சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு!

வெள்ளி, 21 மார்ச் 2008 (12:19 IST)
அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் உள்நாட்டிலும் விலை அதிகரிக்கின்றது.

கடந்த சில வாரங்களாக உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால், பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மார்ச் 8 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 5.92 விழுக்காடாக அதிகரித்தது.

இதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை உயர்வினால், உள்நாட்டில் அதிக அளவு விலை உயராமல் தடுக்க மத்திய அரசு நேற்று சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை குறைத்துள்ளது.

சுத்திகரிக்கப்டாத பாமாயில் இறக்குமதி வரி 45 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி.டி ரக பாமாயில் உட்பட, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி வரி 52.5 விழுக்காட்டில் இருந்து, 27.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

கடுகு,கோல்ஜா, கனோலா சமையல் எண்ணைய் இறக்குமதி வரி 75 விழுக்காட்டில் இருந்து 27.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி வரி, 40 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி 50 விழுக்காட்டில் இருந்து 27.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்ச் 17 ந் தேதி முதல் சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் உள்நாட்டு தேவைக்கு வருடத்திற்கு 100 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் பாதிக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கும், இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ந் தேதி வரை, அரிசிக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது.

மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு நிர்ணயிக்கப்பட்ட விலையின் மீது இறக்குமதி வரி விதிக்கிறது.

இறக்குமதியாளர்கள் அதிக விலைக்கு இறக்குமதி செய்தாலும், நிர்ணயிக்கப்பட விலை மீதுதான் இறக்குமதி வரி விதிக்கப்படுகின்றன.

இதன்படி இறக்குமதி வரி விதிப்பதற்கு சுத்திகரிக்கப்படாத பாமாயில் விலை டன் 447 டாலர் எனவும், ஆர்.பி.டி பாமாயில் விலை டன் 476 டாலர் என நிர்ணயித்துள்ளது.

சர்வதேச சந்தையில் அதிக அளவு பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடு மலேசியா. இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 1 டன் பாமாயில் விலை 770 டாலராக இருந்தது. இதன் விலை இந்த பிப்ரவரி மாதம் 1220 டாலராக அதிகரித்துள்ளது.

இதே போல் சர்வதேச சந்தையில் சூரிய காந்தி எண்ணெய் விலை 1 டன் 947 டாலரில் இருந்து 1695 டாலராக உயர்ந்துள்ளது.

சர்வேதச சந்தையின் விலை உயர்வினால், உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்பு இரு முறை பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி வரியை 10 விழுக்காடு குறைத்தது. இதே போல் ஜூலை மாதத்தில் 5 விழுக்காடு குறைத்தது.

மும்பையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு குவின்டால் (100 கிலோ ) ஆர்.பி.டி பாமாயில் விலை ரூ.4,500 ஆக இருந்தது. சர்வதேச விலை உ.யர்வின் காரணமாக இதன் விலை பிப்ரவரியில் ரூ.5,820 ஆக அதிகரித்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்