உ.பி.யில் புத்தாண்டு முதல் வாட் வரி!

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (12:04 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் புத்தாண்டு முதல் வாட் வரியை அமல்படுத்ததுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில விற்பனை வரி, மத்திய விற்பனை வரிக்கு பதிலாக வாட் என அழைக்கப்படும் மதிப்பு கூட்டு வரி நாடு முழுவதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக மேற்கு வங்க நிதி அமைச்சர் அசிம் தாஸ் குப்தா தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி மாநிலங்களில் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

வாட் வரி இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட வில்லை. வியாபாரிகளின் எதிர்ப்பாலும் அரசியல் காரணங்களினாலும் அமல் படுத்தப்படாமல் இருந்தது. இதனை இந்த டிசம்பர் மாதம் 1 ஆ‌ம் தேதி முதல் அமல் படுத்தப்படும் என்று மாயாவதியின் தலைமையிலான உ.பி அரசு நவம்பர் மாதம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் நடத்தினர்.

வாட் வரியை எதிர்த்து வரும் வியாபாரிகள் சங்கத்தினர் வருடத்திற்கு ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கு மட்டும் வாட் வரி அமல் செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து வாட் வரியை அம‌ல்படுத்துவது என மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வருடத்திற்கு ரூ.5 லசட்சத்திற்கும் அதிகமாக வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் வாட் வரி விதிப்பு முறையின் கீழ் வருவார்கள்.

உத்தரபிரதேச மதிப்பு கூட்டு வரி மசோதா-2007 என்ற சட்ட திருத்ததில் குடியரசுத் தலைவர் கையொப்பம் இடாத காரணத்தினால், டிசம்பர் 1ஆ‌ம் தேதி வாட் வரியை மாநில அரசால் அமல்படுத்த முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்