இந்தியாவின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 35.25 விழுக்காடு சரக்குகளை கூடுதலாக ஏற்றமதி செய்துள்ளது.
ஏற்றுமதி மட்டும் அதிகரிக்கவில்லை. இறக்குமதியும் உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 30.53 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த பிப்ரவரி மாதத்தில் 14237.43 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10526.67 மில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
ரூபாய் மதிப்பில் இந்திய ஏற்றுமதி ரூ.56, 569 கோடியை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு மதிப்புடன் ஒப்பிடுகையில், இது 21.7 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி வரை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 138427.83 மில்லியன் டாலர். இது முந்தைய ஆண்டைவிட 22.9 விழுக்காடு கூடுதலாகும்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் 18466.45 மில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் ஏற்றுமதியின் மதிப்பைவிட, 30.53 விழுக்காடு கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு மொத்தம் 210895 மில்லியன் டாலராகும்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் எண்ணெய் இறக்குமதி 6272.18 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 39.52 விழுக்காடு அதிகம். இத்தகவலை மத்திய தொழில், வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.