நடமாடும் ஏ.டி.எம்.!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (18:41 IST)
இந்தியன் வங்கி நடமாடும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களை (ஏ.டி.எம்.) அமைக்கிறது.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி இணையத்தின் மூலம் ரயில் டிக்கட் வழங்குதல், நடமாடும் ஏ.டி.எம்.களை அமைப்பதற்கு என்.சி.ஆர். கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் நடமாடும் ஏ.டி.எம். இயந்திரங்களை வடிமைத்து, வங்கி கூறும் இடங்களில் அமைத்துக் கொடுக்கும்.

இந்த நடமாடும் ஏ.டி.எம். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்படும். இதே போல் நாடு முழுவதும் 500 இடங்களில் அமைக்கப்படும்.

இதுவரை வங்கி சேவையே எட்டிப்பார்க்காத கிராமங்களுக்கு வங்கி வசதி ஏற்படுத்தி தரவும், லட்சக்கணக்கான ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் வங்கி குறிப்பிடும் 156 இடத்தில் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் நடமாடும் ஏ.டி.எம்.களை அமைக்கும். இதில் 51 ஏ.டி.எம். ரயில் நிலையங்களில் அமைக்கப்படும்.

இந்த முயற்சிகள் பற்றி இந்தியன் வங்கியின் சேர்மனும், செயல் இயக்குநருமான எம்.எஸ்.சுந்தரராஜன் தெரிவிக்கையில், இந்தியாவில் வங்கித் துறையில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதில், நாங்கள்தான் தொடங்கி வைப்பவர்களாக இருந்துள்ளோம். மற்றொரு புதிய முயற்சியாக ரயில் நிலையங்களில் நவீன ஈ-டிக்கட், நடமாடும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க போகின்றோம் என்றார்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரு இடத்தில் இருந்து எளிதாக மற்றொரு இடத்திற்கு மாற்றும் வசதியுள்ள நடமாடும் ஏ.டி.எம். இந்தியா போன்ற நாட்டில் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக இநத வங்கி தேர்ந்தெடுத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த துறையின் தொழில் நுட்பத்தை வடிவமைப்பதில் என்.சி.ஆர். கார்ப்பரேஷன் தனிச் சிறப்பு பெற்ற நிறுவனம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்