எல்.அண்ட்.டி.க்கு மும்பை பெருநகர வளர்ச்சி ஒப்பந்தம்!

புதன், 19 டிசம்பர் 2007 (18:13 IST)
இந்தியாவின் முன்னணி பொறியியல் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ (எல்.அண்ட் டி.) மும்பையில் சாலை கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.287 கோடியே 37 இலட்சம்.

இதற்கான ஒப்பந்தத்தை மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி குழுமத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதன்படி மேற்கு விரைவுச் சாலையில் இருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு விரைவு சாலை அமைக்க வேண்டும். இந்த நிறுவனமே இதற்கான வடிவமைப்பையும் செய்யும். இந்த சாலை தரையில் இருந்து மேலே அமைந்திருக்கும். இது ஆறு வாகனங்கள் போகும் வகையில் 1,850 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும்.

இதில் ஆட்கள் நடந்து செல்ல நடை மேடை, வாகனங்கள் செல்வதற்கான சுரங்க பாதை, மீண்டும் மேற்கு விரைவு சாலையில் இணையும் சாலை அமைக்கப்படும். மொத்தமுள்ள 1,850 மீட்டர் சாலையில் 1,150 மீட்டர் தரைக்கு மேலும், 165 மீட்டர் சுரங்க பாதையிலும் அமைந்திருக்கும். இந்த பணி 30 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று எல்.அண்ட் டி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்