தைப்பூசத்தின் போது 4 லட்சம் பக்தர்களும், வைகாசி விசாகம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல லட்சம் மக்களும் பாத யாத்திரையாக பழநிக்குச் செல்கின்றனர்.
webdunia
ஒரு பக்கம் மதுரையில் இருந்தும், மறுபக்கம் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்கள் எல்லாம் தேச நெடுஞ்சாலைகளில்தான் நடந்து செல்கின்றனர். அதே நேரத்தில் போக்குவரத்தும், குறிப்பாக லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பழநிக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடந்த தை மாதத்தில் மதுரையில் இருந்து பழநிக்கு பாத யாத்திரை சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது குங்கும மாரியம்மன் கோயிலிற்கு அருகே வேன் ஒன்று மோதியதில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானது பக்தர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தைத் தொடர்ந்து பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அதன் விளைவாக சாலையை ஒரு பக்கத்தில் 6 அடி அகலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செம்பட்டியில் இருந்து பழநி வரை சாலையின் இடதுபக்கம் 6 அடி அகலப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மற்றொரு பக்கம் பாத யாத்திரை செல்வோர் அதிகம் செல்லும் மதுரையில் இருந்து கோவை செல்லும் தேச நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டப் பணிகளும் துவங்கியுள்ளது.
இவ்விரு பணிகளால் பாத யாத்திரை செல்வோருக்கு ஆபத்து ஏற்படாது என்று ஒரு நம்பிக்கை பரப்பப்படுகிறது.
Palani Temple
பழநிக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து அதிகம் உள்ள தேச நெடுஞ்சாலைகளில் இருந்து பிரிவது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களான மதுரையையும், கோவையையும் இணைக்கும் சாலைகளாக உள்ளதால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கோவை ஈரோடு பகுதிகளில் இருந்து கோழி, முட்டை ஆகியவற்றை கொண்டு செல்லும் இலகு ரக வேன்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட வாகனம் ஒன்றுதான் குங்குமம் மாரியம்மமன் கோயிலிற்கு அருகே 6 பாத யாத்திரிகர்கள் பலியான விபத்திற்கு காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Palani Temple
இவ்வாறு போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலைகளை அகலப்படுத்துவதால் போக்குவரத்தின் வேகம்தான் அதிகரிக்குமே தவிர, அது பாத யாத்திரை செல்வோருக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பை அளிக்காது.
தைப்பூசத்தின் போது செம்பட்டியில் இருந்து பழநி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. அல்லது ஒரு வழிப் போக்குவரத்தாக மாற்றப்படுகிறது என்றாலும், பழநிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் சென்றுக் கொண்டிருப்பதால் சாலைகளை அகலப்படுத்துவதால் பாதுகாப்பு எந்தவிதத்திலும் உறுதியாகாது.
இதற்கு ஒரே வழி பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக சாலையில் சில மீட்டர் தூரத்தில் தனியாக 6 அடி அகலத்தில் தனிப் பாதை அமைப்பதே சிறந்தது என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது.
மதுரையில் இருந்து பழநிக்கு 120 கி.மீ. தூரத்திற்கு சாலையில் இருந்து சற்று தள்ளி இப்படிப்பட்ட 6 அடி தனிப்பாதை அமைக்கப்பட்டால் அது ஆபத்தை தவிர்ப்பது மட்டுமின்றி, பாத யாத்திரை செல்வோருக்கு ஆங்காங்கு உள்ள கிராமங்களில் தங்கிச் செல்வதற்கும், பாதையோரமாக உள்ள கிராமத்தினர் பக்தர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய கடைகள், தங்குமிடங்கள் கட்டிவிடவும், அதன்மூலம் பொருளாதார வசதியைப் பெறவும் வழி வகுக்கும்.
அதுமட்டுமின்றி, பாத யாத்திரை செல்வோருக்கு கழிப்பிடம், குளியல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இப்படிப்பட்ட தனிப்பாதை அமைப்பதால் வழியேற்படும்.
மதுரையில் இருந்து மட்டுமின்றி, திண்டுக்கல்லில் இருந்தும் பழநிக்கு வரும் 60 கி.மீ. தூர சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாதையிலும் தனியாக பாத யாத்திரை செல்வோருக்கு தனிப்பாதை அமைத்திட அரசு முன்வர வேண்டும்.
பழநி முருகன் கோயிலிற்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் 4 லட்சம் பக்தர்கள் (தென் மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் வசித்துவரும் தமிழர்களும் பாத யாத்திரை) செல்கின்றனர்.
அதன்பிறகு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் சற்றேறக்குறைய 3 லட்சம் பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கோவை, தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
webdunia
வேண்டுதலின் பொருட்டு ஆண்டு முழுவதும் சில லட்சம் பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். ஆக, 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாத யாத்திரையாக வரக்கூடிய பழநி முருகன் கோயிலிற்கு அவர்கள் பாதுகாப்பாக வந்துசேர தனிப்பாதை அமைக்க தமிழக அரசின் உள்ளாட்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பும், தனிப்பாதையும் உள்ளதோ அதேபோன்று பழநி செல்லும் பக்தர்களுக்கும் தனிப்பாதை அமைத்துத் தரவேண்டும்.