விவசாயிகளுக்கான நிவாரணம் அவர்களைப் போய்ச் சேர வேண்டும்

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சம்பா, குறுவை நெல் சாகுபடி கருகியதால் விவசாயிகள் இழந்தது 250 கோடி மதிப்பிலான நெல் ஆகும். இதுமட்டுமின்றி விவசாயக் கூலிகளுக்கு வேலை இல்லாமலும், கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமலும் தவிக்கின்றன. போதுமான குடிநீர் இல்லாததால் பெண்கள் குடங்களை ஏந்தி குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்வது தண்ணீர் தண்ணீர் சினிமாவை ஞாபகப்படுத்துகிறது.

நிலத்தடி நீர் மெதுவாக நிலத்தின் அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் விவசாயக் கூலிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழக அரசு விவசாயிகளுக்காக மதிய உணவு திட்டத்தை அறிவித்தது. மிகக்குறைந்த எண்ணிக்கை உள்ள கிராமத்திலும், பெரிய கிராமத்திலும் 50 பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் விவசாயக் கூலிகள் பலர் பல மைல் நடக்கவேண்டியிருந்ததை காரணம் காட்டியும் தட்டு ஏந்தும் நிலையை காரணம் காட்டியும் மதிய உணவைப் புறக்கணித்தனர்.

இச்சூழ்நிலையில் தான் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து மாதம் 30 கிலோ அரிசி வழங்குவதாக அறிவித்தது. இப்படி வழங்கப்படும் அரிசியைப் பெறத் தகுதியுடையவர் யார் என்பதை பஞ்சாயத்து தலைவரும், கிராம நிர்வாக அலுவலரும்தான் முடிவு செய்யவேண்டும். முன்பு இலவச மதிய உணவு பெற்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்குவது என்று அரசு அறிவித்தது.

இதனால் இலவச மதிய உணவைப் புறக்கணித்த விவசாயிகள் மற்றும் 50 பேருக்கு மேல் பெயர் சேர்க்க முடியாமல் விடுபட்டுப் போன விவசாயிகள் இலவச அரிசியை றெ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் திடீர் மதிய உணவுத் திட்டத்தால் விவசாயிகள் பயனடைந்ததை விட கிராமங்களில் ஊர் சுற்றித் திரிந்தவர்கள் மந்தையில் படுத்து உறங்கியவர்கள், விவசாயம் அல்லது வேறு புரோக்கர் தொழில் செய்தவர்கள் தான் விவசாயிகளின் மதிய உணவுத் திட்டத்தில் அதிக இடம் பிடித்தவர்கள்.

உதாரணமாக மதுரை திருப்பரங்குன்றம் யூனியனில் 2,125 பேர் பயனாளிகள். இவர்களில் உண்மையான விவசாயிகள் ஆயிரம்பேர் கூட இல்லை. அதேபோல் கிழக்கு பஞ்சாயத்து யூனியனில் 1,893 பேர் பயனாளிகள் இங்கும் ஆயிரம் பேர் கூட உண்மையான விவசாயக் கூலிகளோ விவசாயிகளோ இல்லை. மேற்கு பஞ்சாயத்து யூனியனில் 805 பேர் மட்டுமே பயன் பெறுகின்றனர். இங்குதான் விவசாயிகள் அதிகம் பேர் 700 பேர் வரை பயன் பெறுவதாகத் தெரிய வந்துள்ளது.

உண்மையான விவசாயிகள் இதில் 60 சதவீதம் பேரே. 90 சதவீதம் விவசாயிகள் பஞ்சாயத்து தலைவராலும், கிராம நிர்வாக அலுவலராலும் நிராகரிக்கப்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் சிபாரிசு மூலமும் வி.ஏ.ஏ. சிபாரிசு மூலமும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு யூனியன் கவுன்சிலர்கள் தற்போது புகார் எழுப்பி வருகின்றனர்.

பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்களின் புகார்கள் குறித்து பஞ்சாயத்து தலைவர்களிடம் கேட்டால் அவர்களோ ஒரு கிராமத்தில் 500 விவசாயிகள் இருந்தால் 50 பேருக்கு தான் இலவச அரிசி வழங்க உத்தரவு உள்ளபோது இப்படி புகார்கள் வரத்தான் செய்யும் என்கின்றனர்.

இந்நிலையில் பசியால் வாடும் விவசாயிகள் தங்களுக்கு இலவச அரிசி வேண்டி தினந்தோறும் மனு அனுப்பி வருகின்றனர். மாவட்ட ஆட்சியாளர் அந்த மனுக்களை வாங்கி வரிசைப்படுத்தி வைக்குமாறு பஞ்சாயத்து தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அரசு வெகுவிரைவில் இலவச அரிசித் திட்டத்தில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. நிஜமாக பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளை வெகு எளிதில் கணக்கெடுத்து விடலாம். அப்படி கணக்கெடுத்து முறையாக அவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தின் பயன் வெற்றி பெற்றதாக அர்த்தம்.

வெப்துனியாவைப் படிக்கவும்