இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி!

Webdunia

வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:03 IST)
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

சிறிலங்க அதிபர் மகேந்திர ராஜபக்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அரசு 6,000 டன் அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவு உயர்ந்துள்ளதால், அந்நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து விட்டது. உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, இலங்கை அரசு இறக்குமதியாளர்களை, வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்தது.

தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஏற்றுமதி செய்ய சன்னரக பொன்னி அரிசி இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. சென்ற மாதம் மத்திய அரசு பாசுமதி அல்லாத மற்ற சன்ன ரக அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்து.

இதனால் இந்த துறைமுகங்களில் பொன்னி ரக அரிசி ஏறறுமதி செய்யப்படவில்லை. இப்போது இரண்டு துறைமுகங்களிலும் இருப்பில் உள்ள 6,000 டன் பொன்னி ரக அரிசி இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும். இது இலங்கைக்கு அடுத்த வாரம் வந்து சேரும் என்று இலங்கை இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது பற்றி இலங்கையின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வர்த்தக சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஹெமகா பெர்னான்டோ கூறுகையில்,

அதிபர் ராஜபக்ச ராஜீய துறையின் மூலம் இந்திய அரசுடன் நடத்திய ஆலோசனையினால், இந்திய அரசு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் ராஜபக்ச, இலங்கையின் அரிசி ஆலை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வெளிநாடுகளில் இருந்து 75 ஆயிரம் டன் அரிசி இறக்குமதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்போது இலங்கை அரசு இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 1 கிலோவுக்கு ரூ.20-க்கு இறக்குமதி செய்து வருகிறது. தற்போது விலைவாசி அதிக அளவு உயர்ந்துள்ளதால், அரிசி மீது விதிக்கும் இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 75 ஆயிரம் டன் அரிசி இறக்குமதி செய்துவிட முடியும் என்று இலங்கை அரசு நம்பிக்கையுடன் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்