டாலர் மதிப்பு 26 பைசா உயர்வு!

திங்கள், 21 ஜனவரி 2008 (20:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.

இன்று காலையில் அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.34/36 ஆக இருந்தது. அதற்கு பிறகு 1 டாலர் 39.35 முதல் 39.59 வரை விற்பனையானது. இறுதியில் 1 டாலர் ரூ.39.55/39.56 என்ற நிலையில் முடிவடைந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 26 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.30/39.31 பைசா.

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக டாலர் தேவை அதிகரித்தது. இதனால் தான் ரூபாயின் மதிப்பு குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதே போல் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

யூரோவுக்கு நிகரான மதிப்பு 0.27 பைசா, பவுன்டுக்கு நிகரான மதிப்பு 0.15 பைசா, ஜப்பானின் 100 யென்னுக்கு நிகரான மதிப்பு 76 பைசா குறைந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.38 என நிர்ணயித்தது. இது வெள்ளிக் கிழமை நிர்ணயித்த விலையை விட 11 பைசா குறைவு. வெள்ளிக் கிழமை ரிசர்வ் வங்கி 1 டாலர் மதிப்பு ரூ.39.27 என நிர்ணயித்து இருந்தது.

மற்ற அந்நிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் விவரம்:

1 யூரோ ரூ.57.25/26 (வெள்ளிக் கிழமை ரூ.57.52)
1 பவுன்ட் ரூ.77.07/08 (76.92)
100 யென் ரூ.37.36/37 (36.60/61)

வெப்துனியாவைப் படிக்கவும்