சிறு தொழில் பிரிவில் உள்ள நிறுவனங்களின் பங்கு பொருட்கள் உற்பத்தியிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் குறையும் என்று அசோசெம் எச்சரித்துள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பான அசோசெம் 2008 ஆண்டில் வளர்ச்சி பெறும் தொழில் துறையும்-சிறு தொழில் பிரிவு வாய்ப்புகளும் என்பது பற்றி ஆய்வு நடத்தியுள்ளது. இதில் அடுத்த வருடம் சிறு தொழில், குறுந்தொழில் பிரிவுகளில் உள்ள தொழிற்சாலைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறு தொழில் பிரிவுகளி்ல் உள்ள தொழிற்சாலைகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த தவறி விட்டன. இவற்றால் இந்த தொழிற்சாலைகள் மற்றவைகளுடன் போட்டியிட முடியாமல் வளர்ச்சியில் பின்தங்கி விடும்.
இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர பிரிவு தொழிற்சாலைகள், அவை உற்பத்தி செய்யும பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றன. அடுத்த ஆண்டும் இதே நிலை தொடரும். இதனால் இந்தியாவில் உள்ள சிறு தொழில்கள் பாதிக்கப்படும்.
இந்த பாதிப்பில் இருந்து சிறு தொழில் துறையை காப்பதற்கு அரசு அதிகபட்சம் 6 முதல் 7 விழுக்காட்டு வட்டியில் கடன் வழங்க வேண்டும்.
இவைகளை நவீனமயமாக்க சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களுக்கும், உற்பத்திக்கு தேவையான மற்ற வகை கருவிகளுக்கும் இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது
இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு அசோசெம் தலைவர் வேணுகோபால் வி.தத் கூறுகையில், சிறு தொழில் பிரிவுகள் நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக, நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் சிறு தொழில் பிரிவுகளின் பங்கு 45, 40, 35 விழுக்காடுகளாக இருந்தது. நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்களில் சிறு தொழில் பிரிவுகளின் பங்கு படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இதற்கு காரணம் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இதன் எண்ணிக்கை 40 லட்சமாக குறைந்து விட்டது. இவற்றில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் 225 லட்சமாக குறைந்து விட்டது. இவை வருடத்திற்கு 12 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
சிறு பிரிவில் உள்ள பல தொழிற்சாலைகளின் வளர்ச்சியும், விரிவாக்கமும் சிறிதளவு முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலையில் உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு உருவாதும் தடைபட்டு விட்டது. இதற்கு காரணம் கடன் கிடைப்பது சிக்கலாக இருப்பதுடன், வட்டியும் அதிகளவு உள்ளது.
இதே நிலை நீடித்தால் சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற்சாலைகள், மற்றவைகளுடன் போட்டியிட முடியாது. இவை போட்டியிட வேண்டுமெனில் நவீன மயமாக்க வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை பயன படுத்த வேண்டும் என்று கூறினார்.