சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மிக உறுதியாக உத்தரவிட்ட தமிழக அரசு, அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் காட்டிவரும் தடுமாற்றம் உயிர்ப்பிரச்சினையான ஹெல்மெட் பிரச்சினையையே கேலிக்குறியதாக்கியுள்ளது.
கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கெடு விதித்து, அது நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே முதலமைச்சர் கருணாநிதி அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து வெளியிட்ட கருத்தால் வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைக்கவசம் அணி வேண்டும் என்கின்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தியதே இந்த குழப்பத்திற்கு காரணமாகிவிட்டது.
முதல் நாள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்ற 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் அவர்களுடைய வாகனங்களின் பதிவு எண்களை குறித்துக் கொண்டு எச்சரித்து அனுப்பிய நிலையில், முதலமைச்சரின் இந்த அ றிவுறுத்தல் வந்தது.
இதனால், ஹெல்மட் அணிவது நடைமுறைக்கு வந்த மறுநாளே வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மட்டை தூக்கி எறிந்துவிட்டு பழையபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். அதனைப் பார்த்துக் கொண்டு காவல்துறையினரும் வாய்ப்பொத்தி பேசாமல் இருந்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை கடந்த ஒன்றாம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், "சென்னை புறநகர் பகுதிகளில் பல காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தாலும் அவை சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளன. எனவே புறநகர் பகுதி மக்களும் கட்டாயம் ஹெல்மட் அணி வேண்டும். இதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும்" என்று கூறியிருந்தது.
வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ள கேள்வி, ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதுதான். இதனை அரசு தெளிவுபடுத்திட வேண்டும்.
விரும்பினால் ஹெல்மட் அணியலாம். கட்டாயம் கிடையாது என்று அரசு கூறுமானால் அதனை ஹெல்மட் விற்பனை ஜெகஜோதியாக நடந்து கொண்டிருக்கும்போதே கூறியிருக்க வேண்டும். மாறாக கட்டாய உத்தரவு பிறப்பித்து அதற்கு எதிர்த்து சிலர் நீதிமன்றங்களுக்குச் சென்று, ஹெல்மட் அணிவதை நீதிமன்றமும் உறுதி செய்து அது நடைமுறைக்கு வந்த பிறகு அதில் தடுமாற்றம் காட்டுவது ஹெல்மட் விற்பதற்காகவே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததோ என்று பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பும்.
வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசும் உத்தரவு பிறப்பித்தது.
எனவே, அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதே பொது நலத்தை நோக்காகக் கொண்ட அரசின் செயல்பாடாக இருக்கும்.