ரூபாயின் மதிப்பு 12 பைசா உயர்வு!

செவ்வாய், 25 மார்ச் 2008 (12:13 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.18 /40.20 என்ற அளவில் இருந்தது. பிறகு டாலரின் மதிப்பு மேலும் குறைந்து, 1 டாலர் ரூ.40.15-16 என்ற அளவில் விற்பனையானது. நேற்றைய இறுதி நிலவரப்படி டாலரின் மதிப்பு ரூ. 40.27/40.28 ஆக இருந்தது.


இந்திய பங்குச் சந்தையில் இன்று காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதனால் அந்நிய முதலீடு அதிகளவு இருந்ததே ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் எ‌ன்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதற்கு காரணம் திவாலான பியர் ஸ்டிரின் என்ற முதலீட்டு வங்கியின் ஒரு பங்கை 2 டாலர் என்ற விலையில் வாங்கிக் கொள்வதாக ஏற்கனவே ஜே.பி.மோர்கன் நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதன் விலையை நேற்று அதிகரித்து 10 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையிலும், நிதி சந்தையிலும் ஏற்பட்ட நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

அத்துடன் சர்வதேச சந்தையில் 1 பீப்பாய் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் குறைந்தது. கடந்த வாரம் இதில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள், தற்போது லாபம் பார்த்துவிட்டு பங்குச் சந்தையின் பக்கம் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்