அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி : இந்தியாவுக்கு வாய்ப்பு!

சனி, 15 டிசம்பர் 2007 (16:21 IST)
அமெரிக்க பொருளாதார பாதிப்பால், இந்திய நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக நியோ.ஐ.டி. நிறுவனம் கூறியுள்ளது.

நியோ.ஐ.டி. என்ற நிறுவனம் சர்வதேச அளவில் தகவல் தொழில் நுட்பம், மனித வள மேம்பாடு, நிதி, வரவு-செலவு கணக்கீடு, நிர்வாகம், வாடிக்கையாளர் தொடர்பு, இயந்திரவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் அடுத்த ஆண்டுக்கான தேவை பற்றிய ஆய்வை மேற் கொண்டது.

இந்த ஆய்வில் இருந்து அமெரிக்க பொருளாதார சரிவால் பார்ச்சூன் 1,000 நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். இவை தங்களின் பணிகளை வெளிநாடுகளில் செய்ய முயற்சிக்கும். இதனால் சர்வதேச அளவில் பல்வேறு சேவைத் துறையின் தேவைகள் அதிகரிக்கும். ஆனால் இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்பை சேவை வழங்கும் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

டாலரின் மதிப்பு குறைந்து வருவதாலும், இந்தியாவில் ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுவதால், இது இந்திய நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களின் இலாபம் குறையும். இதனால் இந்த நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கும் படி கேட்கும்.

இந்தியா அந்நிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுக்க பொருத்தமான நாடாக இருக்கிறது. இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சேவை பணிகளை செய்து கொடுக்க முடியும். இதற்கு இரண்டு தரப்பிற்கும் பல்வேறு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பெரிய நகரங்களில் மட்டுமல்லாது, இரண்டாம் நிலை நகரங்களில் நிறுவனங்களுக்கும் சிறந்த வாய்ப்பு உள்ளது. இதே போல் லத்தீன் அமெரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அயலக நிர்வாக பணிகளை செய்து கொடுப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதே போல் கனடா, பிரேசில், சிலி, கோஸ்டா ரிகா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.

அயலக நிர்வாகப் பணிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் அவைகளின் வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப் படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் நிபந்தனைகளை ஒரே மாதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை பணிகளுக்கு அதிகளவு வாய்ப்பு இருக்கும். இதற்கு அடுத்தாற்போல் இயந்திரவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைக்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்