ரியல் எஸ்டேட் முதலீடே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு காரணம்: அமைச்சர்!

சனி, 29 டிசம்பர் 2007 (19:33 IST)
ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. இதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. இதன் எதிரொலியாக அதிகளவு தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி, ஜவுளித் துறை, வைரக்கற்கள் பட்டை தீட்டுதல், நகை தயாரிப்பு உட்பட பல்வேறு ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காபி வாரியம் சந்திரகிரி என்ற பெயரில் புதிய அராபிகா காபி வகை செடியை உருவாக்கியுள்ளது. இதை நேற்று பெங்களூருவில் நடந்த விழாவில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிமுகப்படுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அதே போல் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறுகிய கால நோக்கில் பார்த்தால் இந்த தொழில்களுக்கு பாதிப்பே. இவைகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மூன்று முறை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு அந்நிய நேரடி முதலீடு வந்ததே, ரூபாய் மதிப்பு உயர்வுக்கு காரணம். எனவே இந்த துறையின் அந்நிய நேரடி முதலீட்டிற்கு சில வரைமுறைகளை உருவாக்க வேண்டும். இது குறித்து நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் சில விதிமுறைகளை கொண்டுவர ஆலோசித்து வருகின்றன. ரியல் எஸ்டேட் துறையின் அந்நிய நேரடி முதலீட்டை அந்நிய நாடுகளின் முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாமா என ஆலோசித்து வருகின்றன என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்