2010 -ல் இந்திய - ஆசியான் வர்த்தகம் ரூ.2 லட்சம் கோடி!
திங்கள், 21 ஜனவரி 2008 (21:45 IST)
இந்தியா - ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் வரும் 2010 ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று இந்திய-ஆசியான்-இலங்கை தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ். முத்து சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைப்பெற்ற ஆசியான், இலங்கை ஆகியவற்றுடனான இந்தியாவின் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய முத்து சுப்பிரமணியம், ஆசியான் - இந்தியா இடையேயான வர்த்தகம் ரூ.2 லட்சம் கோடி எட்டிய பின்னர் உலகிலேயே அதிக வர்த்தகம் நடைப்பெறும் பகுதியாக இந்தியா - ஆசியான் மண்டலமே விளங்கும் என்று கூறியுள்ளார்.
இந்தியா, ஆசியான், இலங்கை ஆகிய நாடுகளுடன் விரைந்து வர்த்தக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களை ஆசியான் நாடுகளில் தொடங்க வேண்டும் என்றும், அப்போது தான் வர்த்தகம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, ஆசிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் நிலையாக உயர்ந்து வந்து, 2006 - 07 ஆம் நிதியாண்டில் 12.6 பில்லியன் டாலர் அளவை எட்டியதாக இக் கருத்தரங்கில் பேசிய இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி.சி. வெங்கட சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆசியான் -சீனா ஆகியவை இணைந்து இந்த மண்டலத்தில் ஒருவர் ஒருவருடைய பொருளாதாரம், வர்த்தகநடவடிக்கைகள் அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூர் துணைத் தூதர் அஜித் சிங் பேசும் போது கூறியுள்ளார். மேலும் இந்தியா - சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவு மேம்பட, சுற்றுலா பெரும் பணியாற்றியயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா - சிங்கப்பூர் இடையேயான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 23 விழுக்காடாக அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு 7 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா வந்ததாகவும் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.