புதுவை சட்டசபையில் வாட் வரி திருத்த மசோதா நிறைவேறியது.
புதுவை சட்டசபையில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த மசோதாவை முதல்வர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார். இந்த திருத்த மசோதாவில் சில பொருட்களுக்கு வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், வாட் வரி விதி முறை அமல் படுத்தியுள்ளதால், மாநிலத்திற்கு பெரிய அளவில் எவ்வித வருவாய் இழப்பும் ஏற்படவில்லை. மிகச் சிறிய அளவே வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையும் கூடுதல் உற்பத்தி வரி விதித்து ஈடு செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டில் வாட் வரி வருவாய் ரூ. 396 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி மூலம், சென்ற வருடத்தைவிட அதிக வரி வசூலாகும்.
முன்பு வாட் வரி, ஒரே சீரான விற்பனை வரியை அமல் படுத்தினால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனர். அது தவறு என நிருபனம் ஆகி விட்டது. அரசு வியாபாரம் பாதிக்காத அளவில், அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இருந்து புகார் வராத வகையில் வாட் வரியை அமல்படுத்தியுள்ளது. வர்த்தக சமுதாயித்தின் மீது புதிய வரி விதிக்காமல், அரசுக்கு அதிகளவு வரி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றோம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சில பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து உள்ளனர். இதை அரசு பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.