சிறு வணிகத்தை பாதுகாக்க தேசிய கொள்கை வகுக்க கோரிக்கை!
திங்கள், 9 ஜூன் 2008 (12:06 IST)
சிறு வணிகர்களை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வர்த்தக மற்றும் தொழில் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று அகில இந்திய வணிகர்கள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவின் கண்டல்வால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பொருளாதார புள்ளி விவரத்தில் சிறு வணிகம் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சிறு வணிகம் திட்டமிடப்படாத வகையில் இருப்பது தெரியவந்துள்ளது.
சிறு வணிகத்துறையை பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில், நாடு முழுவதும் சீரான வளர்ச்சி அடையும் வகையில் ஒரே மாதிரியான தொழில் மற்றும் வர்த்தக கொள்கையை வகுக்க வேண்டும்.
இந்த கொள்கை சிறு வணிகர்கள் வியாபாரத்தை எவ்வாறு நவீன மயப்படுத்துவது, அவர்கள் போதிய நிதி உதவிகளை எப்படி பெறுவது என்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.