டாலர் மதிப்பு 7 பைசா உயர்வு!

வியாழன், 5 ஜூன் 2008 (12:52 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.84 / 42.85 ஆக இருந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.77 / 42.78.

இந்த வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதால், டாலரின் தேவை அதிகரித்துள்ளது. அத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது. இதனால் இந்திய அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் பென் பெர்னான்க் நேற்று முன்தினம் வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று சூசகமாக தெரிவித்தார். இதனால் யூரோ, யென் உட்பட பல நாட்டு அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.43.00 என்ற அளவிற்கும் குறைந்தால், ரிசர்வ் வங்கி தலையிட்டு மேலும் ரூபாயின் மதிப்பு குறைவதை தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தேவையான டாலரை சந்தையில் வாங்குகின்றன. இவைகளுக்கு ரிசர்வ் வங்கியே நேரடியாக டாலர் வழங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது எப்போதிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்குகின்றன. இதன் காரணமாகவும் டாலரின் தேவை அதிகரித்து, இதன் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்