தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தரச் சான்று கட்டாயமாக பெற வேண்டும் என்பதற்கு தங்க நகை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெம் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பில் நாடு முழுவதும் உள்ள தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்திய தர நிர்ணய அமைப்பு விதிகளின் படி தங்க நகைகளின் தரத்தை நிர்ணயிக்க ஹால்மார்க் எனப்படும் தர நிர்ணய முத்திரையை பதிக்க வேண்டும் என கூறியுள்ளது. தங்க நகைகள் 24 காரட். 22 காரட், 18 காரட் என, அதன் தரத்திற்கு ஏற்ப ஹால்மார்க் முத்திரை ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்டு இருக்கும்.
23 காரட் தங்க நகை என்றால் ஹால் மார்க் முத்திரையுடன் 958 என்ற எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். 22 காரட்டிற்து-916, 21 காரட்டிற்கு 875, 18 காரட்டிற்கு 750, 14 காரட்டிற்கு 585, 9 காரட்டிற்கு 375 ஆகிய எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இநத ஹால்மார்க் தர முத்திரையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு ஜெம் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் வர்த்த பிரிவு தலைவர் ஆனந்த பத்பநாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையை பதிப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இதை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கலை அரசு புரிந்து கொள்ளமல், கட்டாயமாக கடை பிடிக்க வேண்டும் என்பதால் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.
இந்த ஹால்மார்க் விதிகளின் படி நகை வியாபாரிகளும் கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என்று கூறுகிறது. இது நகை வர்த்தகத்திற்கு மட்டும் கட்டாயமாக்க படுகிறது. இதனால் உரிமம் பெற மீண்டும் அதிகார வர்த்தகத்திடம் மண்டியிடும் போக்கு ஏற்படும். இது தங்க நகை வர்த்தகத்தை 20 ஆண்டுகள் கட்டுப்படுத்திய தங்க கட்டுப்பாட்டு சட்ட காலகட்டத்தை நினைவு படுத்துகிறது.
இந்த ஹால்மார்க் சட்டத்தின் படி 5 கிராம் எடைக்கு குறைவாக உள்ள நகைகளிலும் இந்த முத்திரை பதிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இவை போன்ற குறைந்த எடை உள்ள நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கு கூட இடம் இருக்காது.
ஹால்மார்க் சட்டத்தின் படி விதிக்கப்படும் அபராதம், உரிமம் ரத்து போன்றவை லஞ்சத்தையே அதிகப்படுத்தும். ஹால் மார்க் தர நிர்ணய முத்திரை கொடுப்பதற்கான கட்டமைப்பு போதிய அளவில் இல்லை. இந்த தர நிர்ணய முத்திரை கொடுப்பதற்கு நான்கு பெருநகரங்களில் 500 மையங்கள் வேண்டும். ஆனால் 25 மையங்களே உள்ளன.
எனவே எங்கள் அமைப்பு கட்டாயமாக உரிமம் பெற வேண்டும் என்பதையும் நீக்கும்படி கேட்கின்றோம். அத்துடன் தர நிர்ணய முத்திரை கொடுப்பதற்கான தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த முத்திரையை கட்டாயமாக பதிக்க வேண்டும் என்பதற்கு விதி விலக்கு அளித்துள்ளவைகள் பற்றி தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று கூறினார்.