இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட காலமாக அரசியல் - இராணுவ ரீதியாக நட்புணர்வோடு இருந்த நிலையில் 2007 -ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு ஏறுமுகமாக இருந்தது. லட்சம் கோடி அளவுக்கு (வாய்ப்புகள்) வர்த்தக திறனுடைய ரஷ்யா, இந்திய அரசுகளின் அழைப்புக்கு வர்த்தகத் துறையினர் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இரு நாடுகளிடையே வர்த்தகத்தை 2010 -க்குள் 40,000 கோடியாக உயர்த்த எடுக்க பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய - ரஷ்ய கூட்டு ஆய்வுக் குழுவை நியமிக்க முடிவு செய்தது. அண்மையில் ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன் சிங் கூட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சீனாவுடனான ரஷ்ய வர்த்தகம் 1.40 லட்சம் கோடியாகவும், ஐரோப்பிய கூட்டமைப்புடனான வர்த்தகம் 11.40 லட்சம் கோடியாகவும் உள்ள நிலையில், இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகம் மட்டும் ரூ.16,000 கோடியாக இருப்பதற்கு ஒரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கித் தர மட்டும் தான் உதவும். மேற்கொண்டு அந்த வாய்ப்பை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இரு நாட்டை சேர்ந்த வர்த்தக துறையினரை சார்ந்தது என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பல்வேறு துறைகளிலும் விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்திய பொருட்களை ரஷ்யாவில் சந்தைப் படுத்துவதில் உள்ள மிகப்பெரிய இடையூறு போக்குவரத்து செலவுகள் அதிகமாவதுதான். இதனிடையே இந்திய வர்த்தகர்கள் பட்டைதீட்டப்படாத வைரங்களை இந்தியாவுக்கு நேரிடையாக எடுத்து செல்ல ரஷ்யா அனுமதித்துள்ளது.
பட்டைத் தீட்டப்படாத வைர உற்பத்தியில் உலகில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்தியா வைரம் பட்டைத் தீட்டுவதில் மிகுந்த ஆற்றலைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டைத் தீட்டப்படாத வைரம் இந்தியாவுக்கு அறுக்கவும், பட்டைத் தீட்டவும் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொருளாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2007 ல் பட்டைத் தீட்டுவதில் தொடங்கியுள்ள இந்திய - ரஷ்ய வர்த்தக உறவு மென்மேலும் வளர்ச்சியடைந்து இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்த புத்தாண்டில் வர்த்தகத் துறையினர் மேலும் உழைக்க வேண்டும்.