இந்தியாவுடன் தாராள வர்த்தகம்-எகிப்து ஆவல்!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (14:27 IST)
இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே இருதரப்பு வர்த்தகத்தையும், முதலீட்டையும் அதிகரிக்க தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் சாத்தியக் கூறுகளை ஆராயும் என்று எகிப்து கூறியுள்ளது.

புதுடெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எகிப்து வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ரஷித் முகமது ரஷித் உரையாற்றும் போது, இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகளை எகிப்து ஆராயும். இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிக்கும். இது பற்றி நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தாராள வர்த்தக ஒப்பந்தம் இல்லையெனலில், வர்த்தகத்தையும், முதலீடுகளையும் அதிகரிக்க கூடிய வகையில் விரிவான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இரண்டு நாடுகளும் மருந்து, பெட்ரோலியம், சுரங்கம், மரபுசார எரிசக்தி, வாகன தயாரிப்பு, கட்டுமான பொருட்கள், ஜவுளி ஆகிய துறைகளில் ஒத்துழைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்திய நிறுவனங்கள் எகிப்து உருக்கு தொழிற்சாலைகளுடன் கூட்டு சேர ஆர்வமாக உள்ளன. டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் ஆர்வம் காண்பித்துள்ளன. இரண்டு நாடுகளையும் சேர்ந்த வங்கிகள் கிளைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

எகிப்து வர்த்தக அமைச்சர் ரஷித் இன்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத்தை சந்தித்து வர்த்தக மற்றும் முதலீடு ஒப்பந்தம் செய்வதற்கான சாத்திய கூறுகளை பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வருடத்திற்கு 3 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்