இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு சாதனை படைத்துள்ளது.
அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு வெளியீடு நேற்று துவங்கியது. இந்நிறுனம் 22 கோடியே 80 லட்சம் பங்குகளை வெளியிடுகிறது. இதற்கு முதல் நாளே சிறு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. நேற்று மட்டும் 242 கோடி பங்குகளுக்கு விண்ணப்பம் வந்து குவிந்தன.
அதாவது ஒதுக்கீடு செய்யப்பட போகும் பங்கை போல் சுமார் 11 மடங்கு. இத்துடன் விண்ணப்பங்கள் வாங்க துவங்கிய சில நிமிடங்களிலேயே, ஒதுக்கப்பட உள்ள அளவை விட, அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தன. நேற்று மட்டும் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.
ரிலையன்ஸ் பவர் பங்குகளில் விண்ணப்பிக்க பணம் செலுத்துவதற்காக பலர், ஏற்கனவே தாங்கள் வைத்துள்ள பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் நேற்று பங்குச் சந்தையில், பல நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. இதனால் சென்செக்ஸ் 477 புள்ளிகள் சரிந்தது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜியின் பங்கு விலையும் குறைந்தது. பலர் இந்த பங்கை விற்று பணமாக்கி, அதை ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு விண்ணப்பித்தனர்.
தகுதி பெற்ற முதலீட்டு நிறுவனங்கள் பிரிவில் 17 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன. அதிக செல்வம் உள்ள தனி நபர் பிரிவில் 7.4 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 1.4 மடங்கு விண்ணப்பங்களும் வந்தன என்று பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
பங்குச் சந்தைக்கு கிடைத்துள்ள புள்ளி விபரப்படி, முதல் நாளான நேற்று மட்டும் 10.64 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் கேட்பு தொகை ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி. ரிலையன்ஸ் பவர் நிர்ணயித்துள்ள ஒரு பங்கின் அதிக பட்ச விலையான ரூ.450 என்ற விலையில் ஒதுக்கீடு செய்யும் படி கேட்டு விண்ணப்பங்கள் வரும் என்று ரிலையன்ஸ் பவர் எதிர்பார்க்கிறது. இந்த விலைக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்தால் ரூ.11 ஆயிரத்து 700 கோடி திரட்ட முடியும்.
ரிலையன்ஸ் பவர் பங்குக்கு உள்ள வரவேற்பு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், இது இந்தியாவின் வளர்ச்சியில் சர்வதேச சமுதாயத்திற்கு உள்ள நம்பிக்கை, இந்திய பொருளாதாரத்தின் மீது எதிர்கால நம்பிக்கையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று கூறினார்.