உருக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாமா என்பது பற்றி மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்ய உள்ளது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் நேற்று அயல் வர்த்தக கொள்கையை வெளியிட்டார். அப்போது சிமெண்ட் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். அத்துடன் உருக்கு ஏற்றுமதிக்கு வழங்கிவந்த ஏற்றுமதி மேம்பாட்டு சலுகையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து உருக்கு ஏற்றுமதியையும் மத்திய அரசு தடை செய்ய உள்ளது. இதற்கான முடிவு எடுப்பதற்காக, மத்திய அமைச்சரவையின் விலை பற்றிய குழு செவ்வாய்கிழமை கூடி விவாதிக்க உள்ளது.
இதில் உருக்கு ஏற்றுமதி தடை விதிப்பதுடன், இரும்பு தாது ஏற்றுமதிக்கும், ஏற்றுமதி வரி உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. விலை உயர்வினால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் பருப்பு, சமையல் எண்ணெய், தானியங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
அத்துடன் சென்ற வாரம் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்கியது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரியையும் குறைத்தது. இதன் விளைவாக சமையல் எண்ணெய் விலை சிறிது குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உருக்கு ஆலை நிர்வாகிகளுடன் உருக்கு, இரும்பு கம்பிகள், தகடுகள் போன்றவற்றின் விலை உயர்வை தவிர்க்க, பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை.
எனவே அரசு உருக்கு, இரும்பு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், இவற்றின் மூலப் பொருளான இரும்பு தாது தாராளமாக கிடைக்க இரும்பு தாது ஏற்றுதி வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.