டாடாவின் மக்கள் கார் நானோ அறிமுகம்!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (11:40 IST)
webdunia photoWD
பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் கார் டாடா நானோவை ரத்தன் டாடா இன்று அறிமுகப்படுத்தினார்.

டெல்லியில் இன்று துவங்கிய ஆட்டோ எஸ்போ என்ற வாகன வர்த்தக கண்காட்சியில் டாடாவின் நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய தொழில் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உலகத்திலேயே மலிவு விலை காரை அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த அளவு மலிவான விலைக்கு காரை தயாரிக்க முடியாது. அப்படியே தயாரித்தாலும் அது பாதுகாப்பானதாகவோ, நீண்ட காலம் உழைக்க கூடியதாகவோ இருக்காது என்று கூறி வந்தன. இந்நிலையில் டாடா நிறுவனம் இன்று மக்கள் கார் என்று அழைக்கப்பட்ட டாடா நானோ ரக காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதை அறிமுகப்படுத்தி ரத்தன் டாடா பேசுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு மலிவு விலை கார் தயாரிப்பு திட்டத்தில் இறங்கினோம். அப்போது ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்துவோம் என்று உறுதி மொழி அளித்தோம். கடந்த நான்கு வருடங்களில் கார் தயாரிக்க தேவையான பல பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் நாங்கள் முன்பு கூறிய உறுதி மொழியின் படி ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று கூறினார்.

இதன் இன்ஜின் திறன் 624 சி.சி. (33 குதிரை திறன்). இது பாதுகாப்பானதாக இருக்காது என்ற வாதத்தை நிராகரித்த ரத்தன் டாடா, காரின் முன்புறம், மற்றும் பக்க வாட்டில் மோதலை ஏற்படுத்திய சோதனையிலும் நானோ பாதுகாப்பானதாக உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது. இது ஈரோ நான்கு மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் படி தயாரிக்கப்பட்டுள்ளது.

மாருதி-800 ரக காருடன் ஒப்பிடுகையில், இதன் அளவு 8 விழுக்காடு சிறியது. அதே நேரத்தில் உள் அளவு 21 விழுக்காடு அதிகம். இதில் நான்கு பேர் வரை பயணம் செய்யலாம். இது பல ரகங்களில் கிடைக்கும். சாதாரண ரகம், குளிர்சாதன வசதியுடன் கூடிய இரண்டு டீலக்ஸ் ரகங்களிலும் கிடைக்கும் என்று கூறினார்.

மூன்று சிலிண்டரில் இயங்கும் பெட்ரோலில் ஓடக்கூடிய நானோ காரில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு நெடுஞ் சாலைகளில் 22 முதல் 26 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். இதில் உள்ள பெட்ரோல் டாங்க் 30 லிட்டர் பெட்ரோல் கொள்ளவு கொண்டது. நான்கு கியர்கள், முன் சக்கரத்தில் டிஸ்க், பின் சக்கரத்தில் டிரக் பிரேக் தொழில் நுட்பத்தில் தயாரிககப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதம் வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விற்பனை விலை ரூ.1 லட்சம். ஆனால் மதிப்பு கூட்டு வரி, தொழிற்சாலையில் இருந்து கொண்டு வர போக்கு வரத்து செலவு, மற்றும் இதர மாநில வரிகள் தனி.

வெப்துனியாவைப் படிக்கவும்