தமிழர்கள் வெளியேற்றம் இன ஒடுக்கலின் வெளிப்பாடே!

Webdunia

செவ்வாய், 12 ஜூன் 2007 (14:00 IST)
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி அவர்களின் சொந்த ஊர்களுக்கு சிறிலங்க காவல்துறை அனுப்பி வைத்ததற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சிறிலங்க அரசு சந்தித்து வருகிறது!

வடகிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் வாழ்வதற்கு வழியின்றி, அவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு துன்பத்திலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையில் அயல்நாடுகளுக்குச் சென்று வேலை தேடி பிழைப்பதற்காக கொழும்பு வந்து அங்குள்ள மிகக் குறைந்த கட்டண தங்கும் இடங்களில் தங்கியிருந்தபோதுதான் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறிலங்க காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது.

கொழும்புவி்ன் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொண்டதாக சிறிலங்க காவல்துறை கூறிய காரணத்தை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட கொடை நாடுகளும், ஐ.நா.வும் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை வன்மையாகக் கண்டித்தன.

உலக நாடுகளின் இந்த எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய சிறிலங்க அரசு, இது ஏதோ அந்நாட்டு காவல்துறை தனித்து முடிவெடுத்து செய்தது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. கொழும்புவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சிறிலங்க பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கே, காவல்துறையினரின் தவறான நடவடிக்கைக்கு அரசு பொறுப்பேற்பதாகவும், அதற்காக வருந்துவதாகவும் கூறினார்.

சிறிலங்க பிரதமர் இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ள நிலையிலும், ஐ.நா. இன்று சிறிலங்க அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் இலங்கைக்கான பன்முக முகமை நிலைக்குழு (இன்டர் - ஏஜென்சி ஸ்டாண்டிங் கமிட்டி) தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கை அந்நாட்டின் அரசமைப்பிற்கு எதிரானது என்றும், இலங்கையில் வாழும் ஒவ்வொருவருக்கும் அந்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், எங்கு வேண்டுமானாலும் தங்கவும் உரிமை உள்ளதை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது.

தனது அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ள அந்தக் குழு, சட்டத்தின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த அளவிற்கு கடுமையான வார்த்தைகளால் ஐ.நா.வும், உலக நாடுகளும் கண்டிப்பதற்கு காரணம், அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான சிறிலங்க அரசு இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் நேர்மையாக ஈடுபடாதது மட்டுமின்றி, தமிழர்களின் உரிமையை மறுத்திடும் வகையில் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அனைத்து நாடுகளும் உணர்ந்துள்ளதுதான்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண ஓர் அடிப்படையை உருவாக்க அதிகாரப் பகிர்வு திட்டம் ஒன்றை உருவாக்குமாறு இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் வற்புறுத்தியதற்கு இணங்க கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏ.பி.சி. என்றழைக்கப்படும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்றை அதிபர் ராஜபக்சே உருவாக்கினார்.

இக்குழுவில் இலங்கையில் உள்ள எல்லா கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமின்றி, சட்ட வல்லுநர்களையும் உள்ளடக்கிய இக்குழு சிறிலங்க அரசமைப்பு சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து பரிந்துரை செய்யும் என்று ராஜபக்சே அறிவித்தார். இது 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி கொழும்புவில் ராஜபக்சே கூறியதாகும்.

"தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், இலங்கையின் தேச கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதாலும், இலங்கை மக்களின் உண்மையான கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது" என்று அப்பொழுது ராஜபக்சே பேசினார்.

ஓராண்டு காலமாகிவிட்டது. ஆனால் எந்தப் பரிந்துரையும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, கடந்த ஓராண்டு காலத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை ராஜபக்சே அரசு முழு அளவில் நடத்தி வருகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு, தமிழர்களின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியும், விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்கியும் வருகிறது. சிறிலங்க ராணுவமும், விமானப்படையும் நடத்திய தாக்குதல்களினால் பல நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கில் வெளியேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வீடின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பல நூற்றுக் கணக்கானோர் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து படகில் தப்பி தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் 5 லட்சத்திற்கும் மேலான மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையை விடுதலைப் புலிகளும், சிறிலங்க நாடாளுமன்றத்தில் 20க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தேச கூட்டமைப்பும் பலமுறை எடுத்துக் கூறிவிட்டன. இதனை நிதர்சனமாகக் கண்ட நார்வே அரசின் சமரசக் குழு, அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டியதன் அவசியத்தை ராஜபக்சேயிடம் வலியுறுத்தியது.

அதிபர் ராஜபக்சேயும், சிறிலங்க பாதுகாப்பு அமைச்சரும், அயலுறவு அமைச்சரும் புதுடெல்லி வந்தபோது பேச்சுவார்த்தையை துவக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கும் அயலுறவு அமைச்சர் பிரணாப் குமார் முகர்ஜியும் வலியுறுத்தினர். ஆனால் அந்த திசையில் எந்த நடவடிக்கையையும் சிறிலங்க அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, தமிழர்கள் மீது நடத்தி வந்த அடக்குமுறையை பன்மடங்கு முடுக்கிவிட்டது.

அதன் முத்தாய்ப்பாகத்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி கொழும்புவில் தங்கியிருந்த அப்பாவித் தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையை சிறிலங்க அரசு மேற்கொண்டது. சிறிலங்க அரசுகள் பல்லாண்டுக் காலமாக தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியே தமிழர்களை வெளியேற்றிய இந்த நடவடிக்கையாகும்.

இலங்கை இனப்பிரச்சனையை கூர்ந்து கவனித்து வரும் எவர் ஒருவரும், சிறிலங்க அரசியல் என்பது சிங்கள மேலாதிக்க சிந்தனை மற்றும் தத்துவ அடிப்படை கொண்டது என்பதனை உணர்ந்திருப்பார்கள். அதனால்தான் யார் பிரதமராக வந்தாலும், யார் அதிபரானாலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பதையோ, சம உரிமை என்பதையோ ஏற்று நடைமுறைப்படுத்த முன்வருவதில்லை.

சமீபத்தில் அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே அளித்த பேட்டியை படித்துப் பார்த்தால் இது துல்லியமாக புரியும்.

ராணுவ பலத்தைக் கொண்டு விடுதலைப் புலிகளை வென்று அதன்மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதையே அந்தப் பேட்டியில் தெள்ளத் தெளிவாக ராஜபக்சே வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பக்கத்தில் விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று சர்வதேச சமூகத்திடம் உறுதி அளித்த ராஜபக்சே, மறுபக்கத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை முற்றிலும் ஒழித்த பிறகுதான் தீர்வு ஏற்படும் என்றும் கூறி வருகிறார். அவருடைய இந்த இரட்டை நிலைப்பாடு அல் ஜெசீரா பேட்டியில் தெளிவாக வெளியாகியுள்ளது.

சிறிலங்க அரசியலில் தீவிரவாதப் போக்குடைய சிந்தனைப் பிரிவைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சே, இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முன்வருவார் என்று எதிர்பார்ப்பது கானல் நீரை நீரோடை என்று நம்புவதற்கு ஒப்பாகும்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற எந்தவிதத்திலாவது உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய அரசு விரும்புமானால், இலங்கை தொடர்பான அதன் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுதல் அவசியமாகும். இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாமல் இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு ஏற்படுவது சாத்தியமல்ல.

மகிந்த ராஜபக்சே அரசு தமிழர்களை அழிக்கும் இன ஒடுக்கல் கொள்கையை வெளிப்படையாக கடைபிடிக்கிறது என்பதையே தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களும், கொழும்புவில் இருந்து தமிழர்களை வெளியேற்ற நடத்தப்பட்ட அக்கிரமமான நடவடிக்கை என்பதையும் புரிந்துகொண்டு இந்திய அரசு இலங்கை தொடர்பான அணுகுமுறை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழர்களை வெளி்யேற்றியது வருத்தம் தந்தது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டுமெனில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டால்தான் அது சாத்தியம். இல்லையேல் அங்கு தமிழர்களை இன ரீதியாக ஒடுக்கும் சிறிலங்க அரசு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மோதலும், ரத்தம் சிந்துதலும் தொடர் கதையாகவே நீடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்