சிறு தொழில் பட்டியலில் இருந்து 79 பொருட்கள் நீக்கம்!
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (16:48 IST)
சிறு தொழில் பிரிவின் ஒதுக்கீட்டில் இருந்து 79 விதமான பொருட்களை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என பல ரக பொருட்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றை பெரிய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது. பெரிய நிறுவனங்கள் தயாரித்தால், அதனுடன் சிறு தொழில்கள் போட்டியிட முடியாது.
அத்துடன் சிறு, குறுந்தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. இது போன்ற காரணங்களினால் சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என பல பொருட்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருந்தது.
மேலும் சிறு தொழில்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட விழுக்காடு வாங்க வேண்டும் என்ற விதியையும் மத்திய அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் இன்று சிறு தொழில் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து 79 விதமான பொருட்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடையை நீக்காகவே இந்த முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இப்போது சிறு தொழில் பிரிவு ஒதுக்கீடு பட்டியலில் 35 விதமான பொருட்கள் மட்டுமே உள்ளன.
1990 ஆம் ஆண்டுகளில் தாராளமயமாக்க பொருளாதார கொள்கை அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்தே மத்திய அரசு சிறு தொழில் பிரிவுகளுக்கான ஒதுக்கீட்டில் உள்ளவற்றை நீக்க தொடங்கியது. படிப்படியாக பல பொருட்கள் நீக்கப்பட்டன. 2005 இல் 108 ரக பொருட்கள் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. மேலும் 2006 ஆம் ஆண்டுகளில் 180, 2007 இல் 217 ரகங்கள் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
சிறு தொழில் பிரிவு பட்டியலில் 114 பொருட்கள் இருந்தது. இன்று 79 பொருட்கள் நீக்கியதன் மூலம் தற்போது 35 வகை பொருட்கள் மட்டுமே உள்ளன.
இந்த ஒதுக்கீடு நீக்கத்தை பற்றி மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின், பொருளாதார கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் கூறும் போது, இதனால் தொழில் துறையில் போட்டி அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் போட்டியிட ஏதுவாக தொழிற்சாலைகள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தரமான பொருட்கள் தயாரிக்க முடியும். அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி .செய்யும் பொருட்களுடன், இந்திய தொழில் துறை போட்டி போட முடியும். பொருளாதார வளர்ச்சி உயர்வதுடன் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்று கூறினார்.