உருக்கு மற்றும் இரும்பு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் ஸ்குரு டிரைவர், ஸ்பானர், டிரில்லிங் பிட் போன்ற கருவிகள் தாயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவு அமைந்துள்ளன. ஹான்ட் டூல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த வகை கருவிகள் தயாரிப்பில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலமே முதல் இடத்தில் உள்ளது.
உருக்கு மற்றும் இரும்பு விலைகள் அதிகரிப்பதால், இந்த தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதால், இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் கூறியுள்ளது.
இந்த கவுன்சிலில் ஹாண்ட் டூல்ஸ் உற்பத்தியாளர்கள் குழுவின் அமைப்பாளராக உள்ள சரத் அகர்வால் கூறியதாவது.
இந்த கருவிகளின் மொத்த உற்பத்தி செலவில் மூலப் பொருளான இரும்பு மற்றும் உருக்கு ஆகியவைகளக்கு 60 முதல் 65 விழுக்காடு வரை செலவாகிறது. இவைகளின் விலை 10 விழுக்காடு அதிகரித்தால், கருவிகளின் விலை 6 விழுக்காடு வரை உயர்கிறது.
கருவிகள் உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களான இரும்பு மற்றும் உருக்கு விலை ஏற்றத்தால் இந்த தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகின்றன.ஜலந்தரில் இருந்து ஏற்றுமதி ஆவதும் குறைந்து விட்டது.
இந்த தொழிற்சாலைகள் நலிவடைவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு இரும்பு மற்றும் உருக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும். இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான செயில், டிஸ்கோ ஆகியவை, இரும்பு, உருக்கு இரண்டையும் தேவையான அளவிற்கு கோபிந்த்கர்க், லூதியானா ஆகிய நகரங்களுக்கு அனுப்ப வேண்டும். இவை தேவையான அளவிற்கு கிடைக்காத காரணத்தினால், இதன் விலைகள் அதிகரிக்கின்றன.
பஞ்சாப் மாநில அரசு இரும்பு, உருக்கு மீது விதிக்கும் 4 விழுக்காடு நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும். மதிப்பு கூட்டு வரிக்கு செலுத்திய முன் பணத்தில், வரி போக மீதமுள்ள தொகை திரும்ப வழங்குவதற்கு, தற்போது ஆறு முதல் 9 மாதங்கள் வரை ஆகின்றது. இவ்வாறு திரும்ப கொடுக்க வேண்டிய வரி கோடிக்கணக்கில் உள்ளது. இதை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்று சரத் அகர்வால் கூறினார்.