும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் உன்னதத் தன்மையைப் பெற்றவை வேறெதுவும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
ஒரு பேரரசன், அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம், பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த, மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம், ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம், அழகிய சிலையை வடித்திருக்கலாம், ஏன் அருமை உருது மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஹாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலை, அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.
கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால், அதையும் தாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையால், வரலாற்றால் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.
இவ்வளவு அழகான தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம், தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்ல, காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அது, காமத்தைக் கடந்த பிணைப்பு அது, கருத்திற்கும் எட்டாத உணர்வு அது, காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும், இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோ, ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட அரவிந்தர், "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.
வாக்குகளும், செல்வாக்கும், ஆதரவும், பற்றுதல்களும் பட்டியல்களை நிர்ணயிக்கலாம். ஆனால் அவற்றில் இடம்பெற்றாலும், இடம்பெறாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் தாஜ்மஹால் என்றென்றைக்கும் ஆழம் காணமுடியாத அதிசயமாக நிலைத்திருக்கும்.