இந்தியா-மலேசியா வர்த்தக ஒப்பந்தம்!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (13:13 IST)
இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று மலேசியாவின் சர்வதேச வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் டடுக் செரி ரபிதாக் அஜீஸ் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் மலேசிய சர்வதேச வர்த்தகம், தொழில் துறை அமைச்சகத்துக்கும், தனியார் துறை‌க்கு‌ம் நே‌ற்று நட‌ந்த விருந்து கூட்டத்தில் ரபிதாக் அஜிஸ் சிறப்புரயாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமைச்சரவை இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும் விஷயங்கள் பற்றிய ஒப்புதல் அளித்தது. சரக்கு, சேவை துறைகள், முதலீடு, பொருளாதார கூட்டு முதலியவைகளில் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளின் கூட்டு நடவடிக்கை குழுவின் முடிவுகள் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் 2012 ஆம் ஆண்டில் மலேசியாவின் ஏற்றுமதி இப்போது உள்ள அளவை விட 1.3 மடங்கு அதிகரிக்கும். இதன் அளவு 11.85 பில்லியன் ( 1 பில்லியன் நூறு கோடி.) அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அதிகரிக்கும். இதே போல் இந்தியா, மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்வது தற்போதுள்ள அளவை விட இரண்டரை மடங்காக அதிகரிக்கும். இதன் மதிப்பு 4.63 பில்லியன் டாலர் மதிப்பிற்கு அதிகரிக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொழில் நுட்பம் குறிப்பாக மென்பொருள் வடிவமைப்பு, உயிரி தொழில் நுட்பம், கல்வி, சுற்றுலா, சரக்கு போக்குவரத்து, மனித வள மேம்பாடு, மருத்துவம், மருந்து உற்பத்தி, கூட்டுறவு நிறுவனங்கள், எரிசக்தி, சிறு ம‌ற்று‌ம் மத்திய தர தொழில்கள், விவசாயம், அறிவு சார் சொத்துரிமை உட்பட 13 துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வாய்ப்பு உண்டு.

தற்போது மலேசியா அமெரிக்கா, ஆஸ்‌ட்ரேலியா, நியூ‌சீலாந்து, சிலி ஆகிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்று ரபிதாக் அஜீஸ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்