டெல்லியில் பேப்பரெக்ஸ் -2007 கண்காட்சி!
சனி, 8 டிசம்பர் 2007 (14:46 IST)
காகிதக் கூழ், காகிதம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி துறையின் கண்காட்சி தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.
தலைநகர் டெல்லியில் துவங்கியுள்ள ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய கண்காட்சியான பேப்பரெக்ஸ்-2007ல் 25 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 380 நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. இந்த கண்காட்சி இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கடந்த 1993 -ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருவதாக டேஃப்கான் அமைப்பின் தலைவர் எம்.எல்.வாத்வா கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் இந்திய காகிதத் துறை பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. காகிதம் பயன்படுத்தும் விகிதமும் 8 விழுக்காடு அளவிற்க்கு அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டு காகிதம் பயன்படுத்தப்படும் அளவு 8.3 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரைவான வளர்ச்சியை எதிர்கொள்ள இத்துறையிக்கு அதிகப்படியான நிதி, உள்கட்டமைப்புத் தேவைப்படுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக எம்.எல்.வாத்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய உற்பத்தி திறன் 8 மில்லியன் டன்கள் என்றும், மின்சாரம், உள்நாட்டு வரி ஆகியவற்றைக் குறைப்பதுடன் மூலப் பொருட்கள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையில் காகிதத் துறை போட்டியை எதிர்கொள்ளவும், இலக்கை எட்டவும் இயலும் என்று வாத்வா கூறினார்.
உற்பத்திச் செலவு அதிகரிக்கும் நிலையில் போட்டியிட இயலாத நிலை உருவாவதாகவும், இப்பிரச்சனை மிகவும் முக்கியமானது. எனவே இதற்கு உடனடியாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்றார். உள்நாட்டு வரி இன்னும் 12 விழுக்காடு அளவிலேயே இருப்பதால் புதிதாக யாரும் இத்துறையில் முதலீடு செய்ய வராததும் காகிதத் துறையின் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் வாத்வா தெரிவித்தார்.
அதிக உள்நாட்டு வரிசெலுத்தி காகித கூழ் இறக்குமதி செய்வதுடன், போக்குவரத்துக்கு ஆகும் செலவுகளும் இத்துறையினரை போட்டியிட இயலாதபடிச் செய்துவிடுவதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாட்டின் பேப்பர் உற்பத்திக்கு வேளாண் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களும், மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பர்களும் 71 விழுக்காடு அளவுக்கு பயன்படுத்தப் பட்டு வருவதாகவும் எம்.எல்.வாத்வா கூறினார்.