பாமாயில் இறக்குமதி மீண்டும் தடை

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (15:25 IST)
கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்ய கேரள மாநில உயர்நீதி மன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் சுமார் 90 லட்சம் தென்னை விவசாயிகள் உள்ளனர். இந்த மாநிலத்தில் தென்னையில் இருந்து கிடைக்கும் கொப்பரை தேங்காயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணையே சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

சமீப காலமாக மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுக‌ளி‌ல் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதால், தேங்காய் எண்ணெயின் உபயோகம் குறைந்தது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதரங்களை காப்பதற்காக அந்நிய நாட்டு வர்த்தக இயக்குநரகம் கொச்சி துறைமுகத்தில் பாமாயிலை இறக்குமதி செய்வற்கு தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து பாரிசன் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு அக்டோபர் 20 ந் தேதி நீதிபதி எஸ்.ஸ்ரீஜெகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உ.யர் நீதி மன்றம், கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பிறப்பித்த தடை‌க்கு இடை‌க்கால உ‌த்தரவு ‌பி‌ற‌ப்‌பி‌த்தது.

இதனால் கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் சூழ்நிலை உருவானது.

இந்த தடை ‌மீதான இடை‌க்கால உ‌த்தர‌வை நீக்க கோரி கடந்த 13 ந் தேதி கேரள உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பரமேஷ்வரன் நாயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், கேரள மாநிலத்தில் 90 லட்சம் தென்னை விவசாயிகள் உள்ளனர். இந்த மாநிலத்தின் விவசாய பொருளாதாரமும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும் கொப்பரை தேங்காயின் விலையின் அடிப்படையிலேயே உள்ளது.

இவர்களின் நலனை காப்பதற்காக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திற்கு வெளிநாட்டு வர்த்தகத்தின் ( மேம்டுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் ) 3 ம் பிரிவின் படி ( 5 ம் பிரிவு இணைந்து ) தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதற்கு அதிகாரம் உள்ளது. எனவே தடை ‌மீது நீதிமன்றம் விதித்துள்ள இடை‌க்கால உ‌த்தரவை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை முன்பு விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீஜெகன், முதல்வர் அச்சுதானந்தன் இந்த வழக்கு பற்றி விரும்ப‌த்தகாத கருத்து‌க்களை தெரிவித்ததாக கூறி வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.

எனவே உயர்நீதி மன்றத்தின் மற்றொரு நீதிபதி தோட்டகில் பி.ராதாகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்நிய நாட்டு வர்த்தக இயக்குநகரின் உத்தரவுக்கு விதித்த தடையை நீக்கி, மறு உத்தரவு வரும் வரை, கொச்சி துறைமுகத்தில் பாமாயில் இறக்குமதி செய்ய தடை விதித்தார். இதன் விசாரணையை 21 ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்