கண்ணுக்குத் தெரியாத வில்லன்கள்

சென்னை சாலைகளில் போவதெல்லாம் வம்பை பில்லியனில் உட்கார வைத்து அழைத்துப் போவது போலத்தான். சென்னையில் மட்டும் 11 லட்சம் மோட்டார் வாகனங்கள் இருக்கின்றன. இவற்றில் சுற்றுச்சூழல் விதிகளைக் கடைபிடிக்காத வாகனங்கள் ஏராளம். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாகனப் புகை சோதனை மையங்கள் பலவற்றை அமைத்து வாகனப் புகையைப் கொஞ்சம்தான் குறைத்திருக்கிறது.

அண்ணா சாலை போன்ற பரபரப்பான இடங்களில் ஒரு காட்சியைப் பார்க்கலாம். டூவீலர்களில் வருபவர்கள் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொள்கிறார்கள். சிலர் முகமூடி அணிந்துகொண்டு போகிறார்கள். ஒன்றும் இல்லை என்றால் துப்பட்டாவால் முகத்தைப் பொத்திக்கொண்டாவது போகிறார்கள். வாகனப் புகை அந்த அளவுக்கு சகிக்க முடியாத விஷயமாகிவிட்டது. ஆனால் முகமூடிகளை வைத்துக்கொண்டு அதிகம் சாதித்துவிட முடியாது.

வாகனப் புகை ஒரு நாளுக்கு 20 சிகரெட்களைப் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பை எற்படுத்துகிறது என்பதுதான் அதிர்ச்சியான தகவல். கார்பன் மோனாக்ஸைட், கார்பன் டயாக்ஸைட், பல்வேறு வகை நைட்ரஜன் ஆக்சைட் வாயுக்கள், ஹைட்ரோகார்பன்கள், புழுதி, ஈயம், பென்சீன் போன்ற விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருள்களும் வாயுக்களும் நமக்கே தெரியாமல் நம்மைத் தின்று கொண்டிருக்கின்றன.

இந்த வேதிப் பொருள்கள் நுரையீரல் புற்றுநோய் உள்பட பல விதமான நுரையீரல் வியாதிகள், ரத்தப் புற்றுநோய், க்ரோமோசோம் சேதம், நரம்புத் தளர்ச்சி, மூளை, இதய நோய்கள், மூச்சுக் குழாய் எரிச்சல், இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைதல், கண் எரிச்சல் என்று ஏராளமான பிரச்னைகளைக் கிளப்பிவிடுகின்றன. இதில் கார்பன் மோனாக்ஸைட் காற்று மாசுபாட்டுக்கு 70 முதல் 80 சதவீதம் காரணம் ஆகிறது. குறிப்பாக டீசல் புகை மிக மிக ஆபத்தானது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் ஓரளவே வெற்றி பெற்றிருக்கின்றன. மாநகராட்சி வாகனங்கள் உள்பட எத்தனையோ வாகனங்கள் புகை மண்டலத்தை உருவாக்கியபடி ஓடுவதை சாலைகளில் சகஜமாகப் பார்க்கலாம். போக்குவரத்து காவல் துறையினர், பேருந்து, லாரி ஓட்டுனர்கள் போன்றவர்கள் நாள் முழுதும் புகை மத்தியில் வேலை செய்வதால் அவர்களுக்குத் கூடுதல் பிரச்னை. "நான் பண்ற தொழில்தான் உண்மையிலேயே ரொம்ப ரிஸ்க்கான தொழில். ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக்கிட்டுதான் வேலை பாக்கணும்" என்கிறார் நுங்கம்பாக்கம் பகுதியில் பணி புரியும் போக்குவரத்து காவலர் ஒருவர்.

"மக்களிடையே காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு பரவ வேண்டும். வாகனப் புகை சோதனை மையங்கள் இருந்தும் அதைக் கண்டுகொள்ளாதவர்கள் பலர். அவர்களுக்குப் பொறுப்புணர்வு வரவேண்டும். இதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு" என்கிறார் சென்னை லயோலா கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக இருக்கும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். வின்சென்ட்.

வாகனப் புகையின் தீமையிலிருந்து தப்பிக்க மக்கள் செயலில் இறங்கினால்தான் முடியும். இது வாகன உரிமையாளர்களின் கூட்டு முயற்சியில்தான் சாத்தியாமாகும். நம்மால் ஆனதை நாமும் செய்யலாம்.

உங்கள் வாகனத்திற்கு 15 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அதைப் பயன்படுத்தாதீர்கள். பழைய வாகனங்கள் தற்போதைய சுற்றுச்சூழல் நிலவரத்திற்கு ஒத்து வராது. "அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தங்கள் பழைய வாகனங்களை மலிவு விலையில் விற்பதில்லை. அவற்றை மறுசூழற்சி செய்ய (சநஉலஉiபே) செய்ய அனுப்பிவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் இங்கேயும் வரவேண்டும்" என்கிறார் டாக்டர் வின்சென்ட்.

எப்போதும் ஈயம் கலக்காத (unleaded) பெட்ரோலையே பயன்படுத்துவது நல்ல ஐடியா. இப்போதெல்லாம் பெட்ரோல் பங்க்குகளிலும் ஈயம் கலக்காத பெட்ரோலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம் என்று சொல்லலாம். அதே போல LPG-í« (Liquid Petroleum Gas) மாசுபாட்டைக் குறைக்கும்.

4 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் உள்ள டூவீலர் / த்ரீவீலர்களையே பயன்படுத்துங்கள். குறைந்த தூரப் பயணத்திற்கு சைக்கிளில் போக முயற்சி செய்யுங்கள் இது நடக்காத காரியம் போல் தோன்றலாம். ஆனால் வளர்ச்சியடைந்த அமெரிக்காவில் கூட டுவீலர் வைத்திருப்பவர்கள் மெல்ல மெல்ல சைக்கிளுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசும் எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் சுற்றுப்புற சூழல் ஆபத்துகளைக் குறைக்க முயற்சி எடுக்கவேண்டும். எரிபொருட்களில் கந்தக அளவு 0.25 சதவீதத்திலிருந்து 0.005 சதவீதமாகக் குறைக்கப்படவேண்டும். பென்சீன் போன்ற வேதிப் பொருள்கள் காற்று, நிலம், நீர் மூன்றையும் மாசுபடுத்தி புற்றுநோயைத் தருகின்றன. பென்சீனை எரிபொருள்களிலிருந்து நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும். காற்றைத் தூய்மையாக வைத்திருக்க மரங்கள் ஒரு இயற்கைத் தீர்வு. "காற்றை தூய்மைப்படுத்த மரங்கள் உதவுகின்றன. அரசு இன்னும் அதிக மரங்களை நடவேண்டும்" என்கிறார் டாக்டர் வின்சென்ட்.

முக்கியமாக அரசு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதிகளை எல்லோரும் கடைபிடிக்கச் செய்யவேண்டும். விதிகளை மீறுபவர்களைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். இல்லை என்றால் அரசின் முயற்சிகள் வீணாகும். அதோடு மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டால் அது மக்கள் பார்த்துத் தவிர்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்