காகிதங்களுக்கு இறக்குமதி-உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (11:06 IST)
எல்லா வகையான காகிதங்களுக்கும், அட்டைகளுக்கும் இறக்குமதி வரி, உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று காகித ஆலைகள் கூறியுள்ளன.

மத்திய நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக இந்திய காகித ஆலை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று நிதி அமைச்சரை சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நிதி அமைச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌த்‌திட‌ம் அவ‌ர்க‌ள் கூறுகை‌யி‌ல், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிதி நிலை அறிக்கையில், எல்லா வித காகிதம் மற்றும் அட்டைகளுக்கு வி‌திக்கப்படும் உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். இதற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியையும் குறைக்க வேண்டும். தற்போது காதிதம், அட்டைகளுக்கு 12 விழுக்காடு உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. இதை 8 விழுக்காடாக குறைக்க வேண்டு்ம் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.நாராயண மூர்த்தி கூறுகை‌யி‌ல், கல்வி, இதர துறை தொழில்களுக்கு காகித ஆலைகள் அத்தியாவசியமாக உள்ளது. காகிதம், அட்டைகள் மீது நேரடி மற்றும் மறைமுக வரியாக தற்போது விதிக்கப்படும் 12 விழுக்காடு மதிப்பு கூட்டு வரியையும் சேர்த்து 20 விழுக்காடு வரை வரி விதிக்கப்படுகிறது.

இதில் சில ரகங்களுக்கு எட்டு முதல் 16 விழுக்காடு வரை வரி விதிக்கப்படுகிறது. இவற்றை ஒரே மாதிரியாக மாற்றி 8 விழுக்காடு உற்பத்தி வரி விதித்தால் இந்த துறை வளர்ச்சி அடையும் போது அரசுக்கு ரூ.292 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். இறக்குமதி செய்யப்படும் காகிதங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை 10 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றா‌ர் நாராயணமூ‌ர்‌த்த‌ி.

வெப்துனியாவைப் படிக்கவும்